இந்து சமயப் புராணங்களின்படி, கேரளாவைத் தோற்றுவித்த பரசுராமர், கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோயில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோயில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோயில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோயில்களை நிறுவியிருக்கிறார். இக்கோயில்கள் ஐந்தும், ஐயப்பனின் ஐந்து பருவங்களுக்கான தோற்றங்களைக் கொண்டதாக இருக்கின்றன.
பிறந்தது முதல் பதினெட்டு வயது வரையிலான குழந்தைப் பருவம், ‘பால்ய பருவம்' எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் தோற்றத்திலான ஐயப்பன் திருத்தலமாகக் குளத்துப்புழா இருக்கிறது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும், கொல்லம் நகரிலிருந்து 59 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் குளத்துப்புழா இருக்கிறது.
இங்கிருக்கும் ஐயப்பனைப் பால சாஸ்தா என்றும், குளத்துப்புழா பாலகன் என்றும் போற்றுகின்றனர். இக்கோயிலில் விஜயதசமி நாளில் ‘வித்யாரம்பம்’ எனப்படும் நிகழ்வில், பள்ளியில் புதிதாகச் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பாலகனான சாஸ்தா நல்ல கல்வியைத் தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், இக்கோயிலில் இருக்கும் யட்சி அம்மன் சன்னதி முன்பாகத் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் எனும் தொன்ம நம்பிக்கையும் இருக்கிறது.
பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள இளமைப் பருவம், 'யௌவன பருவம்' எனப்படுகிறது. இந்தப் பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவு இருக்கிறது. கேரள மாநிலம், கொல்லம் நகரிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவிலும், புனலூர் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு இருக்கிறது. இத்தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன் புஷ்கலாவைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயது வரை குடும்பத்தினருக்கான ‘கிரஹஸ்த பருவம்' எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாக அச்சன்கோவில் அமைந்திருக்கிறது.
கேரள மாநிலம், புனலூர் நகரிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் அச்சன்கோவில் இருக்கிறது. இக்கோயிலில் ஐயப்பன் பூர்ணா, புஷ்கலா ஆகிய இரு தேவியர்களுடன் முழுமையான குடும்பத்தினராக இருக்கிறார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்துப் புகழ் பெற்ற கோயிலாக அச்சன்கோவில் ஐயப்பன் கோயில் இருக்கிறது. சபரிமலை, அச்சன் கோயில் ஆகிய இடங்களில் மட்டுமே பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படுகிறது. அச்சன் கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஐம்பத்தொன்று முதல் எண்பத்தைந்து வயது வரையிலான துறவு நிலை ‘வானப்பிரஸ்தம்' எனப்படுகிறது. இப்பருவத்தை விளக்கும் ஐயப்பன் தலமாகச் சபரிமலை இருக்கிறது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலைக்குச் செல்லப் பம்பை எனுமிடம் வரை பேருந்து வசதிகள் இருக்கின்றன. பம்பையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்லலாம். சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து ஐயப்ப பக்தர்கள் மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.
உலகில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களில், சபரிமலை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணமாக வந்து செல்கின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோயில் பதினெட்டு மலைகளுக்கு இடையே, ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் சராசரியான கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. சபரிமலையில் இருக்கும் ஐயப்பனைப் புனிதப் பயணம் மேற்கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி இல்லாத பேரின்ப நிலை கிடைக்கும் என்பதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
எண்பத்தாறு வயது முதல் ஏகாந்த நிலை எனப்படுகிறது. இதனை விளக்குவதாகக் காந்தமலை இருக்கிறது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சபரிமலையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொன்னம்பல மேடு, பெரியார் தேசியப் பூங்காவின் புலிகள் காப்பகப் பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது.
இங்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தர்களில் பெரும்பான்மையோர், மகரசங்கராந்தி நாளில் பொன்னம்பல மேட்டில் காட்சியளிக்கும் மகர ஜோதியைக் கண்டு வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
ஐயப்ப பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள் பொன்னம்பல மேட்டைக் காந்தமலை என்று அழைப்பதுண்டு. ஆனால், பொன்னம்பல மேடு வேறு, காந்தமலை வேறு என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். சிவபெருமானுக்குக் கைலாய மலை, விஷ்ணுவுக்கு வைகுண்டம் என்றிருப்பது போல் ஐயப்பனுக்குக் காந்தமலை இருக்கிறது என்கின்றனர். அந்தக் காந்தமலையின் மறு தோற்றமாகக் கருதப்படுவதே பொன்னம்பல மேடு என்றும் சொல்கின்றனர்.
பொன்னம்பல மேடு என்றழைக்கப்படும் இவ்விடத்தில் கண்ணுக்குத் தெரியாத பொற்கோயில் ஒன்றிருப்பதாகவும், இங்கு சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனடிப்படையிலேயே, இவ்விடத்திற்குப் பொன்னம்பல மேடு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.
ஐயப்பன் தியானம் செய்வதாகக் கருதப்படும் பொன்னம்பல மேட்டில் கோயிலோ அல்லது சிலையோ இல்லை. சதுர வடிவிலான இரண்டடி உயர மேடை மட்டுமே உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்குப் பூசைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் இறுதி நாளில், காட்டுத் தேவதைகள் மற்றும் தெய்வங்களை அமைதிப்படுத்துவதற்கான குருத்தி எனும் சடங்கு நடத்தப் பெறுகிறது.
மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதத்தில் வரும் மகர சங்கராந்தி எனப்படும் நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் போரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையிலிருந்து இப்பேரொளியினைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் என்று சொல்வதுடன், அப்பேரொளியை மகரஜோதி என்றழைக்கின்றனர்.