ஆன்மீகக் கதை: கேட்டது வரம்.. கிடைத்தது மரணம்!

Bhasmasura and mohini
Bhasmasuran boon Tamil Aanmeega storyCredits: AI Image
Published on
deepam strip
deepam strip

ஸ்மாசுரன் என்ற அசுரன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வாழ்ந்து வந்தான். நாரதர் தேவலோகம் சென்றிருந்த போது தேவர்கள் மனவருத்தத்தில் இருந்ததைக் கண்டு விசாரித்தார்.

“நாரதரே, பஸ்மாசுரன் என்றொரு அசுரன் எங்களைத் துன்புறுத்தி வருகிறான். இதுவே எங்கள் மனவருத்தத்திற்குக் துயரத்திற்குக் காரணம்.”

நாரதப் பெருமான், “பஸ்மாசுரன் பற்றிய உங்கள் கவலைகள் யாவும் விரைவில் தீரும்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டு பஸ்மாசுரன் இருப்பிடத்திற்குச் சென்றார். அவரை அசுரன் மரியாதையோடு வரவேற்றான்.

“என்ன காரணமாய் என்னைப் பார்க்க வந்தீர்கள்?”

“காரணத்தோடு தான் வந்தேன். உனது முன்னோர்கள் அனைவரும் தவமிருந்து பல வரங்களை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அனைவரும் அழிந்து போய் விட்டார்கள்.”

“நீங்கள் சொல்லுவது உண்மைதான்.”

“உனக்காக நான் ஒரு யோசனையோடு வந்திருக்கிறேன். நீ சிவபெருமானை நினைத்து தவமியற்று. அவர் உனக்குக் காட்சியளித்தால் உன் முன்னோர்களைப் போல மரணமற்று வாழ வேண்டும் என்ற வரத்தைக் கேட்காதே...”

இதைக் கேட்ட அசுரன் துணுக்குற்று “பின் வேறு என்ன வரத்தைக் கேட்பது? ” என்று கேட்டான்.

“அப்படிக் கேள். சொல்லுகிறேன். சிவபெருமான் உன்னிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், உன்னால் மற்றவர்களுக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தைக் கேள்.”

இதைக் கேட்ட பஸ்மாசுரன் மகிழ்ச்சி அடைந்தான். “உமது யோசனை நன்றாக உள்ளது. இவ்வரத்தை நான் எப்படிக் கேட்க வேண்டும் என்று சற்று தெளிவாகச் சொல்லுங்களேன் நாரத முனியே!”

“சொல்கிறேன். நீ யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தைக் கேள்.”

இதைக் கேட்ட பஸ்மாசுரன் மிக்க மகிழ்ச்சி அடைந்து புத்துணர்வு பெற்று உடனடியாக தனது தவத்தைத் தொடங்கினான். ஒருநாள் சிவபெருமான் அவன் முன்னே தோன்றி “வேண்டும் வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்” என்று சொன்னார்.

“அய்யனே. நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாக வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம்."

உடனே சிவபெருமான் அசுரன் கேட்ட வரத்தை அளித்தார். அசுரனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது.

“அய்யனே. நீங்கள் கொடுத்த வரம் நிச்சயம் பலிக்குமா?”

“ஏன் சந்தேகப்படுகிறாய் ?”

“இல்லை அய்யனே. நீங்கள் எனக்குக் கொடுத்த வரத்தினை தங்களைக் கொண்டே நான் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்” இப்படிச் சொன்ன அசுரன் சிவபெருமானை நோக்கி கையை நீட்டினான்.

இதை எதிர்பாராத சிவபெருமான் அங்கிருந்து அகன்றார். அசுரனும் விடாமல் அவரைத் துரத்தினான். இதை அறிந்த நாரதர் சிவபெருமானைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். மகாவிஷ்ணுவிடம் சென்று நடந்ததைச் சொல்லி சிவபெருமானைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார்.

மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து பஸ்மாசுரன் முன்னே தோன்றினார். மோகினியைக் கண்ட அசுரன் மனம் மாறினான். மோகினியிடம் பேச்சு கொடுத்தான். “நான் ஒரு தேவலோகத்துப் பெண்” என்று சொன்ன மகாவிஷ்ணு ஒன்றும் தெரியாதவர் போல அவனைப் பற்றி விசாரித்தார்.

“நான் பஸ்மாசுரன் என்னும் அசுரன். சற்று நேரத்திற்கு முன்னால் சிவபெருமானிடம் ஒரு வரத்தை வாங்கியிருக்கிறேன். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர் எரிந்து சாம்பலாகிவிடுவார். வரத்தைக் கொடுத்த சிவபெருமானே என்னைக் கண்டு அஞ்சுகிறார். அடுத்ததாக பிரம்மனையும், மகாவிஷ்ணுவையும் ஒரு கை பார்க்கப் போகிறேன். மும்மூர்த்திகளும் எனக்கு இனி அடக்கம்”

கர்வத்தினால் பஸ்மாசுரன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசினான். “உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று மோகினி கூற “அப்படியானால் என்னை நீ திருமணம் செய்து கொள்ளுவாயா?” என்று பஸ்மாசுரன் மோகினியிடம் கேட்டான்.

“என்னுடன் நீ எனக்கு இணையாக நடனமாட வேண்டும். நான் எப்படி நடனமாடுகிறோனோ நீயும் அப்படியே ஆட வேண்டும். அப்படிச் செய்தால் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளுகிறேன்.” பஸ்மாசுரன் உடனே இதற்குச் சம்மதித்தான்.

இதையும் படியுங்கள்:
ஹனுமானுக்கு கிடைத்த சாபம்! தன் பலம் மறந்த கதை!
Bhasmasura and mohini

மோகினி நடனமாட அவளைப் போலவே பஸ்மாசுரனும் நடனமாடினான். நீண்ட நேரம் நடனம் ஆடிய மோகினி ஒரு கட்டத்தில் தன் கையைத் தன் தலைமீது வைத்து அழுத்தினாள். மோகத்தில் மயங்கி நடனமாடிக் கொண்டிருந்த பஸ்மாசுரன் தானும் தனது கையைத் தன் தலைமீது வைத்து அழுத்தினான். மறுகணமே அவன் எரிந்து சாம்பலானான். நாரதரின் முயற்சியால் பஸ்மாசுரன் எரிந்து சாம்பலாகி அழிந்ததைக் கேட்ட தேவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com