ஒரு வருடத்தில் மூன்று பிரம்மோத்ஸவம் நடைபெறும் அபூர்வ திருக்கோயில்!

ஸ்ரீ வரதராஜபெருமாள் பூந்தமல்லி
Sri Varadharaja perumal Poonamallihttps://www.youtube.com

பொதுவாக, ஒரு தலத்தில் வருடத்திற்கொருமுறை ஒரு பிரம்மோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், அபூர்வமாக பூவிருந்தவல்லியில் அருளும் பெருமாள் கோயிலில் வருடத்துக்கு மூன்று பிரம்மோத்ஸவங்கள் நடைபெறுவது விசேஷம்.

தனது பக்தனுக்காக காஞ்சிபுரத்திலிருந்து பூவிருந்தவல்லிக்கே சென்று காட்சி கொடுத்த வரதராஜப்பெருமாள், பின் அங்கேயே கோயில் கொண்டார். அருள்மிகு திருக்கச்சிநம்பிகள் மற்றும் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் திருக்கோயில் எனும் இத்தலம் சென்னை புறநகர் பூவிருந்தவல்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

வைணவ மகான் திருக்கச்சி நம்பிகளின் அவதார தலம் பூவிருந்தவல்லி. காஞ்சி வரதராஜப்பெருமாளுடன் அளவளாவும் பெரும் பேறு பெற்ற இவர், 1009ம் ஆண்டில் பூவிருந்தவல்லியில் வாழ்ந்து வந்த வீரராகவர் மற்றும் கமலாயர் தம்பதியின் திருமகனாக அவதரித்தவர். திருமாலின் மீது அதீத பக்தி கொண்டவராய் விளங்கினார் திருக்கச்சி நம்பிகள். தந்தையார் தம் பிள்ளைகள் நால்வருக்கும் தாம் சம்பாதித்த பொருளை நான்காகப் பிரித்துக் கொடுத்தார். மற்ற மகன்கள் மூவரும் வியாபாரத்தில் ஈடுபட்டு செல்வத்தைப் பெருக்கி வாழ்ந்தனர். ஆனால், திருக்கச்சிநம்பிகள் மட்டும் தனது செல்வத்தை திருமால் கைங்கர்யங்களுக்கு செலவிட்டு வந்தார். தனக்குக் கிடைத்த நிலத்தில் நந்தவனம் அமைத்து அதில் பூக்கும் பூக்களை மாலையாக்கி அம்மாலையை காஞ்சிக்கு நடந்தே சென்று வரதராஜப்பெருமாளுக்குச் சூட்டி அழகு பார்த்து மகிழ்ந்தார். வரதராஜ பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்து வந்தார். இவருடைய பக்தியைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் இவருடன் பேசும் வழக்கத்தை வைத்திருந்தார்.

வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் மிகவும் சிரமப்பட்டு காஞ்சிக்கு நடந்தே சென்று வந்தார். தனது பக்தன் தன்னை தரிசிக்க சிரமப்பட்டு வருவதைக் கண்டு பெருமாள் பூவிருந்தவல்லிக்கே வந்து தனது பக்தன் திருக்கச்சி நம்பிகளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். பெருமாள் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் உருவானது.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் கோயில் பூந்தமல்லி
ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் கோயில் பூந்தமல்லி

திருக்கச்சிநம்பிகளுக்காக வரதராஜப்பெருமாள், ஸ்ரீசீனிவாசப்பெருமாள், அரங்கநாதர் ஆகிய மூவரும் காட்சி கொடுத்த அற்புதமான திருத்தலம் இது. இத்தலம் புஷ்பபுரி க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. விஜயநகரப் பேரரசர்கள் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபம் அச்சுதப்ப நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்டது. ஐந்துநிலை இராஜகோபுரம் கம்பீரமாய் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு அருகில் இத்தலத்தின் புஷ்கரணி ஸ்வேதராஜ புஷ்கரணி அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மல்லிவனம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள், திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோரை இத்தலத்தில் தனித் தனி சன்னிதிகளில் தரிசிக்கலாம். பழம்பெருமை வாய்ந்த இத்தலத்தில் ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனியாக பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிக்கனமும், சிறு சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்!
ஸ்ரீ வரதராஜபெருமாள் பூந்தமல்லி

இத்தலத்தில் மூலவர் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் என்கிற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் தாயார் புஷ்பவல்லி என்ற திருநாமம் தாங்கி அருளுகிறார். ஆண்டாள் தனிச்சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருக்கச்சிநம்பிகளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. ஆஞ்சனேயர் பக்தஆஞ்சனேயராக சிறிய சன்னிதியில் அமைந்திருக்கிறார்.

திருக்கச்சிநம்பிகளின் அவதாரத் திருவிழா இத்தலத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் திருக்கச்சிநம்பிகளின் அவதார விழா நடக்கும் சமயத்தில் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு முதலானவை இங்கு வருவது வழக்கம். அன்று வரதராஜப்பெருமாள் இவருடைய சன்னிதியின் முன் எழுந்தருள்வார். இச்சமயத்தில் திருக்கச்சி நம்பிகள் இயற்றிய தேவராஜ அஷ்டகத்தைப் பாடி விசேஷ பூஜைகளைச் செய்வது வழக்கம். மூலவர் திருக்கச்சிநம்பிகளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இங்கு ஐப்பசி மாதத்தில் அன்னகூட (திருப்பாவாடை) உத்ஸவமும் நடைபெறுகிறது.

ஆவணியில் கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசியில் 3 நாட்கள் பவித்ரோத்ஸவம் மற்றும் நவராத்திரி, ஸ்ரீநிவாசர் உத்ஸவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகளுக்கும் கார்த்திகை தீப உத்ஸவம், மார்கழியில் ராப்பத்து பகல்பத்து மற்றும் வைகுண்ட ஏகாதசி, பங்குனியில் ஸ்ரீமங்களாசாசனம், தவன உத்ஸவம் முதலான உத்ஸவங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

இக்கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 6.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம் முதலான பகுதிகளிலிருந்து பூவிருந்தவல்லிக்கு நேரடிப் பேருந்து வசதி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com