கவிதை: உலகைக் காத்திடுவாய் கண்ணனே!

கோகுலாஷ்டமி சிறப்புக் கவிதை..!
கோகுலாஷ்டமி  | Lord Krishna
கோகுலாஷ்டமி | Lord Krishna
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Deepam strip
Deepam strip

கோகுலாஷ்டமி சிறப்புக் கவிதை..!

கீதை கொடுத்தவனே!

கீர்த்திமிகக் கொண்டவனே!

பாரதத்தின் நாயகனே!

பாவங்கள் தவிர்ப்பவனே!

பாண்டவர்கள் மாமனே!

பக்குவமாய் காய்நகர்த்தி

துஷ்டக் கௌரவரைத்

துண்டாடிப் போட்டவனே!

நேர்மைக்குப் பங்கம்

நேர்ந்திடும் போதெல்லாம்

விசுவ ரூபனாய்

விரைந்திடும் வீரனே!

கோகுலத்தில் இருக்கையிலே

கோபியர்கள் புடைசூழ

காதல் வயப்படுவாய்

கனிவைப் பொழிந்திடுவாய்!

கோபம் கொப்பளித்தால்

கோவர்த்தன மலையையும்

எளிதாய்த் தூக்கிடுவாய்

இறைத்தன்மை காட்டிடுவாய்!

துர்எண்ண துச்சாதனன்

துகிலுரித்துத் திரௌபதியை

அரண்மனைக் கூடத்தில்

அசிங்கப் படுத்துகையில்

அவள்மானம் காத்தவன்நீ!

அலையலையாய் துகிலினையே

அப்பொழுதே ஆன்லைனில்

டெலிவரி செய்திட்ட

சிறந்த விஞ்ஞானிநீ!

முக்காலம் தானுணர்ந்த

முதுபெரும் ஞானிநீ!

தப்பாது கணக்குகளைச்

சரிவர முடித்தவன்நீ!

ஆவணி மாதத்தில்

அஷ்டமியும் ரோகினியும்

இணைந்துவரும் நாளதுவே

எங்களின் திருநாளாம்!

உந்தன் ஜெயந்திஇன்று!

உலகே கொண்டாடும்

அற்புத நாளின்று!

ஆனந்தம் மிகக்கொண்டே

கொண்டாடி மகிழ்கின்றோம்!

குழந்தைகளின் பாதங்களில்

வண்ணத்தைத் தீட்டி

வாசல்முதல் பூஜைவரை

அடிகளைப் பதியவைத்து

அன்பார்ந்த நீயே

அகமுள்ளே வந்ததாக

எண்ணி மகிழ்கின்றோம்!

ஏக்கங்கள் போக்குகின்றோம்!

துளசியிலை மாலையுடன்

நெய் விளக்கேற்றி

நெஞ்சில் உனைநிறுத்தி

பூஜைகள் செய்கின்றோம்

புளகாங்கிதம் அடைகின்றோம்!

பால்சோறு சீடை

பக்குவ அவல்பாயசம்

பொரியுருண்டை முறுக்கு

பொங்காத நல்வெண்ணை

சேர்த்துனக்குப் படைத்திடுவோம்

சிறந்த நல்பாடல்களை

நீயும் கேட்டிடவே

நிம்மதியாய்ப் பாடிடுவோம்!

கள்ளமில்லாக் குழந்தைகளைக்

கண்ணன் ஆகவே பாவித்து

உந்தன் வேடத்தில்

உலவிடச் செய்திடுவோம்!

துணையாய் ராதையையும்

கொண்டுவந்து நிறுத்திடுவோம்!

இந்தஒருநாளின் இனிமையே

அடுத்த ஆவணிவரை

நின்றிருக்கும் மனதில்

நிம்மதியைக் கொடுத்தபடி!

இதையும் படியுங்கள்:
கவிதை: கஷ்டங்கள் ஏன் உனக்கு மட்டும் அதிகம் பெண்ணே?
கோகுலாஷ்டமி  | Lord Krishna

நடந்ததும் நடப்பதும்

நடக்கப் போவதும்

நன்மைக் கென்றே

உணரச் செய்தவனே!

உளத்தில் நிறைந்தவனே!

உந்தன் பெர்த்டேயில்

உற்சாகம் கொள்கின்றோம்!

நின்று உலகினிற்கே

நிம்மதி தனைத்தந்து

காத்திடுவாய் கண்ணனே!

கனிவான நல்உலகினையே!

logo
Kalki Online
kalkionline.com