ராமாயணத்தில் தன்னலமற்ற ஒரு மங்கை - அவர் யார் தெரியுமா?

sacrifice made by Urmila
Anmiga katturai...Image credit - romapadaswamimemo.com
Published on

ராமாயணத்தில், பலர் அவரவர்களால் முடிந்த அளவு பல்வேறு வகைகளில் தன்னலமின்றி தியாகம் செய்துள்ளனர். சில பெண்மணிகளும் அதில் அடக்கம்.  தன்னலமற்ற மங்கை ஒருவர்,  தனது அன்பான இல்லற வாழ்வினை 14 வருட காலம்  தியாகம் செய்துள்ளார். 

எதன் பொருட்டு..? யார்  அவர்...?

ஸ்ரீராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பிவிட்டனர். அவர்களுக்கு சேவை செய்ய லக்ஷ்மணரும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர், அன்பு மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக்கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன்னுடைய நினைவும், விரகதாபமும்  அவரின் கடமையை சரிவர செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.

யோசித்தாள். அவர்  வெறுக்கும்படியாக  நடந்து கொள்ளவேண்டும் என்று நிச்சயித்தாள். நன்றாக தன்னை அலங்கரித்துக்கொண்டு லக்ஷ்மணனை வரவேற்க தயாரானாள்.  உள்ளே வந்த லக்ஷ்மணன் அவளது அலங்காரம் கண்டு சில விநாடிகள் திகைத்தவன், அண்ணலுடன் சேர்ந்து தானும் கானகம் செல்வதைப் பற்றிக் கூறினான்.

"தந்தையார் காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையே தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். என்னுடன் வாருங்கள், நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம்” என்றாள் ஊர்மிளை.

லக்ஷ்மணனோ உடனே கோபமடைந்து,  "நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவே வேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு. என் அண்ணனுடனும், அண்ணியுடனும், நான் போகிறேன்” என்றான்.

“உங்கள் தூக்கத்தை சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்" என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஊர்மிளை“. ஓஹோ! அப்படியே ஆகட்டும் என்ற லக்ஷ்மணன் ஒருவித எரிச்சலுடன், அவளுக்குத் தன்னுடைய தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால், பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது.

இதையும் படியுங்கள்:
கங்கா தேவி யாரிடம் வரம் கேட்டாள் தெரியுமா?
sacrifice made by Urmila

ஊர்மிளை செய்த இந்த தியாகம் தெரியாததால்,  அவளுடைய நினைவு லக்ஷ்மணனை துளியும் வாட்டவில்லை. 

ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு,  சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லக்ஷ்மணன்,  ஊர்மிளையின் தியாக மனமறிந்து, மன்னிப்பு கேட்டு,  அவளை மிகவும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தான்.

இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக்கூடாது. நல்ல காரியத்திற்காக மேற்கொள்ளும் தியாகத்தை விட மேலான இன்பமுமில்லை;  இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை;  மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதமுமில்லை…!" என்பதை இந்த ராமாயண நிகழ்வு விளக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com