சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு கனவு. ஆனால், எல்லோருக்கும் அந்தக் கனவு நிறைவேறுகிறதா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். அப்படியே ஏதாவது ஒரு நிலத்தை வாங்கினாலும் பல்வேறு காரணங்களால் அதில் வீடு கட்டுவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற தடைகள் இல்லாமல் விரைவில் சொந்த வீடு கட்டவும், புதிய வீட்டின் கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்துவால் ஏற்படும் தடங்கல்கள் நீங்கவும் அவசியம் செல்ல வேண்டிய ஒரு பரிகாரக் கோயில்தான் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகளுக்கும் பழைமையான பூமிநாதர் திருக்கோயில்.
பூமியில் உள்ள 16 வகை பிரச்னைகளை நிவர்த்தி செய்யக்கூடிய கோயில் என்று அகத்தியரே ஓலைச்சுவடியில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தகன் எனும் அசுரன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இதனால் அவதிப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, ஆக்ரோஷமான சிவனும் அந்தகாசுரனை சூலத்தால் வதம் செய்தார். அப்போது ஈசன் நெற்றியில் இருந்து ஒரு துளி வியர்வை பூமியில் விழுந்து அதிலிருந்து உருவான பூதம் ஈசனை நோக்கி தவம் செய்து மூன்று உலகையும் வென்று அழிக்கும் திறன் வேண்டும் என்ற வரத்தைப் பெற்றது.
வரம் பெற்ற பூதம் பூமியை விழுங்க முற்பட, தேவர்கள் அதைத் தடுத்து குப்புற கவிழ்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டனர். ‘எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்’ என்று பூதம் கேட்க தேவர்கள், ‘பூமியில் வீடு கட்டும்போது படைக்கும் அனைத்தும் உனக்கு வந்து சேரட்டும்’ என்றும், அதுமட்டுமல்லாமல், ‘குறிப்பிட்ட நாளில் ஒன்றரை நாழிகையே உனக்கு எழுவதற்கு அனுமதி உண்டு. பூலோக வாசிகள் வீடு கட்டும் உணவுகள் உன்னை வந்து சேர்வதால் உனக்கு வாஸ்து புருஷன் என்று பெயர் உண்டாகும்’ என்று கூறினர்.
இந்தப் புராண நிகழ்வு நிகழ்ந்த இடத்தில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் அமைந்ததால், அவருக்கு பூமிநாதன் என்று பெயர் வந்தது. இங்கே சிவன் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள அம்பாளின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. இக்கோயிலுக்குச் செல்பவர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்கின்றனர் பலன் பெற்றவர்கள். இக்கோயிலில் வன்னி மரம், வில்வ மரம் என்று இரண்டு தல விருட்சங்கள் உள்ளது சிறப்பு. மேலும், நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருப்பதும், ராகு கேது கிரகங்கள் சர்ப்பமாக இல்லாமல் முழு உருவமாக இருப்பதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இக்கோயில் அம்பாள் முன்பு ஸ்ரீமகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் பூமிநாத சுவாமி சுயம்புவாய் சற்றுச் சாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி இத்தல இறைவனை வணங்கியே பூமியை தாங்கும் சக்தியைப் பெற்றதாகவும், அகத்தியரிடம் சாபம் பெற்ற இந்திரன் இத்தல ஈசனை ஆராதித்து பாவ விமோசனம் பெற்றான் என்றும் தல வரலாறு கூறுகிறது. மேலும், இத்தலத்தின் லிங்கம் பல பட்டைகளைக் கொண்டதாக காட்சி தருகிறது. பூமாதேவி ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை இந்த லிங்கத்தில் சாத்தி பூஜித்ததால், இந்தப் பட்டைகள் உருவானதாக வரலாறு கூறுகிறது.
மண் மீதில் எழும் அனைத்துக் குறைகளையும் தீர்க்கும் இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம், கொடிமர விநாயகர், நந்தி, கொடிமரம், பலிபீடத்துடன் நம்மைக் கவர்கிறது. இத்தலத்தில் சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
வாஸ்து புருஷன் எழும் நாளில் இத்தலம் வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு உறுதியான பலன் கிட்டும். வாஸ்து நாளை தவற விட்டால் செவ்வாய்கிழமைகளிலும் இப்பூஜையை நடத்தலாம் என்கின்றனர். வீடு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற இந்தக் கோயிலுக்கு ஒரு முறை சென்று பூமிநாதனை வழிபட்டு வேண்டுதல் வைப்பது சிறப்பு.