நச்சுனு நாலு குட்டிக் கதைகள்!

வாழ்க்கையின் நிதர்சன உண்மைகளைச் சொல்லும் 4 சுவாரஸ்யமான ஆன்மீகக் கதைகள்
ஆன்மீக கதை
ஆன்மீக கதைAI Image
Deepam strip
Deepam strip

1. பகவானையே ஏமாற்றிய விவசாயி!

ஆன்மீக கதை | Farmer and lord vishnu
ஆன்மீக கதை | Farmer and lord vishnuAI Image

ஒரு கிராமத்தில் ஒரு பழக்கம் இருந்தது. உடல் ஊனமுற்றோர், முதியோர், கர்ப்பஸ்தீரிகள் தவிர்த்து மீதி யாராகயிருந்தாலும் உழைத்தால் தான் உணவு. ஒரு நாள் சாமியார் ஒருவர் அங்கே வந்து பிட்சை கேட்கிறார். அவர்களது கொள்கை காரணமாக அவருக்கு உணவளிக்க மறுத்து விடுகின்றனர் கிராம மக்கள். கோபங்கொண்ட சாமியார் நேரே அந்த ஊர் பெருமாள் கோவிலுக்குப் போகிறார்.

"எனக்கு உணவு கொடுக்காத இந்த ஊரில் நீ பன்னிரண்டு வருஷங்களுக்கு சங்கு ஊதக்கூடாது!" என்று கட்டளையிட்டுவிட்டு சென்று விடுகிறார். அந்த ஊரில் பெருமாள் சங்கு ஊதினால் தான் மழை பெய்யும். தன்னுடைய பக்தனின் உத்திரவுக்குக் கட்டுப்பட்டு பெருமாள் சங்கு ஊதாமல் இருந்து விடுகிறார். ஊரில் மழையேயில்லை. விவசாயமே நின்று விடுகிறது. ஆனால் ஒரே ஒரு விவசாயி மட்டும் வருடம் ஒரு தடவை தன் நிலத்தில் கலப்பை வைத்து உழுவதை வழக்கமாகச் செய்கிறான்.

எல்லோரும் "ஏன்?" என்று ஆச்சரியமாகக் கேட்கும்போது, "எனக்கு என்னுடைய உழவு வேலை மறக்காமல் இருக்கணும்னு இதை செய்கிறேன். பெருமாள் தான் ஊதாமல், சங்கு ஊதுவதையே மறந்து விட்டாரே?" என்று கேலியாகச் சொல்ல, ரோஷமடைந்த பெருமாள் உடனே சங்கை எடுத்து ஊத ஊரில் மழை பெய்கிறது. பக்தனையும் த்ருப்தி படுத்தணும், அதே சமயத்தில் ஊர் ஜனங்களையும் காப்பற்றணும். அதனால் பகவான் விவசாயியிடம் தோற்று விட்டதாக ஒப்புக்கொள்கிறார். அதாவது மக்களைக் காப்பாற்ற, தான் ஏமாந்தவனாகக் கருதப்படுவதை பகவான் பொருட்படுத்தவில்லை.

2. சரணாகதி தத்துவம்!

ஆன்மீக கதை | Krishna and Arjuna
ஆன்மீக கதை | Krishna and ArjunaAI Image

மஹாபாரத யுத்தத்தில் அர்ஜூனன் மேல் நாராயண அஸ்திரம் ஏவப்படுகிறது. அவன் உடனே கவலையடைந்து கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா! இதற்கு மாற்று அஸ்திரம் எனக்கு துரோணாச்சாரியார் கற்றுத் தரவேயில்லையே?" என்று கேட்க, கிருஷ்ணன் கோபத்துடன், "துரோணாச்சாரியாரும் உனக்கு சரியாகக் கற்பிக்கவில்லை. நீயும் எதையும் சரியாகக் கற்றுக் கொள்ளவில்லை" என்கிறான்.

"தேரிலிருந்து கீழே இறங்கி அந்த அஸ்திரத்தை கை கூப்பி வணங்கு!" என்று கிருஷ்ணன் சொல்ல, அர்ஜுனனும் அவ்வாறே செய்கிறான். அந்த அஸ்திரக் கூட்டம் அர்ஜுனன் தலையை ஒருமுறை பிரதட்சிணமாக வந்து அந்த இடத்தை விட்டு நீங்கி விடுகிறது. இதன் மூலம் சரணாகதி தத்துவத்தை கிருஷ்ணர் விளக்குகிறார்.

"பகவானிடம் கோபிப்பதற்கு பதிலாக அவரிடம் இரு கை கூப்பி நமஸ்கரித்து சரணாகதி அடையும் நேரம் பக்தன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பகவானை ஜெயிக்க விடுகிறான். ஆனால் பக்தன் சரணாகதியடைந்ததுமே பகவான் அவனை ரட்சிக்கத் தயராகி விடுவதால், பக்தன் பகவானை ஜெயிக்கச் செய்வது போல தன்னிடம் தோற்றுப் போகவே செய்கிறான்.

3. பாத்திரமறிந்து பிச்சையிடு!

ஆன்மீக கதை | Durvasar and Kunti
ஆன்மீக கதை | Durvasar and KuntiAI Image

குந்தியின் அரண்மனைக்கு துர்வாசர் வந்தபோது சிறுமியான குந்தி அவருக்குப் பணிவிடை செய்கிறாள். துர்வாசரோ கோபிஷ்டர். அவருக்கு அனுசரணையாக மிகுந்த பணிவுடன் நடந்து கொண்ட குந்தியிடம் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்து, "இதை உச்சாடனம் செய்து எந்த தேவனை அழைத்தாலும் உடனே வந்து பிள்ளை வரம் கொடுப்பான்" என்று கூறுகிறார். அறியாப் பருவத்திலுள்ள குந்தி அந்த மந்திரத்தை பரீட்சித்து பார்க்கும் ஆவலுடன் சூரியனைப் பார்த்து உச்சாடனம் செய்ய, நேரே சூரிய தேவன் கீழேயிறங்கி வந்து அவளுடன் இணைய, கர்ணன் பிறக்கிறான். பயந்து போன குந்தி குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டு விடுகிறாள். தன் தாய் தந்தை யாரென்று தெரியாமல் கர்ணன் பட்ட அவமானம் தான் எவ்வளவு? போதிய பக்குவமில்லாத வயது என்று புரிந்து கொள்ளாமல் துர்வாசர் கொடுத்த வரத்தினால் வந்த வினை இது. இதனால் தான் 'பாத்திரமறிந்து பிச்சையிடு!' என்கிற வழக்கு ஏற்பட்டது.

4. தட்சனுக்கும் நற்கதி!

ஆன்மீக கதை | Lord shiva and Lord Vishnu
ஆன்மீக கதை | Lord shiva and Lord Vishnu AI Image

தன் மாமனாராகிய தட்சன் தனக்கு அழைப்பு விடுக்காத போதிலும், பார்வதி தேவியின் கெஞ்சுதலுக்கிரங்கி சிவன் யாகத்துக்குப் போகிறார். அங்கே பெருத்த அவமானத்திற்குள்ளாகி ருத்திர தாண்டவமாடும் சமயத்தில் ஒரு தலை முடி கீழே விழுந்து மிகப் பெரிய அசுரனாக உருவெடுக்கிறது. அந்த அசுரன் தட்சனின் தலையைக் கொய்து விடுகிறான். வேதம் சொல்கிறவர்களை காப்பாற்றுவது விஷ்ணுவின் கடமை. அதனால் சிவனுக்கு 'பிரம்மஹத்தி' தோஷம் வந்து விடக்கூடாதே என்று விஷ்ணு ஒரு ஆட்டின் தலையை தட்சனுக்கு வைத்து விடுகிறார். ருத்ரம் சொல்லும்போது 'ப்ரேயச்சமே' ,`த்ரவிணஞ்சமே', 'த்ருதிச்சமே', `ஸம்விச்சமே' என்று 'மே' 'மே' என்று ஒவ்வொரு வரியும் முடியும். ஆடாக வாழும் தட்சனின் 'மே' 'மே' என்ற குரலும் கூடவே அதில் கலந்து ஒலித்து அவனுக்கும் நல்ல கதி கிடைக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com