திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைந்திருக்கும் பஞ்சலிங்கங்களுக்கு தினசரி பூஜைகள் நடக்காது. அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்கிறார். அசுரப்படைகளை சம்ஹாரம் செய்த பிறகு அதன் பாவங்கள் நீங்க கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து தாமரை மலர் வைத்து சிவ பூஜை செய்கிறார். இதை உணர்த்தும் விதமாகத்தான் திருச்செந்தூர் முருகன் கையில் தாமரை மலர் இருக்கும். மூலவரின் கருவறைக்கு பின்னால் இருக்கும் குகையில் தான் முருகப்பெருமான் வழிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இருக்கிறது.
இந்த அறைக்கு பாம்பறை என்று பெயர். இந்த பஞ்சலங்கங்களுக்கு தினசரி பூஜைகள் நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். மார்கழி மாதத்தில் தேவர்கள் இந்த லிங்கங்களை வந்து வழிபடுவதாகவும் ஐதீகம் இருக்கிறது. இந்த பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறைக்கு பின்னால் பஞ்சலிங்கங்களும், கருவறைக்கு உள்ளே மூன்று லிங்கங்களும் இருப்பதனால் இதை அஷ்டலிங்கங்கள் என்று அழைக்கின்றனர்.
திருச்செந்தூரில் முருகப்பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை செய்கின்ற பிரம்மா விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் ஆவணி திருவிழாவாகும். ஆவணி திருவிழாவில் முக்கியமானது ஏழாம் திருநாளும், எட்டாம் திருநாளும் தான். இந்த நாட்களில்தான் முருகப்பெருமான் வெள்ளை சாத்தி, சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி என்னும் திருக்கோலத்தில் காட்சித்தருவார்.
சண்முகர் மூம்மூர்த்திகளின் உருவத்தை தாங்கி பிரம்மா, விஷ்ணு, சிவனாக காட்சியளிப்பார். காக்கும் கடவுளான விஷ்ணுவின் கோலத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளியிருக்கும் சண்முகரை தரிசித்தால் வேண்டும் வரமெல்லாம் கிட்டும். இந்த மாதம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு சிவப்பு சாத்தி அலங்காரமும், ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தியிலும், காலை 10:30 மணிக்கு பச்சை சாத்தியிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இதுவே திருச்செந்தூர் ஆவணி திருவிழாவின் சிறப்புகளாகும்.