சென்னையில் பூவிருந்தவல்லிக்கு அருகில் அமைந்துள்ள நசரத்பேட்டை என்றழைக்கப்படும் அகரமேல் என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீஅமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீபச்சைவாரணப் பெருமாள் திருக்கோவில். இத்தலம் மகாபாரதத்தோடு தொடர்புடைய அபூர்வமான தலமாகும்.
மஹாபாரதப் போரில் துரோணாச்சார்யார் உக்கிரமாக போரிட்டு பாண்டவர்களுடைய படைகளை அழித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் துரோணாச்சார்யாரை வீழ்த்தவில்லை எனில் போரில் பாண்டவர்கள் தோற்பது உறுதி என்ற நிலைமை ஏற்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணர் தருமரிடம் “அஸ்வத்தாமன் இறந்து விட்டதாக தாங்கள் துரோச்சாரியாரிடம் கூறுங்கள். துரோணாச்சார்யார் பலமிழந்து விடுவார். அந்த சமயத்தில் அவரை சுலபமாக வீழ்த்தி பாண்டவர்களைக் காப்பாற்றி விடலாம்” என்கிறார்.
தருமரோ இந்த உபாயத்திற்கு உடன்பட மறுத்த போது, பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்று வீழ்த்துகிறார். இதைப் பயன்படுத்தி தருமரை நோக்கி “நீங்கள் பொய் பேச மறுக்கிறீர்கள். பரவாயில்லை. பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்று விட்டான். அதனால் இப்போது நீங்கள் அஸ்வத்தாம அதஹ: குஞ்சரஹ: (அஸ்வத்தாமன் எனும் யானை கொல்லப்பட்டது) என்று மட்டும் சொல்லுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
தருமரும் ஸ்ரீகிருஷ்ணர் கூறியபடி பெருங்குரலில் சொல்லுகிறார். அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கநாதம் செய்து அஸ்வத்தாம அதஹ: என்ற வார்த்தைகள் மட்டும் துரோணாச்சார்யார் காதில் விழும்படி செய்து குஞ்சரஹ: என்பதை அதாவது யானை என்ற வார்த்தையை அவர் காதில் விழாதவாறு செய்து விடுகிறார். துரோணாச்சார்யரோ தன் மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டதாக நினைத்து மனமுடைந்து வில்லை கீழே போடுகிறார். அச்சமயம் பார்த்து அவர் வீழ்த்தப்படுகிறார். இதன் விளைவாக பாண்டவர்கள் போரில் வெல்கிறார்கள்.
தருமரோ தான் சொன்ன ஒரு பொய்யால் துரோணாச்சார்யார் மாண்டு விட்டதாக எண்ணி வருந்திக்கொண்டிருந்தார். தான் செய்த தவறுக்குப் பரிகாரம் செய்ய நினைத்து நாரத மாமுனியை சந்தித்து ஆலோசித்தார். நாரதமுனி தருமரிடம் புருஷமங்களம் என்ற பகுதிக்குச் சென்று 'தர்ம சத்ர யாகம்' செய்தால் தாங்கள் செய்த பாவத்திற்கு ப்ராயச்சித்தம் கிடைக்கும் என்றுரைத்தார்.
நாரதமுனியின் வழிகாட்டுதலின்படி பாண்டவ சகோதரர்கள் அகரமேல் என்ற இந்த கிராமத்தில் 'தர்ம சத்ர யாகம்' நடத்தினார்கள். எந்த யானையை வைத்து தருமரை பொய் கூற வைத்தாரோ அதே பச்சை யானையின் மீது சத்யபாமா ருக்மணிதேவி சமேதராக யாகத்திலிருந்து தோன்றி பாண்டவர்களுக்கு காட்சி கொடுத்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். தர்ம சத்ர யாகத்திற்குப் பின்னர் பாண்டவர்கள் மன நிம்மதி பெற்றதாகவும் வரலாறு. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சமஸ்கிருதத்தில் 'ஹரித வாரணப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார்.
மன நிம்மதி இழந்து தவிப்பவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து ஸ்ரீபச்சை வாரணப் பெருமாளை வணங்கினால் அவர் மன நிம்மதி அளித்து வாழ வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருக்கோவில் அமைப்பு
பக்த ஆஞ்சநேயரின் சன்னிதியும் நான்கு கால் மண்டபமும் கிழக்கு திசை நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரமும் அமைந்துள்ளது. கோவிலுக்குள்ளே பலிபீடம், துவஜஸ்தம்பம் அமைந்துள்ளன.
மகாபாரதத்தோடு தொடர்புடைய இத்தலத்தின் கருவறையில் மூலவர் ஸ்ரீபச்சை வாரணப் பெருமாள் ருக்மிணி சத்யபாமா சமேதராக ஒரு திருவடியை மடக்கியவாறும் மற்றொரு திருவடியை நீட்டியபடியும் அமர்ந்து அழகிய திருக்கோலத்தில் காட்சி தந்து அருளுகிறார். வலது திருக்கரம் அபயஹஸ்த நிலையிலும் இடது திருக்கரத்தை அவாஹன முத்திரை நிலையிலும் அமைத்துக் காட்சி தருகிறார். இருபுறத்திலும் ருக்மணி சத்யபாமா காட்சி தருகிறார்கள். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு வலது புறத்தில் ஸ்வாமி முதலியாண்டான் சன்னிதி அமைந்துள்ளது. அருகில் ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு தனி சன்னிதி உள்ளது.
வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி சன்னிதியில் தாயார் ஸ்ரீஅமிர்தவல்லி என்ற திருநாமம் தாங்கி அருளுகிறார். இவர் வம்ச விருத்தி அளித்து அருள்பாலிப்பவர் என்பது ஐதீகம். ஸ்ரீஆண்டாள் இத்திருத்தலத்தில் ஒரு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
பலா மரம் இத்தலத்தின் ஸ்தல விருட்சமாகவும் தர்ம புஷ்கரணி இத்தலத்தின் தீர்த்தமாகவும் விளங்குகிறது.
ஸ்வாமி முதலியாண்டான்:
உடையவர் இராமானுஜருக்கு இரண்டு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். ஒருவர் கூரத்தாழ்வான். மற்றொருவர் முதலியாண்டான். ஸ்வாமி முதலியாண்டான் அவதார ஸ்தலம் என்பதால் இக்கோவிலில் முதலியாண்டானுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
மஹாசம்ப்ரோஷணம்:
இத்தலத்தின் மஹாசம்ப்ரோஷண விழா வரும் 06 ஜீன் 2025 அன்று காலை 08.00 மணி முதல் 08.30 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இத்தலம் காலை 07.00 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 04.00 மணி முதல் இரவு 07.30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
பூவிருந்தவல்லியிலிருந்து பெங்களுரு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நசரத்பேட்டை சந்திப்பில் இடதுபுறத்தில் திரும்பி ஊருக்குள் சென்று இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம்.