ஆன்மிகக் கலைக்கூடமா? அமைதி தரும் ஆலயமா?

Thennangur panduranga temple
Thennangur panduranga temple

முதலில் ஒரு குட்டிக் கதை ...

றை வழிபாட்டுடன், தொண்டர்களின் இரைத் தேவையைத் தீர்ப்பதையும் தன் தினசரி கடமையாகக் கொண்டவன் அந்த பக்தன். அவனுடைய பொது நலனைப் பாராட்டும் வகையில் அவன் வழிபடும் பாண்டுரங்கன், அவனுடைய வீட்டிற்கே வந்து அவன் அளிக்கும் பூஜையையும் பிரசாதத்தையும் நேரடியாகவே ஏற்றுக் கொள்வார்.

ஒருநாள் அவ்வாறு வந்திருந்த அவருக்கு முறையாக பூஜையை ஆரம்பித்தபோது வாசலில் அன்னதானம் பெறவேண்டி காத்திருந்தவர்கள் அவனுடைய கவனத்தை ஈர்த்தார்கள். உடனே அவன் பாண்டுரங்கனிடம், ‘‘கொஞ்சம் அப்படியே நில்லுங்க சாமி, நான் அவங்களை கவனிச்சுட்டு வர்ரேன்” என்று சொல்லிவிட்டு வாசல் பக்கம் போய்விட்டான். அவன் சொன்னானே என்பதற்காக பாண்டுரங்கன் நின்றபடியே காத்திருந்தார் - தன்னைக்கூட கவனிக்காமல் தன் அடியார்கள் மீது அன்பைப் பொழியும் அந்த பக்தனின் பொதுநல உள்ளத்தைப் பாராட்டும் வகையாக! அதுமட்டுமல்லாமல், அடுத்து தான் எங்கெல்லாம் கோவில் கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாமும் இப்படி நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கிறார்!

தமிழ்நாட்டில், தென்னாங்கூரில். இவ்வூரின் நடுநாயகமாக, பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது பாண்டுரங்கன் - ரகுமாயி ஆலயம்.

Panduranga - Rakhumai Temple, Thennangur
Panduranga - Rakhumai Temple, Thennangur

வட இந்திய புரி ஜெகந்நாதர் கோயில் வடிவமைப்பைப் போன்று தொண்ணூற்று ஐந்தடி உயரத்தில் அமைந்திருக்கும் கோபுரம், அண்ணாந்து பார்க்க வைக்கிறது. கோயிலில் உள்ள கதவுகள் எல்லாம் தேக்கு மரத்தால் உருவானவை. ஒவ்வொரு கதவின் முன்னாலும் சில விநாடிகளாவது நம்மை நிறுத்திவிடும் அற்புத, கலைத்திறன் மிக்க வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள் அவை. உலகத்திலேயே, இந்த கருவறை கதவுதான், வெள்ளியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய ஆலயக் கதவு என்கிறார்கள்.

நுழைவாயிலிலிருந்து அடுத்தடுத்து மூன்று மண்டபங்கள்; முகப்பு மண்டபத்தில் சித்திரங்கள் புதுமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் லீலா விநோதங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்வன. தஞ்சாவூர் ஓவியப் பாணியில் அமைந்திருக்கும் இந்த ஓவியங்கள் மணிக்கணக்கில் நின்று ரசிக்கத் தக்கவை. இப்படி சுமார் முப்பது ஓவியங்கள் உள்ளன.

மண்டபத்தின் மேற்கூரையில் தசாவதாரக் காட்சிகளை வட்ட வடிவ ஓவியங்களாக அமைத்துள்ளார்கள். ‘மியூரல்’ என்கிற கேரள பாணியில் உருவாக்கப்பட்டவை இவை.

கோவில் முழுவதுமாக எப்படி தூய்மை துலங்க ஒளிர்கிறதோ, அதற்குக் கொஞ்சமும் மாற்றுக் குறையாமல் இந்த ஓவியங்கள் பொலிகின்றன. எந்த மூலையிலும், இடுக்கிலும் கொஞ்சம் கூட தூசி, தும்பு இல்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

கருவறையில் ஆளுயர வடிவில் பாண்டுரங்கன் - ரகுமாயி, மூலவர்கள் வேத ஆகமப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

விஸ்வரூப மூர்த்திகளாக விளங்கும் இவர்களுக்குக் கீழே, அலங்கரிக்கப்பட்ட, அவர்களுடைய மிகச் சிறிய விக்ரகங்களும் பேரழகு கொஞ்சும் பதுமைகளாக விளங்குகின்றன.

கோயிலை ஒட்டி அமைந்துள்ள ராம சங்கீத மண்டபத்தில் இன்னிசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. பாடல், இசைக்கருவிகள் என்று பலரக இசையொலிகள் பக்தர்களைப் பரவசப்படுத்துகின்றன. குறிப்பாக ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் பஜன் பாடல்களைச் சொல்ல வேண்டும். மண்டப உட்சுவர்களில் மீரா, ஞானேஸ்வரர், ராமதாஸர், போதேத்திரர் என இறைவனின் புகழ் பாடிய பக்தர்களின் திருவுருவங்கள் பளிச்சிடுகின்றன.

தண்ணீர்த் தொட்டிகூட தாமரை வடிவமாகவோ அல்லது ஏதேனும் கலை அம்சம் பொருந்தியதாக இருக்கிறது. பக்தர்கள் தங்கிக்கொள்ள, கேரளப் பாணி ஓட்டுக் கூரையுடன் பல வசதிகளைக் கொண்ட பல குடியிருப்புகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பூம்பாறை முருகனும், மதிகெட்டான் சோலையும்!
Thennangur panduranga temple

இந்தக் கோயிலுக்குக் கொடி மரம் இல்லை. ஒரு காவிக் கொடியைக் கையில் ஏந்தி பல மணி நேரம் ‘ராமா ராமா’ என்று ஜபித்தவாறு கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள் பக்தர்கள். எத்தனை முறை என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல், தாம் சோர்ந்து போகும்வரை இப்படி வலம் வருவது, பாண்டுரங்கன் மீதான அவர்களுடைய பக்தியை நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறது.

ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடரான ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் முயற்சியால் உருவான இக்கோயிலில், அவர் பாண்டுரங்கனை வழிபடுவது போன்ற ஓவியத்தைப் பார்க்கும் போது நம் கண்களில் நீர் துளிர்க்கும். அத்தனை பக்தி பூர்வமாக அமைந்திருக்கிறது அது! இறைவன் மீது எத்தகைய ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தால், அவர், கொஞ்சமும் தயங்காமல் கங்கை நதியில் ஜல சமாதியாகியிருப்பர் என்று வியந்து போற்றவும் தோன்றுகிறது.

இந்த பாண்டுரங்கனையும், ரகுமாயியையும் தரிசித்தால் வாழ்வில் பூரண நிம்மதியும், எந்த சோதனைகளையும் எதிர்கொள்ளும் மனவலிமை பெற்று, அவற்றை வெற்றி காண புதுப்புது உத்திகளும் தோன்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, அனுபவம்.

காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம், தென்னாங்கூர். காஞ்சியில் இருந்து 34 கி.மீ. வந்தவாசியில் இருந்து 6 கி.மீ. உத்திரமேரூரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com