
சீனாவை பூர்வீகமாகக் கொண்ட கிவி பழம் தற்போது இந்தியாவிலும் நல்ல பிரபலத்தை பெற்று விட்டது. 'சீன நெல்லிக்காய்' என்றழைக்கப்படும் கிவியின் முதல் பிளஸ் பாயிண்ட் அது ஒரு பெர்ரி என்பது தான். இதிலிருந்து புரிந்து இருக்கும் கிவி பழம் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை உள்ளே கொண்டிருக்கும் என்று. 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் வரை கிவி பழம் பற்றி வெளிநாட்டவர்கள் அறிந்ததில்லை.
2 ஆம் உலகப்போரின் போது இது நியூசிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பிரபலமானது. சிறிய உருவில் கோழி முட்டை வடிவில் உள்ள கிவி பழங்கள் இனிப்பு சுவை கொண்டது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன.
தினசரி ஒரு கிவி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடலுக்கு நன்மை தரும் வேதிப் பொருட்கள் நிறைந்துள்ளன.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இது உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
கிவியின் ஆரோக்கிய நன்மைகள்:
1. கிவியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. அதோடு கிவியில் ப்ரீபயாடிக்குகளும் அதிகமாக உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அளவை அதிகரிப்பதால், குடலின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. செரிமான மண்டலம் சுத்தமாகவும் நோயெதிர்ப்பு சக்தியோடும் இருக்க நல்ல பாக்டீரியாக்கள் அவசியம். இதனால் இரைப்பையில் ஏற்படும் அமிலத்தன்மை, வாயுத் தொல்லைகள், நெஞ்செரிச்சல் போன்ற செரிமான கோளாறுகள் சரி செய்யப்படுகிறது.
2. இரண்டு ஆரஞ்சு பழங்களில் உள்ள விட்டமின் சி ஒரு கிவியில் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள் கிவியை உண்ணலாம். உடலில் இரும்பு சக்தியை உறிஞ்ச வைட்டமின் சி தேவை. இது இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஆக்சிஜனை கடத்த உதவுகிறது. கொலாஜனை உருவாக்கி தோல் சுருக்கமின்றி இளமையாக வைத்திருக்கிறது.
3. வைட்டமின் ஈ 7% அளவில் ஒரு கிவி பழத்தில் உள்ளது. இது மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் ஈ யின் அளவாகும். இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதனால் சரும செல்கள் சேதமடைவது குறைந்து, சருமம் எப்போதும் பொலிவோடும், இளமையாகவும் இருக்கும்.
4. பொட்டாசியம் அதிக அளவில் கிவியில் உள்ளது. பொட்டாசியம் உடலில் இரத்த விநியோகத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது. இதயம், சிறுநீரகம், மூளை, தசைகள் ஆகியவை நன்கு செயல்பட பொட்டாசியம் அத்தியாவசிய தேவையாகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் சிறுநீரக கற்கள் ஏற்படாமலும், இதய நோய்கள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
5. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரை அளவை உடனடியாக உயர விடாமல் காப்பதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. கிவியில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை, கண் நரம்பு கோளாறுகளை சரி செய்து பார்வையை மேம்படுத்தும் திறன் கொண்டது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி கண்களில் எரிச்சல், வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைத் தடுக்கிறது. கிவி பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகின்றன. மேலும் புற்றுநோய் வருவதிலிருந்தும் தடுக்கிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)