ஸ்ரீவியாஸராய தீர்த்தர் பிரதிஷ்டை செய்த 732 வீர ஆஞ்சநேயர் ஆலயங்கள்!

வீர ஆஞ்சநேயர்...
வீர ஆஞ்சநேயர்...

ஸ்ரீமத்வாச்சாரியரின் த்வைத சம்பிரதாயத்தை பின்பற்றிய ஸ்ரீவியாஸராய தீர்த்தர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராஜகுருவாகத் திகழ்ந்தவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மஹான்.

விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்ரீ கிருஷ்ணதேவர் ஆட்சி செய்தபோது ஒரு சமயம் மன்னருக்கு மரணயோகம் வாய்க்க இருப்பதாக அரண்மணை ஜோதிடர்கள் ஜோதிடக் குறிப்பின் மூலமாகக் கணித்துக் கூறினார்கள். இதைத் தவிர்ப்பதற்காக ஸ்ரீ வியாஸராய தீர்த்தர் ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் அரியணையில் அமர்ந்தார். அப்போது அவரை நோக்கி வந்த தீப்பிழம்பினை தனது காவி வஸ்திரத்தை ஏவி எரித்து சாம்பலாக்கி மன்னரைக் காப்பாற்றினார். பின் அரியணையை ஸ்ரீ கிருஷ்ண தேவராயரிடமே ஒப்படைத்தார். இதன் பின்னர் ஸ்ரீவியாஸராய தீர்த்தர் ஸ்ரீவியாசராஜா என்றும் அழைக்கப்பட்டார்.

ஸ்ரீவியாசராய தீர்த்தர் ஆஞ்சயேரின் தீவிர பக்தர். ஆஞ்சநேயர் வாயுவின் அவதாரமாகக் கருதப்படுபவர். குரு மத்வாச்சார்யாரும் வாயுவின் அவதாரமாவார். எனவே வியாஸராய தீர்த்தர் அனுமன் மேல் மிகுந்த பக்தி கொண்டவராய் இருந்தார்.

ஸ்ரீவியாஸராய தீர்த்தர் தென்னிந்தியா முழுவதும் புனிதபயணம் மேற்கொண்டிருந்த போது தனது ஞானதிருஷ்டியால் புனித இடங்களை அறிந்து அத்தகைய இடங்களில் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறாக தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஸ்ரீவியாசராய தீர்த்தர் ஒரே மாதிரியான 732 அனுமார் விக்ரஹங்களை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர்
ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர்

ஸ்ரீவியாசராய தீர்த்தர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேய ஸ்வாமி ஒரே மாதிரியான அமைப்பில் காட்சி தருவார். ஆஞ்சநேயரின் வலதுகரம் அபய ஹஸ்த நிலையிலும் இடது கரத்தில் சௌகந்திகா மலரினை ஏந்தியும் காட்சி தருவார். வலது புற இடுப்பில் குத்துவாளை வைத்திருப்பார். வாலானது வளைந்து வலதுபுறத்தோள் அருகில் அமைந்து மணியோடு காட்சி தரும். தெற்கு நோக்கி நடப்பதைப் போல காட்சி தரும் ஆஞ்சநேயர் இடதுகாலைத் தூக்கி வைத்த நிலையில் இலங்கைக்குப் புறப்படும் திருக்கோலம். அவரது திருப்பாதங்களில் தண்டை, நூபூரமும் மணிகட்டில் கங்கணமும், புஜத்தில் கேயூரமும் அணிந்திருப்பார். இத்தகைய அமைப்பில் உள்ள ஆஞ்சநேயர் ஸ்ரீவியாஸராய தீர்த்தர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயராவார்.

இதையும் படியுங்கள்:
விண்வெளி ஆராய்ச்சியில் அன்றைய மைல்கல் - இன்றும் தொடர்பில் இருக்கும் அதிசயம்!
வீர ஆஞ்சநேயர்...

ஸ்ரீவியாசராய தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலங்களில் போரூர் ஸ்ரீசிவ வீர ஆஞ்சநேயர் தலம், கிண்டி இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாங்குளம் பகுதியில் எம்.கே.என்.சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயம், திருத்தணியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நல்லாட்டூர் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம், திருவள்ளுரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த காக்களுர் ஆஞ்சநேயர் ஆலயம் முதலானவை ஸ்ரீவியாஸராய தீர்த்தர் பிரதிஷ்டை செய்த சில ஆஞ்சநேயர் ஆலயங்களாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com