அம்பிகையின் அருள் நலம் கூட்டும் கதலி கௌரி விரதமும்; ரம்பா திருதியை விரதமும்!

கதலி கௌரி விரதம்; ரம்பா திருதியை விரதம் (29.05.2025)
Viratha Poojai
Viratha Poojai
Published on

குடும்ப ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில் ஒன்று கதலி கௌரி விரதம். வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தியன்று வரும் கதலி கௌரி விரதத்தை, பலர் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர். இந்த விரதம் நாளை 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் குறித்த சில விஷயங்களை இப்பதிவில் காண்போம்.

வாழை மரத்தடியில் அல்லது  வீட்டு ஸ்வாமி அறையில் கோலமிட்ட பலகை மீது வாழை இலையை போட்டு அதன் மீது சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து இருக்கும் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். அருகே குத்து விளக்கினை ஏற்றி வைக்கவேண்டும். படம் மற்றும் குத்து விளக்கினை அலங்கரித்து, பூக்களால் அர்ச்சித்து, விரத பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஒரு தட்டில் நிவேதனம் செய்ய, 108 கதலி அல்லது ஏதாவது வாழைப்பழங்களை வைத்துக் கொள்வது அவசியம். பூஜை முடிந்த பிறகு, கதலி வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டிய பின் அப்பழங்களை எட்டு வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு சாப்பிட அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், கணவன் - மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்குமென்றும், வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இம்மையிலும் மறுமையிலும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும் கோ தானம்!
Viratha Poojai

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்து கதலி கௌரி பூஜை செய்வது சிறந்தது. ஒருவேளை, கணவன் வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தால், மனைவி மட்டும் விரத பூஜையை செய்யலாம்.  கதலி கௌரி விரத பூஜை செய்ய, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரமாகும்.

தேபோல், வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களின் வரும் வளர்பிறை சதுர்த்தியில் (நாளை) வரும் ரம்பா திருதியை விரதம் விசேஷமானதாகும். அழகு மற்றும் செல்வத்தை அளிக்கும். அம்பிகையின் நிறம் பொன் என்பதால், பெண்கள் மஞ்சள் பொன்னால் அம்பிகையை பிரதிபலித்து செய்யும் விரத பூஜை,  ரம்பா திருதியை விரதம் ஆகும்.

வரலெட்சுமி விரத நோன்பு போல, மண்டபம் அமைத்து, வாழைக்கன்று கட்டி, கலசம் வைத்து, துர்கா, லெஷ்மி, சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து, பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். அம்பிகைக்கு வெல்லத்தினால் செய்த நிவேதனம் படைப்பது விசேஷம்.

ரம்பா திருதியைப்பற்றி  கூறப்படும் புராணக்கதை சுவாரசியமானதாகும். ஒரு சமயம், தேவலோக அப்சரஸ்களாகிய ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரிடையே யார் பேரழகி மற்றும் யார் நடனத்தில் சிறந்தவர் என்ற சர்ச்சை எழ, தேவேந்திரனிடம் சென்று முடிவு கேட்டனர். தேவேந்திரனோ, மூன்று பேரும் ஆடுங்கள். நான் நடுவராக இருந்து தீர்ப்பளிக்கிறேன் என்றவுடன், மூவரும் சிறப்பாக ஆடினர். இந்திரனின் கவனத்தைக் கவர வேண்டுமென்று, ரம்பா அரங்கமே அதிரும் வண்ணம் ஆடுகையில், நளினம் குறைந்து ரம்பாவின் நெற்றிப்பொட்டும், சந்திரப் பிரபையும் கீழே விழுந்தன. இதைக் கண்டு ஊர்வசியும், மேனகையும் சிரிக்க, ரம்பா அவமானப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

இதையும் படியுங்கள்:
தொற்று நோய்களை குணப்படுத்தும் பாடகம் தூதஹரி பெருமாள்!
Viratha Poojai

கலையை அவமதித்த ரம்பா மீது, கலைவாணி கோபமடைந்ததால், ரம்பாவின் அழகும், கலையும் அவளை விட்டு நீங்கின. இதற்கு பிராயச்சித்தம் என்னவென்று ரம்பா, இந்திரனிடம் கேட்க, "பூலோகத்தில் பார்வதி தேவி கௌரி அன்னையாக அவதரித்து, ஒரு மகிழ மரத்தடியில் தவமிருக்கிறாள். அவளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால், அவளின் அருள் கிடைக்கும். உன் குறைகள் நீங்கும்" என்றார்.

இந்திரன் கூறியவாறே, ரம்பாவும் மிகவும் சிரத்தையுடன் அந்த விரதமிருந்து கௌரி தேவியை வழிபட, பார்வதி தேவியின் அருள் மற்றும் அழகும், கலையும் திரும்பக் கிடைத்தது ரம்பாவிற்கு.

ரம்பாவின் விரதத்தால் ஈர்க்கப்பட்ட கௌரி தேவி, ‘‘ரம்பா திருதியை அன்று விரதமிருந்து வழிபடும் பெண்களின் திறமையும் அழகும் மென்மேலும் வளரும். செல்வம் பெருகும்" என்று ரம்பாவிற்கு அருள்பாலித்தாள்.

இத்தனை பெருமைகள் கொண்ட ‘கதலி கௌரி விரதம்’ மற்றும் ‘ரம்பா திருதியை விரதம்’  போன்றவற்றை மேற்கொண்டு, பார்வதி தேவியை மனதார  வணங்கி வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com