சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிகழும் அதிசயங்களைப் பற்றி தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. தன் பக்தர்களுக்காக ஐயப்பன் நிகழ்த்தும் எண்ணற்ற திருவிளையாடல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு அதிசய நிகழ்வைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்தில் ஒருமுறை வரும் மகரஜோதி நாளையொட்டி பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு ஐயப்பனுக்காக திருவாபரணப்பெட்டி புறப்படும். அப்படி திருவாபரணப்பெட்டி புறப்படும்போது வானத்தில் கருடன் வட்டமிடும். இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இது ஏன் என்று தெரியுமா?
சுவாமி ஐயப்பன் சபரிமலைக்கு தவம் செய்வதற்காக கிளம்புகிறார். அப்போது பந்தள மகாராஜா சுவாமி ஐயப்பனிடம் கேட்கிறார், ‘ஐயப்பா! உன்னை பார்க்க நான் எப்படி இந்தக் காட்டுக்குள் வருவது’ என்று வருத்தத்துடன் கேட்கிறார். அதற்கு சுவாமி ஐயப்பனோ, ‘நீங்கள் என்னை காண வரும்போதெல்லாம் வானத்தில் கருடன் வந்து வழிக்காட்டும்’ என்று சொல்லிவிட்டு சபரிமலைக்கு தவம் செய்யப்போகிறார்.
அன்றிலிருந்து பந்தள மகாராஜா சுவாமி ஐயப்பனை பார்க்க வரும்போதெல்லாம் கருடன் வானத்தில் வந்து வழிக்காட்டும். அதனால்தான் திருவாபரணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பந்தளக்குடும்பத்திரனர் ஐயப்பனை காண வரும்போதெல்லாம் வானத்தில் கருடன் வந்து வழிக்காட்டுவதாக ஐதீகம். இந்த நிகழ்வைக் காணவும், ஐயப்பனை தரிசிக்கவும் ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள் என்றுக் கூறினால் மிகையாகாது.
‘திருவாபரணம்’ என்பது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்களாகும். ஐயப்பனை தத்தெடுத்த பந்தள மகாராஜாவின் ஆணையின்படி ஐயப்பனுக்கு செய்யப்பட்ட நகைகளாகும். திருவாபரணம், வெள்ளி பெட்டி, கொடி பெட்டி என்று மூன்று பெட்டிகளில் உள்ள இந்த திருவாபரணத்தை மகரஜோதி திருவிழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பந்தளம் அரண்மனையிலிருந்து சபரிமலைக்கு தலைச்சுமையாக புறப்படும்.
இந்த திருவாபரணப் பெட்டியை சுமப்பதற்காகவே பரம்பரை பரம்பரையாக சிலக்குடும்பங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் போது நகைகளை ஐயப்பனுக்கு போட்டு அலகரித்துவிட்டு பிறகு திருவிழா முடிந்ததும் பாதுகாப்பாக திரும்ப அரண்மனைக்கே எடுத்துச் செல்லப்படும். இந்த அதிசயத்தை காண்பதற்காகவே எண்ணற்ற பக்தக்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.