சூரிய பகவான் பொதுவாக பல திருத்தலங்களில் வருடத்தில் ஒரு நாள் இறைவனை தனது கதிர்களால் வணங்குவதைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால், ஆந்திர மாநிலம் நாகலாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள வேதநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் சூரிய பகவான் தனது கதிர்களால் பெருமாளை பாதம், வயிறு, நெற்றி என மூன்று நாட்கள் தொடர்ந்து வணங்கும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஸ்ரீவேதவல்லி சமேத வேதநாராயண ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசரான ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரது தாயார் நாகலா தேவியின் நினைவாக கி.பி.15 மற்றும் 16ம் நூற்றாண்டில் இத்திருத்தலம் கட்டப்பட்டது. விஜயநகரக் கட்டடக்கலை பாணியை பிரதிபலிக்கும் இந்த கோயிலில் பிரதான மூர்த்தியாக அருள்மிகு வேதநாராயண சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இத்தலத்துப் பெருமாளுக்கு மத்ஸய நாராயணப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு.
இத்திருத்தலம் மகாவிஷ்ணுவின் மத்ஸ்ய அவதாரத்தைக் குறிக்கும் கோயிலாகும். மத்ஸயம் என்றால் மீன். தனது முதல் அவதாரத்தில் மகாவிஷ்ணு நான்கு திருக்கரங்களுடன் மேற்பாகம் தேவரூபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார். எனவே, இத்தலத்தில் மூலவர் உடலின் மேல்பாதி மனித வடிவத்திலும் கீழ் பாதி மீனின் வடிவத்திலும் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு தனது கரத்தில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதற்குத் தயாராக பிரயோக நிலையில் வைத்திருப்பது விசேஷம்.
பிரம்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு 'சோமுகாசுரன்' என்ற அசுரன், கடலின் ஆழத்தில் ஒளிந்து கொள்கிறான். பிரம்மா முதலானோர் வேதங்களை மீட்டெடுக்க பகவான் மகாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார்கள். பகவான் மஹாவிஷ்ணு மத்ஸ்ய அவதாரமெடுத்து சோமுகாசுரனை கடலின் ஆழத்தில் தேடிக் கண்டுபிடித்து போரிட்டு அவனைத் தோற்கடித்து வேதங்களை மீட்டெடுத்தார். இது தசாவதாரத்தில் முதல் அவதாரமாகும்.
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்தலத்தின் கருவறையில் பங்குனி மாதத்தில் சூரிய பூஜை நடைபெறுவது வழக்கம். பங்குனி மாதத்தில் 12, 13 மற்றும் 14ம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறும். முதல் நாள் சூரிய பகவானின் கதிர்கள் கோபுரத்தில் இருந்து 630 அடி தொலைவில் உள்ள மூலவரின் திருப்பாதங்களில் விழும். அடுத்த நாள் பகவானின் வயிற்றுப் பகுதியிலும் மூன்றாம் நாள் பகவானின் நெற்றியிலும் சூரியக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.
பித்ரு தோஷம் மற்றும் சர்ப்ப தோஷங்களுக்கு இத்தலம் மிகவும் சிறந்த பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. மேலும் மீன ராசிக்காரர்களுக்கும் இத்தலம் மிகவும் உகந்த தலமாகக் கருதப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நன்கு பராமரிக்கப்படும் இத்தலம் காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலைவில் நாகலாபுரம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும் சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பதியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.