

இராமாயண புராணக் காலகட்டத்தில், சீதையை தேடி இலங்கை செல்ல வானரங்கள் கூட்டமாக சென்று தென்திசை கடலை அடைந்தனர். அது ஒரு நீண்ட அழகிய கடற்கரை; அந்த கடற்கரையில் இருந்து இலங்கை செல்ல வேண்டும். இடையில் பெருங்கடல் ஒன்று அனைவரையும் தடுத்து நிறுத்தியது. கடற்கரையில் அமர்ந்த வானரக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களின் புஜபல பராக்கிரமங்களைப் பற்றிக் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தங்களால் இந்த கடலில் ஒரு காத தூரம் வரை தாண்ட முடியும், இரண்டு காத தூரம் வரை தாண்ட முடியும் என்று பேசினார்கள்.
நீலனும் அங்கதனும் தங்களால் பாதியளவு கடலை தான் தாண்ட முடியும் என்று உரையாடிக் கொண்டிருந்தனர். ஹனுமான் எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு அமைதியாக கடலையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஜாம்பாவன் "ஏ அஞ்சனை மைந்தா, நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? இங்குள்ள அனைவராலும் கடலை தாண்ட இயலாது; இந்தக் கடலை தாண்டும் சக்தி உனக்கு மட்டுமே உள்ளது. எழுந்திரு ஹனுமான்! உன் பலத்தை நினைவுக்கு கொண்டு வா! என்று கூறினார்.
இதைக் கேட்ட மற்ற வானரங்கள் அனைத்தும், "ஆமாம், ஹனுமான் (Hanuman) ஒருவரால் மட்டுமே இந்த கடலை தாண்டி பறக்க முடியும். ஹனுமான் உங்களை சக்தியை நினைவுக் கூறுங்கள்" என்று கத்தி ஆர்பாட்டம் செய்தனர். உடனே, ஹனுமான் தன் பலத்தினை நினைக்க, அவரது சிறிய உருவம் வளர்ந்து கொண்டே வந்து பிரம்மாண்டமாக மாறியது. அங்கிருந்து மேலே எழும்பி ஹனுமான் இலங்கையை நோக்கி பறக்க ஆரம்பித்தார்.
ஹனுமானுக்கு தனது சக்திகள் எதனால் மறந்து போனது?
அஞ்சனைக்கும் கேசரிக்கும் பிறந்த ஆஞ்சநேயர், வாயுபகவானின் மானசீக மைந்தராக இருந்தார். வாயுபகவானுக்கு அஞ்சனை மைந்தன் மீது அதீதப் பற்று இருந்தது. பிறந்ததில் இருந்தே அஞ்சனை மைந்தன், சிவபெருமான் மற்றும் வாயுபகவானின் அருளாசியினால் ஏராளமான சக்திகளை பெற்றிருந்தார். குழந்தை ஹனுமான் (Hanuman) குறும்புத்தனம் மிகுந்தவராக இருந்தார். வனத்தில் அவரது சேட்டைகள் அதிகமாக இருந்தன.
சிறுவயதில் அஞ்சனை மைந்தன் சூரியனை பார்த்து "இந்த பழம் நன்கு பழுத்து விட்டது. இப்போது சாப்பிட்டால் சுவையாக இருக்கும்" என்று சூரியனை நோக்கி பறக்க தொடங்கினார். இந்திரலோகத்தில் தேவர்கள் இந்திரனிடம், "அஞ்சனை மைந்தன் சூரியனை விழுங்கும் முன் காப்பாற்றுங்கள்" என்று கூறினார்கள். உடனடியாக இந்திரன் அஞ்சனை மைந்தன் மீது வஜ்ராயுதத்தை ஏவி தாக்க, அவரோ வாயில் பிளவுபட்டு மயங்கி பூமியில் விழுந்தார். இதனால், கோபமான வாயுதேவன் உடனடியாக தன் பணியினை நிறுத்தினார்.
உலகெங்கும் உயிர்கள் காற்று இல்லாமல் மூச்சு திணற ஆரம்பித்தன. வேறு வழியின்றி இந்திரன் உள்பட மற்ற தேவர்கள் வாயுவை சமாதானம் செய்து, அவரது மானசீக புத்திரனுக்கு நிறைய வரங்களையும், ஹனுமான் (Hanuman) என்ற பெயரையும் வழங்கினர்.
ஹனுமான் பெற்ற சாபம்:
இந்த சம்பவத்திற்கு பின்னரும் ஹனுமானின் குறும்புகள் குறையாமல், வனத்தில் வசிக்கும் ரிஷிகள் மீதும் அதிகரித்தது. தவமிருக்கும் ரிஷிகளை அவரது சேட்டைகள் தொந்தரவு செய்தன. ஒரு கட்டத்தில் கோபமான அவர்கள் "நீ பெரிய சக்திசாலி ஆயினும், உன் வலிமை உனக்கே தெரியாமல் மறந்து விடும். யாராவது உன் பலத்தை பற்றி நியாபகப்படுத்தினால் தான் உனக்கு நினைவுக்கு வரும்" என்று அவருக்கு ஒரு சாபம் கொடுத்தனர்.
ஹனுமான் தன் பலம் மறந்தார். அவரது சேட்டைகள் குறைந்தன. அதன் பின்னர் ஹனுமான் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்தார். ராமரை சந்திந்த பின் முழு ராம பக்தனாகவே மாறி, யுகங்கள் பல முடிந்தாலும், இன்றும் ராமநாமம் ஜெபிக்கும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.