

கர்நாடக மாநிலத்தில் உடுப்பிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் மங்களூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கொல்லூர். இங்கு தான் மூகாம்பிகை காட்சி அளித்து வருகிறாள். கம்காசுரன் என்ற அரக்கனின் தொல்லையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அவதரித்த தேவியாக மக்கள் இவளை வழிபட்டு வருகிறார்கள். இந்த கோவில் ஆதிசங்கரர் உடன் மிகுந்த தொடர்பு உடையது.
கம்காசுரன் என்ற அசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் அசுர பலம் பெற்று மக்களை வாட்டி வதைத்து வந்தான். பார்வதி தேவி அந்த அரக்கனை கொன்று அந்த இடத்தில் அம்பிகையாக காட்சி தருகிறாள். இந்த கோவில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழமையான கோவில் ஆகும்.
வாழு கல்லு வீர சங்கர் ஐயா என்ற மன்னன் இந்த கோவிலை நிறுவினார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வந்து சரஸ்வதி தேவியை வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் தாலுகாவில் சௌபர்ணிகா ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. இந்த ஆற்றில் சுமார் 64 வகையான மூலிகைகள் கலந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த சௌபர்ணிகா ஆறுபுனித நதியாக கருதப்படுகிறது.
பசுமையான மலைகள் சூழ்ந்த இயற்கையான சூழ்நிலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. அம்மன் பத்மாசினி கோலத்தில் அருள் பாலிக்கிறார். உடுப்பி மங்களூரில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒரு பீடமாக கருதப்படுகிறது. அம்பாளின் காதுகள் விழுந்த இடமாக உள்ளது.
கோகர்ணம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே இந்த கோவில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமாக சுயம்பு லிங்கமாக ஜோதி லிங்கம் வீற்றிருக்கிறார். இதன் நடுவில் தங்கத்தால் ஆன வரிகளைக் கொண்ட பிளவு காணப்படுகிறது. லிங்கத்தின் இடப்புறம் முப்பெரும் தேவிகளும், வலப்புறம் மும்மூர்த்திகளும் இருப்பதை குறிக்கிறது.
நான்கு கைகள் கொண்ட பஞ்சலோகத்தால் ஆன மூகாம்பிகை உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ளது. இந்தக் கோவிலை முதன்முதலாக வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். எனவே, இந்த கோவிலுக்கு கொல்லூர் என பெயர் வந்தது. ஆதிசங்கரர் கடுமையாக தவம் இருந்து இந்த அம்பிகையை இங்கு வரவழைத்தார். ஆதிசங்கரரின் கடும் தவத்தால் இந்த மூகாம்பிகை இங்கு காட்சி தருகிறாள்.
இங்கு உள்ள அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். இந்த கோவிலில் உள்ள லிங்கத்தை வழிபட்டால், கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது வரலாறு. மூகாம்பிகை இருபுறமும் காளிதேவி, சரஸ்வதி தேவி காட்சி தருகிறார்கள். அதனால் இக்கோவிலுக்கு முப்பெரும் தேவிகள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. நவராத்திரி இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா நடைபெறும். குழந்தைகள் வித்யா ரம்பம் பூஜை நடைபெறும்.
பார்வதி தேவி முகாசுரன் என்ற அரக்கனை அழித்தபோது அரக்கன் பார்வதி தேவியிடம் இந்த இடத்தில் நீங்கள் அவதரிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். அதன்படி பார்வதி தேவி இங்கு மூகாம்பிகையாக (Kollur Mookambika) அருள் பாலித்து வருகிறார்கள். மூகாம்பிகை ஆதிபராசக்தி அம்சமாகும்.
இந்த கோவிலுக்கு மற்றொரு கதையும் உண்டு. ஆதிசங்கரர் தேவியிடம் நீங்கள் கேரளாவில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டி கடும் தவம் செய்தார்.
அம்பிகை அவரிடம், 'நீ முன்னே செல் நான் பின்னே வருகிறேன். நீ எந்த இடத்தில் நிற்கிறாயோ, அந்த இடத்தில் நான் சிலையாக மாறுவேன்!' என்று கூறினாள். அதன்படி ஆதிசங்கரர் முன்னே நடந்து செல்ல, அன்னை தேவி பின்னே நடந்து வந்தாள். ஒரு கட்டத்தில் தேவியின் கால் சலங்கை ஒலி நின்று விட்டது.
உடனே அதிர்ச்சி அடைந்த ஆதிசங்கரர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அவர் திரும்பிப் பார்த்த காரணத்தால் அந்த இடத்திலேயே தேவி சிலையாக மாறிவிட்டாள். அந்த இடம் தான் கொல்லூர். அதன் பின்னர் தேவி ஆதிசங்கரனின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் சோட்டானிக்கரை அம்மனாக அவதரிப்பதாக கூறினாள்.
எனவே, முதலில் தோன்றியது கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில். அதன் பின்னர் தோன்றியது தான் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். இன்றளவும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் திறந்த பின்னரே சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. இது நடைமுறையாக பின்பற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை சிலையை ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கர பீடத்தில் அமைத்துள்ளார். ஆதிசங்கரர் வழிபாட்டு முறையை பின்பற்றி இங்கு பூஜைகள் நடைபெறுகிறது.
கோவிலின் மேற்கு பகுதியில் சங்கர பீடம் உள்ளது. இங்குள்ள ஒரே கல்லில் ஆன விளக்கு தூணில் ஆயிரம் தீபங்களை ஏற்றலாம்.
இந்த கோவிலுக்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள் திரைப்படத்துறையினர் மற்றும் இசையமைப்பாளர்கள் போன்றோர் எண்ணற்ற அளவில் வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகிறார்கள். இசைஞானி இளையராஜா இந்த கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். அரசியல் தலைவர்கள் தாங்கள் வெற்றி பெற இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்.
முப்பெரும் தேவியோடும் இங்கு இருப்பதால் கல்வி, செல்வம், வீரம் ஆகிவற்றக்கு குறை இருக்காது என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. தினசரி இந்த கோவிலுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள தேவிக்கு காலையில் சரஸ்வதி ஆகவும், பகலில் லட்சுமியாகவும், மாலையில் பார்வதி தேவியாகவும் வழிபாடு நடத்துகிறார்கள். பங்குனி மூல நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. இங்குள்ள சக்தி பீடத்தின் அடியில் பெரிய புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.
அம்மனுக்கு 90 கிலோ தங்கத்தால் ஆன தங்க ரதம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 48 கோடி ஆகும். இவை தவிர 50 கோடிக்கு மேல் நகைகள் உள்ளன. முப்பெரும் தேவிகள் இங்கு ஆசிப் புரிவதால், கல்வி, செல்வம், வீரம் இவற்றிற்கு அதிபதியாக விளங்குகிறார்கள். எனவே, இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களது கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேறுகிறது.