கங்கா தேவி யாரிடம் வரம் கேட்டாள் தெரியுமா?

anusuya devi temple uttarakhand
anusuya devi temple uttarakhand
Published on

முன்பொரு காலத்தில், காமதா என்னும் ஒரு வனப்பகுதி இருந்தது. அவ்வனத்தில் பிரம்மாவின் மானச புத்திரரான அத்ரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயா தேவியும் அமைதியாகக் குடும்பம் நடத்தி வந்தனர். அத்ரி மகரிஷி என்பவர் சப்த ரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். தவஞானம் அதிகமாகக் கொண்டவர். அவர் பத்தினி அனுசுயாவும் தவயோகியாகத்தான் இருந்து வந்தார். கணவருக்கு எந்த விதத்திலும் சளைத்தவளாக இல்லாதிருந்தாள்.

மகரிஷி அடிக்கடி தவம் மேற்கொள்ள அமைதியான சூழலுக்குச் சென்று விடுவார். அப்படி ஒரு சமயம் அவர் தவத்தை மேற்கொண்டபொழுது, வருடக் கணக்கில் தவத்தில் மூழ்கி விட்டார். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாத அளவிற்கு அவர் ஆழ்ந்த தவத்தில் இருந்து வந்தார். சில வருடங்கள் இப்படியே ஓடின.

அந்த வனப்பகுதியில் திடீரென்று வறட்சி நிலவியது. நீர் வளம் குறைந்தது. மரம், செடி, கொடிகள் வாடி கருகத் தொடங்கின. விலங்கினங்கள், புழு பூச்சிகள் எல்லாம் மடிந்து போயின. மக்கள் எல்லோருமே நீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அதனால் பலர் அப்பகுதியை விட்டு விலகி வெளியேறி விட்டார்கள். ஆனால், அத்ரி மகரிஷிக்கு இது எதுவுமே தெரியாது. அனுசுயா தேவி, எப்பொழுதும் போல் கணவருக்குப் பணிவிடை செய்வதிலேயே காலத்தைக் கழித்து வந்தார்.

ஆண்டுகள் பல உருண்டு ஓடின. தவம் செய்து கொண்டிருந்த மகரிஷியின் மேல் புற்று உருவானது. அப்படி ஒரு புற்று உருவானதும் கூட அவருக்குத் தெரியவில்லை. அனுசுயா தேவி காற்றையே சுவாசித்து காற்றையே ஆகாரமாகக் கொண்டு தனது காலத்தை அங்கேயே கழித்து வந்தாள். நீர் வளம் இருக்க வேண்டும் என்றால் ஆண்டவன் மனது வைத்தால் தவிர, வேறு எதனாலும் சாத்தியம் இல்லை என்று அவருக்கு நன்றாகவே புரியும்.

anusuya devi temple uttarakhand
anusuya devi temple uttarakhand

அதனால் காய்ந்த மண்ணை எடுத்து அதை சிவலிங்கம் போல் உருவாக்கி, நீர் வளம் வேண்டி சிவபெருமானை நினைத்து தவத்தில் மூழ்கினாள். அவருடைய தவத்தினை மெச்சிய சிவபெருமான், கங்கா தேவியை பூமிக்கு அனுப்பி வைத்தார். 'அனுசுயா' என்கிற குரல் கேட்டு அனுசுயா தேவி திரும்பிப் பார்க்க, கங்கா தேவியே அந்தப் பதிவிரதைக்கு முன்பு பிரசன்னமாகி இருந்தாள். “தாயே, நீங்கள் யார் தெரியவில்லையே” என்று அனுசுயா கூற, “நான் கங்கை. முக்கண்ணனார்தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார். உனக்கு என்ன வரம் வேண்டும் சொல்” என்றாள். “தாயே, இங்கு நீர் வளம் முற்றிலும் வற்றிவிட்டது. இங்கிருந்த ஜீவராசிகள் மடிந்து விட்டன. மக்களும் இங்கிருந்து வெளியேறி விட்டார்கள். இந்த பூமி செழிக்க வேண்டும். நீங்கள்தான் இங்கு நீர் வளத்தை உண்டாக்கித் தர வேண்டும்”  என்றாள் அனுசுயா.

“பதிவிரதையே, உனது பதிவிரதா தர்மத்தினால், பொழுது விடிந்தால் மரணத்தை தழுவுவான் என்று இருந்த உனது தோழியின் கணவனுக்கான சாபத்திலிருந்து அவனை மீட்பதற்காக சூரிய பகவானையே உதிக்க விடாமல் தடுத்து நிறுத்தினாய். நீ கேட்டு இல்லையென்று யாராலும் கூற முடியாது. இப்பொழுதிலிருந்து இந்த பூமி நீர் வளத்தால் செழித்து இருக்கும்” என்று கூறிய கங்கா மாதாவானவள், மகரிஷியின் குடில் அருகாமையிலேயே சலசலவென்று தவழ ஆரம்பித்தாள். அப்பகுதி மிகுந்த செழிப்புடன் அந்த நொடியில் இருந்தே மாறத் தொடங்கியது.

அத்ரி மகரிஷி அப்பொழுதுதான் தவம் கலைந்து சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தார். தனது மனைவி செய்த தவத்தின் பயனாய் அந்தப் பகுதி முழுவதுமே நீர் வளத்துடன் இருப்பதைக் கண்டார். கங்கா மாதாவை மகரிஷியும் அனுசுயாவும் நமஸ்கரித்துக் கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்:
பசு நெய் Vs எருமை நெய்: எது சிறந்தது தெரியுமா?
anusuya devi temple uttarakhand

“அனுசுயா, தவஞானியும் பத்தினி தெய்வமும் ஆன நீ, எனக்கு ஒரு வரம் அளிக்க வேண்டும். தருவாயா?” என்று கங்கா மாதா கேட்டாள். “அன்னையே நீங்கள் என்னிடம் வரம் கேட்பதா? இது என்ன விந்தை?” என்றாள் அனுசுயா.

“இல்லை நீ கொடுக்கும் வரத்தினால் எனக்கு நன்மை உண்டாகும். நீ செய்த தவத்தின் புண்ணியத்தில் பாதி பங்கினை எனக்கு நீ தானமாகக் கொடுக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அவர்கள் செய்யும் பாவங்களைப் போக்கிக்கொள்ள கங்கையில் நீராடுகிறார்கள். அவர்களின் பாவங்கள் முழுவதையும் நான் வாங்கிக் கொள்கிறேன். நான் அந்தப் பாவங்களை எங்கு சென்று தொலைக்க முடியும்? உன்னுடைய தவத்தின் வலிமையினால் உண்டாகும் புண்ணியத்தால் எனக்கு அந்தப் பாவங்கள் கழியும்” என்றாள்.

“தந்தேன் தாயே” என்று கூறியபடி,  சலசலத்து ஓடிக்கொண்டிருந்த கங்கை நீரை இரு கைகளாலும் அள்ளி கங்கா தேவியின் கைகளில் ஊற்றினாள். அதை சுவீகரித்துக் கொண்டாள் கங்கா தேவி. சிவபெருமானும் பார்வதி தேவியும் அங்கு வந்து எல்லோருக்கும் ஆசிகளை வழங்கி தத்தம் இருப்பிடம் அகன்றார்கள். சிவபெருமானின் ஜடாமுடியில் அலங்காரமாய் தவழ்ந்து கொண்டிருக்கும் கங்கா தேவியே, அனுசுயா தேவியிடம் ஒரு வரத்தைக் கேட்டு பெற்றுக் கொண்டாள் என்றால், அனுசுயா தேவியின் பதிவிரதாத் தன்மையை கூறவும் வேண்டுமோ?

உத்தர்கண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில், இமயமலை பகுதியில், அனுசுயா தேவிக்கு கோயில் இருக்கிறது. இங்கிருந்து சற்று தொலைவில் மகரிஷி தவம் செய்த குகையும் இருக்கிறது. இந்த இடத்தில்தான் கங்கா மாதா அருளிய அமிர்த கங்கை செழிப்பாக வளம் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com