'முருகு' என்றால் 'அழகு'. அழகான வெவ்வேறு வடிவம் கொண்டு மலை மீது வீற்றிருக்கும் முருகன் கோவில்கள் சிலவற்றை பற்றி இப்பதிவில் காணலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி. 1200 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு, பின்பு மருது சகோதரர்களால் பல திருப்பணிகள் செய்யப்பட்டது. பெரிய மருதுவுக்கு முதுகில் ஏற்பட்டிருந்த 'ராஜபிளவை' என்னும் கட்டியை முருகனின் திருநீறு குணப்படுத்தியதாக வரலாற்று செய்தி கூறுகிறது. ஒரு சிறிய குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் சாபத்தால் மயிலே மலையாகிப் போனதாகவும், அந்த மலை மீது தான் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் புரிவதாகவும் தலபுராணம் கூறுகிறது. இங்கு ஆறுமுகமும் 12 திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து சண்முகநாதர் என்ற பெயருடன் அருள்கிறார் முருகப்பெருமான்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவிடைக்கழி. மூலவர் திருக்குராத்துடையார், தலவிருட்சம் குரா மரம். 'சோழ நாட்டு திருச்செந்தூர்' என்று போற்றப்படும் இக்கோவிலில் குமரனும், லிங்க வடிவில் சிவபெருமானும் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார். இங்கு மயிலுக்கு பதிலாக யானை வாகனமாக உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பொறையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஓதிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மலைகளில் மிகவும் உயரமானதும், செங்குத்தானதுமாகும். இதன் உயரம் 1000 மீட்டர்கள். மலை உச்சியை அடைய 1870 செங்குத்தான படிகள் உள்ளன. கருவறையில் ஐந்து முகங்கள், எட்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் குமார சுப்பிரமணியர் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார் முருகப்பெருமான். பொதுவாக மூலவர் பீடத்தின் மீது இருப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலின் கருவறையில் உள்ள பாறை மீது எழுந்தருளி உள்ளார். இந்த அமைப்பிற்கு 'திருகு பீடம்' என்று பெயர். அத்துடன் ருத்ராட்ச பந்தல் கீழ் அருள்பாலிப்பது இன்னும் விசேஷம். இம்மலையை ஓதியங்கிரி, ஞானமலை என்றும் அழைக்கிறார்கள். இக்கோவிலில் 'வைகாசி விசாகம்' மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருத்திகை நாளில் முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட திருமண தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் ஊதியூர் மலைமேல் அமைந்துள்ள ஒன்பதாம் நூற்றாண்டு, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடப்பெற்ற முருகன் கோவிலாகும். கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட முருகன் விக்ரகம் இங்குள்ளது. சுல்தான் படையெடுப்பின் போது அது பின்னமடைந்து விட்டாலும் அதனை மகா மண்டபத்தில் வைத்து இன்றும் பூஜை செய்து வருகின்றனர். கோவிலுக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கொங்கண சித்தருக்கு கோவில் உள்ளது.156 படிகளைக் கொண்ட மலைக்கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் கருவறையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் அருளும் உத்தண்ட வேலாயுத சுவாமியை தரிசிக்கலாம். பொன் ஊதிமலை, கொங்கணகிரி, சஞ்சீவி மலை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்றத்தூர். 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவிலிது. இங்கு முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால் முருகன் மட்டுமே தெரியும். சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று பார்த்தால் தான் முருகனை வள்ளி அல்லது தெய்வானையுடன் சேர்ந்து இருக்கும் காட்சியை தரிசிக்க முடியும். இங்குள்ள துவார பாலகர்கள் இருவரும் முருகனைப் போலவே கையில் சூலம், வஜ்ரம் ஏந்தி காட்சி தருக்கின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் அவதரித்த ஊர் இது. இவருக்கு மலையடிவாரத்தில் தனிக் கோவில் உள்ளது. சேக்கிழார் குருபூஜையின் பொழுது முருகன் மலைக்கோவிலிலிருந்து கீழே உள்ள சேக்கிழார் கோவிலுக்கு சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதால் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை சிற்றூரில் அமைந்துள்ளது இக்கோவில். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல் படி முருகன் அருணகிரிநாதரை அரக்கனிடமிருந்து குழந்தை வடிவில் வந்து காப்பாற்றியதாகவும், எனவே இவர் 'குழந்தை வேலப்பர்' என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 3000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. நவபாஷாணத்தாலான பூம்பாறை முருகன் சிலையும், பழனி முருகனும் உருவத்தில் ஒரே மாதிரி காணப்படும். மலைப்பகுதியில் அமைந்துள்ள கோவில்களில் தேர் வீதி உலா நடைபெறுவது இங்கு மட்டுமே நடைபெறுவது சிறப்பு. மற்றொரு சிறப்பு இங்கு முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25,000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடும் நடைபெறுகிறது.