அனுபவச் சுவடுகள் – 4 இடுப்புல கைவெச்சு ராஜ அலங்கார தரிசனம்!

மூட்டை சுவாமிகள் சமாதி...
மூட்டை சுவாமிகள் சமாதி...

கணக்கம்பட்டியில் அந்தக் குடிசை வீட்டுக்குள் இருந்து ஒருவர் வெளியே வந்தார்.

வெளியே காத்திருந்த பக்தர்களிடம் காணப்பட்ட பரபரப்பில் இருந்து இவர்தான் மூட்டை சுவாமிகளாக இருக்க முடியும் என்று புரிந்துகொண்டேன். அவரின் திருமுகத்தை நேருக்கு நேராக தரிசிப்பதற்குத் தயாராக இருந்தேன்.

குடிசைக்குள் இருந்து இவர் மட்டுமே வந்தார். இவரது தோற்றமே வித்தியாசமாக இருந்தது.

பல மாதத்து தாடி முகத்தில்.

கண்களில் ஒரு தீர்க்கம்.

சைனாக்காரர் போன்ற முகம்.

மடித்துக் கட்டிய வேட்டி.

மேலுக்குச் சட்டை. அதன் மேல் அரதப்பழசான ஒரு ஸ்வெட்டர். அதன் நிறம் இன்னதெனத் தீர்மானிக்க முடியவில்லை.

நேர்த்தியாகக் கட்டப்பட்ட முண்டாசு.

இவரைக் கண்டதும், இங்கே கூடி இருந்தவர்கள் மத்தியில் எந்தக் கோஷமும் இல்லை. பேச்சும் இல்லை. முணுமுணுப்பும் இல்லை.

இருந்த இடத்தில் இருந்தபடியே அவரைப் பார்த்து பக்தியுடன் கைகளைக் கூப்பினேன்.

மூட்டை சுவாமிகள்
மூட்டை சுவாமிகள்

ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார் சுவாமிகள். இடமும் வலமும் பார்வையைச் சுழற்றினார்.

ஆனால், எந்தக் குடிசைக்குள்ளிருந்து சுவாமிகள் வந்தாரோ, அதன் வாசலிலும் அருகிலும் நின்றுகொண்டிருந்த பக்தர்களை சுவாமிகள் இன்னும் பார்க்கவில்லை என்றே தோன்றியது.

மெள்ள நடந்தார். நான் மட்டும் தனித்துக் காத்திருந்த இடத்துக்கு அருகே வந்தார். எனக்குள் ஒரு பரவசம்.

சாலையின் ஓரத்தில் ஒரு குடிசை வீட்டை ஒட்டி நான் நிற்கிறேன். அதே சாலையின் நடுவில் நின்றபடி, எனக்கு நேர் எதிராக, இடுப்பில் இரு கைகளையும் ஒய்யாரமாக வைத்துக்கொண்டு என்னை நோக்கி நேர்ப்பார்வை பார்த்தார் சுவாமிகள்.

சுமார் முப்பது விநாடிகள் வரை கண்களை சற்றும் இமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இடுப்பின் இரு பக்கமிருந்தும் கைகளை எடுத்தார். பின்னர் இயல்பாக, புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் நடந்தார்.

அவர் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த முப்பது விநாடி வேளையில் ஏதோ ஒரு பரவசம் அமானுஷ்யமாய் என்னை ஆட்கொண்டது நிஜம். இதுவரை அனுபவித்திராத ஆனந்தம்.

இந்தப் பரவசத்தின் காரணம் என்னவென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது மூட்டை சுவாமிகளுக்கு உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்தார்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

அவருக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். ஒடிசலான தேகம். புள்ளி வைத்த சட்டை அணிந்திருந்தார்.

‘‘சார், நீங்க யாரு?’’ என்றார் என்னிடம் படபடப்பாக.

சொன்னேன்.

‘‘பழநிக்குப் போய்க்கிட்டிருக்கீங்களா?’’ என்றார்.

‘‘ஆமாம் சார்’’ என்றேன் ஆச்சரியத்துடன்.

‘‘நீங்க ரொம்ப குடுத்து வெச்சவர் சார். உங்களைப் பார்த்து இடுப்புல கை வெச்சு ஒரு தரிசனம் தந்தாரே... அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?’’ என்று கேட்டார்.

‘‘தெரியலை சார்’’ என்றேன் புருவங்கள் விரிய.

‘‘பழநி தண்டாயுதபாணியைத் தரிசிக்கறதுக்கு முன்னாலயே, உங்களுக்கு அந்த முருகப் பெருமானா, ராஜ அலங்காரத்துல தரிசனம் குடுத்திருக்காரு சாமீ. இது எல்லோருக்கும் கெடைக்காது சார்’’ என்று சொல்லி, பிரமிப்புடன் என் கைகளைப் பிடித்துக் குலுக்கினார்.

சிலிர்த்துப் போனேன். பரவசத்தின் உச்சத்தில் விழி ஓரங்களில் நீர் கோர்த்தது.

பழநி தண்டாயுதபாணியைத் தரிசிப்பதற்கு முன், இங்கேயே அவனது தரிசனமா?

என் கைகளையே விடாமல் பற்றிக்கொண்டிருந்த அந்த அன்பரிடம் பேசுவதற்கு முற்பட்டேன். வார்த்தைகள் வரவில்லை. குரல் தழுதழுத்தது.

‘நீ தரிசிக்கப் போய்க்கொண்டிருக்கிற பழநி தண்டாயுதபாணியும் நான்தானப்பா...’ என்று சொல்லாமல் சொல்வதுபோல் கிடைத்த இந்தத் தரிசனம் என்னை உருக வைத்துவிட்டது.

அந்தத் தரிசனத்தை இன்றைக்கு நினைத்தாலும், உடல் புல்லரிக்கிறது.

மூட்டை சுவாமிகளைத் திரும்பிப் பார்த்தேன்.

அங்கு கூடி இருந்த பக்தர்களை ஊடுருவிப் பார்த்தார்.

அதன் பிறகு பக்தர்கள் எவரும் இல்லாத வெற்றுச் சாலையை வெறித்துப் பார்த்தார்.

அவ்வளவுதான்... சுவாமிகள் குடிசைக்குள் மீண்டும் சென்று விட்டார்.

அதிகபட்சம் பத்து நிமிடங்கள்தான். பரபரவென்று எல்லாம் முடிந்தது.

சுவாமிகளைப் பார்த்துவிட்டால் அடுத்த விநாடியே அங்கிருந்து புறப்பட்டு விட வேண்டும். தரிசனம் செய்தும், திருப்தி ஆகாமல் மூட்டை சுவாமிகளிடம் எதையோ எதிர்பார்த்து ஆசையுடன் அங்கேயே காத்திருக்க ஆரம்பித்தால், கருங்கற்களை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை நோக்கி ஆக்ரோஷமாக வீச ஆரம்பித்து விடுவார் மூட்டை சுவாமிகள் (கற்களை வீசுகிறதையும் ஒரு வேறொரு தருணத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்... என்ன ஒரு வேகம்).

ஒட்டுமொத்த கூட்டமும் அங்கிருந்து உடனே கலைந்தது. தெருவே வெறுமை ஆனது.

நிருபர் நண்பருடன்...
நிருபர் நண்பருடன்...

மகான்கள் தரிசனம் என்பது நாம் எதிர்பார்த்து அமைவதில்லை.

நமக்குத் தரிசனம் தருவதற்கு சம்பந்தப்பட்ட மகான் விரும்பினால்தான், கிடைக்கும்.

அலுவலக வேலையாக திண்டுக்கல் வந்த வேலை ஏன் அத்தனை சீக்கிரத்தில் முடிய வேண்டும்?

அந்த நேரம் பார்த்து நண்பர் பிரபு, ஏன் என்னை பழநிக்கு அழைக்க வேண்டும்?

கணக்கம்பட்டி அருகே கார் செல்லும்போது ஏன் பழுதாக வேண்டும்?

மூட்டை சுவாமிகளைத் தரிசிக்கச் செல்லும்போது ஏன் அவர் குடிசையில் இருக்க வேண்டும்?

பழநி செல்கிற எனக்கு ஏன் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தர வேண்டும்?

விதி தீர்மானித்திருந்த காரணத்தால்தான் எல்லாமே சாத்தியமாயிற்று!

மூட்டை சுவாமிகள் வசிக்கும் ஆளரவமே இல்லாத அந்தச் சாலையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே பிரதான சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

உற்சாகமாக பிரபு எதிரே வந்துகொண்டிருந்தார். ‘‘கார் சரியாகி விட்டது சார். ரொம்ப சின்ன ப்ராப்ளம்தான்’’ என்றவர், ‘‘தரிசனம் ஆச்சா சார்?’’ என்று உற்சாகமாகக் கேட்டார்.

பிரபுவின் கைகளைப் பிடித்துக்கொண்டு இந்த தரிசனத்துக்கான நன்றியைச் சொன்னேன்.

அதன் பின் இரண்டு மூன்று முறை மூட்டை சுவாமிகளைத் தரிசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அனுபவம்!

தற்போது இவர் சமாதி ஆகி விட்டார்.

இவரது ஜீவ சமாதி கணக்கம்பட்டி மெயின் ரோட்டுக்கு அருகிலேயே சற்று உள்ளடங்கி காணப்படுகிறது.

வயல்வெளிகள் சூழ... கிராமத்தில் காணப்படும் இந்த மூட்டை சுவாமிகள் சமாதியில் வழிபாடு வெகு அற்புதமாக நடந்து வருகிறது. பிரமாண்டமான இடம். தினமும் ஏராளமான அன்னதானம்.

தினம்தோறும் திரளாக பக்தர்கள் குவிகிறார்கள். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில் இந்திய வரைபடத்தில் ‘கணக்கம்பட்டி’ கூடுதல் கவனம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

உலகெங்கிலும் பரவி இருக்கும் மூட்டை சுவாமிகளின் பக்தகோடிகள் அனைவரும் இணைந்து இந்த சமாதியை வெகு அற்புதமாகப் பராமரித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிரிப்பென்னும் அருமருந்து!
மூட்டை சுவாமிகள் சமாதி...

இவரது சமாதி இருக்கக் கூடிய இடத்தில் இரண்டு மூன்று பழைய கார்களை ஒரு முறை பார்க்க நேர்ந்தது.

அவற்றைப் பார்த்தாலே வெகு நாட்களுக்கு முன் யாரோ அங்கு நிறுத்தி விட்டுப் போயிருப்பதை உணர முடிந்தது.

ஒரே தூசு படிந்து, அருகே சென்றாலே, தும்மல் வருவதுபோல் இருந்தது.

அங்கே பக்தர் ஒருவரிடம் காரணம் கேட்டேன்.

அவர் சொன்னார்: ‘‘மூட்டை சுவாமிகள் இங்கே வசித்தபோது பலரும் கார்ல வந்து தரிசனம் பண்ணுவாங்க. சிலர்ட்ட, ‘காரை இங்கயே விட்டுட்டுப் போயிடு’ என்பார் சுவாமிகள். அவர்களும் என்ன ஏதென்று கேட்காமல், அவரது திருவாக்குக்குக் கட்டுப்பட்டு அப்படியே விட்டுட்டுப் போய் விடுவார்கள்.

ஒரு சில மாதங்களுக்குப் பின் அவர்களது வாழ்க்கையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்குவார்கள். தாங்கள் விட்டுட்டுப் போன காரை விட பிரமாதமான கார்களை வாங்குவார்கள்’’ என்றார்.

என்னே ஒரு நம்பிக்கை... என்னே ஒரு பக்தி.

அடுத்த முறை பழநிக்குச் செல்லும்போது கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் திருச்சமாதிக்கும் போய் தரிசனம் செய்யுங்கள்.

எளிமையாய் இறைவனே குடிசையில் வாழ்ந்த பூமி, கணக்கம்பட்டி!

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com