
ஆடி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாகசதுர்த்தி எனப்படும். இந்தியப் பூர்வ குடிகள் அனைவரும் நாகசதுர்த்தி கொண்டாடுகின்றனர். காரணம் நாகதேவன் இந்திய மண்ணின் மக்களின் ஆதி தெய்வம் ஆவான். பிற்காலத்தில் சில பகுதிகளில் நாக வழிபாடு அருகிப் போனாலும், தென்னிந்தியாவில் தொடர்கின்றது.
நாக தோஷம்
ஜோதிடர்கள் நாகதோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் தமிழகத்தில் உள்ள நாக தெய்வக் கோவில்களுக்குச் சென்று வழிபட்டால், அது தோஷம் நீங்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் ராகு, கேதுக்கள் சரியில்லை என்றால் முன்னோர் சாபம் உண்டு.
இவர்கள் நாகர்கோவிலின் நாகராசா கோவில், நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவில், பரமக்குடியில் உள்ள நயினார் கோவில், பிருகனுர் மாதவப்பெருமாள் கோயில், கும்பகோணத்தில் உள்ள நாகநாதர் கோவில், திருநாகேஸ்வரம் போன்ற கோவில்களுக்கு நாகசதுர்த்தி அன்று போய் சிறப்பு பூசைகள் செய்ய வேண்டும். மற்ற கோவில்களில் அரசமரம், வேப்ப மரத்தின் கீழ் உள்ள நாகர் சிலைகளுக்கு தனி பூசைகள் செய்யலாம்.
திருமணத் தடை, வாரிசின்மை
நாக தோஷம் இருந்தால், கரு ஜனித்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் சிதைந்துவிடும். காலசர்ப்ப தோஷம் இருந்தால், வாழ்வின் பாதிநாள் கழியும் வரை திருமணம் நடைபெறாது. ஏறத்தாழ 36 வயதுக்கு பிறகு திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே, திருமணம் மற்றும் குழந்தைப் பேறுக்காக நாக வழிபாடு தொடர்கின்றது.
ஐரோப்பாவில் காவல் தெய்வம்
ஐரோப்பாவிலும் கிறிஸ்தவ சமயத்தின் வரவுக்கு முன்பு நாக வழிபாடு பரவலாக இருந்தது. அங்கு கிறிஸ்தவ சமயம் நாகத்தை சாத்தானின் வடிவம் என்று போதித்து நாக வழிபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு முன்பு ஜெர்மனியில் ஒவ்வொரு வீட்டுக்கும் காவல் தெய்வமாக ஒரு நாகம் இருந்தது. கேரளாவிலும் இந்நடைமுறை இன்றும் உண்டு. இதனை 'மனை நாகம்' என்பர்.
ஊர்த் தெய்வம்
நாகம் வீடுகளுக்கு மட்டுமின்றி ஊருக்கும், நாட்டுக்கும் காவல் தெய்வமாக இருந்துள்ளது. கடம்பவனத்தை அழித்து மதுரை நகரத்தை உருவாக்கிய போது அந்நகரின் நாற்புற எல்லையை சுட்டிக் காட்டியது ஒரு நாகம் என்கின்றது திருவிளையாடல் புராணம். இப்புராணம் வடமொழியில் எழுதப்பட்ட ஹாலாசிய புராணத்தின் மொழிபெயர்ப்பு என்றாலும், அதனால் நாகத்தை விட்டுவிட இயலவில்லை. கதையில் ஒரு நாகம் வட்டமாக படுத்து தன் வாலை தன் வாயில் கவ்வி இருந்தது. அதன் உட்புற எல்லையில் தான் இன்றைய மதுரை நகர் கட்டப்பட்டது.
இதைப் போலவே கிரேக்க நாகரிகத்தின் உச்சமாக விளங்கும் ஏதேன்ஸ் நகரத்தின் எல்லைக் காவலனாகவும் அங்கு ஒரு பாம்பு இருந்தது. நகரத்தின் நாற்புற எல்லையையும் இந்த நாகமே காவல் காத்தது.
புராணக் கதைகள்
வேளாண் குடிப் பெண்கள் தங்கள் பிறந்த வீடும், புகுந்த வீடும் செழிக்க வேண்டி ஆடி, ஆவணி மாதங்களில் நாகத்தை வணங்கினர். இதனால் நாக சதுர்த்திக்குப் பல கதைகள் தோன்றின.
நாகங்கள் தீண்டி தன் சகோதரன் இறந்ததால், நாகராஜனிடம் அவனுக்கு உயிர் பிச்சைக் கேட்டு சகோதரிக்கு இரங்கி நாகராசன் அவள் சகோதரனை உயிர்ப்பித்துக் கொடுத்ததான். எனவே, சகோதர நலம் வேண்டி அன்று முதல் பெண்கள் நாக சதுர்த்தி கொண்டாடுகின்றனர்.
பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து வந்த விஷத்தை சிவபெருமான் விழுங்க அதை பார்வதி தடுத்து விட்டார். எனவே, கணவன் நலம் வேண்டி தாலி பாக்கியத்துக்காக நாகசதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. இது ஒரு கதை.
விவசாயிகளின் நண்பன்
நாகம் என்பது நம்பிக்கை சார்ந்து இறந்து போன முன்னோராகக் போற்றப்பட்டாலும், நலம் சார்ந்து சிந்திக்கும்போது அது விவசாயிகளின் நண்பனாக உள்ளது. பயிர்களின் வேரைக் கடித்துத் தின்னும் வயல் எலிகள் பாம்புகளுக்கு உணவாகும். எனவே, பயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பாம்புகளை வேளாண் குடிமக்கள் தன் தெய்வமாக போற்றுகின்றனர். விவசாய நாடான இந்தியாவில் பாம்புகள் விவசாயத்துக்கு உதவுவதால் மட்டுமே இன்றைக்கும் கடவுளாகப் போற்றப்படுகின்றது.