
வறுமை மிகக் கொடியது. ஒருவருடைய வாழ்க்கை வறுமையின் கைகளில் சிக்குமானால், அவ்வளவுதான். வறுமையின் கோரப்பிடி, முதலில் நிம்மதியை கெடுக்கும். பிறகு ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை வாழ்வதற்கான தன்னம்பிக்கையும் ஆசையும் அறவே போய்விடும்.
நோயைக் காட்டிலும் கொடுமையானது வறுமை இப்படிப்பட்ட வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டுமா? வாருங்கள், வறுமையை வெல்ல இதோ ஒரு வழி! நம்முடைய பாரத திருநாட்டில் அருளாளர்கள் அவ்வப்போது தோன்றி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள். ஆன்றோர்களுடைய வாக்கு நமக்கு பெரிய வழிகாட்டி அந்த வகையிலே அவர்கள் காட்டுகின்ற ஒரு வழியைப் பற்றி நாம் இங்கே பார்ப்போம்.
சிவபெருமானுடைய வடிவங்கள் மிகப் பல. 'ஏகன் அனேகன்' என்று திருவாசகம் சொல்லும். இப்படிப்பட்ட வடிவங்களில் பைரவர் வடிவம் மிகச்சிறப்பாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பைரவ வடிவத்திலேயே 64 விதமான பைரவ மூர்த்திகள் உண்டு. அவற்றில் ஒன்று தான் ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர்.
அதாவது தங்கத்தை/ செல்வத்தை வசீகரித்து தன் பக்தர்களுக்கு வளத்தை வழங்குகின்ற பைரவர் என்று பொருள். இன்று பல கோவில்களிலும் ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர் இருந்து அருள் புரிந்தாலும், முனிவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தீஸ்வரூபங்களுக்கு அதிக சக்தி உண்டு என்று நம்பப்படுகிறது. சாதாரண மானிடர்கள் ஆகிய நாம், என்னதான் சடங்குகளை முறையாகச் செய்து பிரதிஷ்டை செய்தாலும் முனிவர்கள் தங்களுடைய தவ வலிமையால் பிரதிஷ்டை செய்த மூர்த்திகளுக்கு அதிகமான சக்தி இருப்பது இயல்பே!
அந்த வகையிலே, கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆடுதுறையில், ஸ்ரீ பவளக்கொடி அம்மன் சமேத ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர் மிக சக்தி வாய்ந்தவர். இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் திருஞானசம்பந்தரும், அப்பர் பெருமானும் இங்கே வந்து ஆண்டவனை வணங்கி பாடி அருளியிருக்கிறார்கள்
தென் குரங்காடுதுறை என்பதே இந்த திருத்தலத்தின் உண்மையான பெயர். இது நாளடைவில் குறுகி இன்று 'ஆடுதுறை' என்று அழைக்கப்படுகிறது.
அரசையும், தன் மனைவியையும் இழந்து வருத்தமுற்ற சுக்ரீவன் இங்கே வந்து சிவபெருமானை பிரார்த்தித்து, பிறகு ஸ்ரீ ராமபிரான் அருளால் எல்லாம் திரும்ப கிடைக்கப் பெற்றான் என்பது தல வரலாறு. இங்கு வந்து சில காலம் தவம் செய்த அகத்திய முனிவர் தன் தவ வலிமையால் ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
கிழக்குப் பார்த்த கோபுர வாசல். கொடி மரத்தையும் நந்திப் பெருமானையும் வணங்கிய பின்னர் உள்ளே சென்றால், இடது புறத்தில் இரட்டை விநாயகர் சன்னதி. வலது பக்கத்தில் பவளக்கொடி அம்மன் சன்னதி. கொடி மரத்துக்கும் நந்தி பெருமானுக்கும் நேர் எதிரே ஆபத் சகாயேஸ்வரர் திரு சன்னதி.
சுவாமியை வலம் வரும் வழியில் நால்வர் சன்னதி, தொடர்ந்து ஸ்ரீ அகஸ்திய முனிவர் சன்னதி. முருகன் சன்னதியும் மகாலட்சுமி சன்னதியும் தனியே உண்டு. ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர் நவகிரகங்களுக்கு சற்று தள்ளி தனியாக நின்று அருள் பாலிக்கிறார் கோரைப்பற்கள் சிறிதாக தெரிந்தாலும் புன்னகை தவழும் முகம். நான்கு திருக்கரங்கள். திகம்பர வடிவம். அசாதாரண அழகுடன் காட்சி தருகிறார் பைரவர்.
இனி வறுமையை வெல்ல நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்க்கலாம்.
ஒரே ஒரு முழம் செவ்வரளியோ அல்லது கதம்பமோ போதும், சிவாச்சாரியாரின் உதவி கொண்டு மாலை சாற்றி, ஒரு அர்ச்சனையை செய்து கொள்ளுங்கள். வறுமை போக வேண்டும் என்று உருக்கமாக வேண்டிக்கொண்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
இந்த வழிபாடு முடிந்த உடன் ஏதோ உங்களால் இயன்ற ஓரிரண்டு தர்ம காரியங்கள் மனதார செய்யுங்கள். இப்போதுதான் பள்ளிகள் திறந்திருக்கின்ற சமயம். வறுமையில் வாடுகின்ற மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை, தண்ணீர் பாட்டில், பேனா இப்படி ஏதாவது தர்மம் செய்யலாமே!
வயதானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு நம்மால் இயன்ற சிறிய தர்மம் செய்வது இன்னும் நல்லது. ஆனால், ஒரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டும். “நான் உனக்கு இது செய்கிறேன், நீ என் வறுமையை தீர்ப்பாயாக!” என்று ஏதோ ஒரு பண்டமாற்று வணிகம் போல தர்மம் செய்தால் பிரயோஜனம் இல்லை.
பலனை பற்றி எல்லாம் யோசிக்காது, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்காக உள்ளம் வருந்தி கொஞ்சம் கூட கர்வம் இல்லாது நம்மால் முடிந்ததை செய்வதே உண்மையான தர்மம். பலனை பற்றி எல்லாம் நாம் யோசிக்க தேவையில்லை அதை ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர் பார்த்துக் கொள்வார்!
செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (ராகு காலத்தில்) மற்றும் தேய்பிறை அஷ்டமியிலே இங்கு வந்து ஒரு முறையேனும் இது போன்று வழிபாடு செய்து பாருங்களேன்! உண்மையான பக்தி உடையவர்களுக்கும், இரக்க குணத்துடன் தம்மால் இயன்ற தர்மம் செய்பவர்களுக்கும் ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவர் கண்டிப்பாக அருள் செய்வார். ஒருக்காலும் கைவிடமாட்டார்!
ஆம்! வறுமை தீரும்! வளம் சேரும்! நலம் பெருகும் !வாழ்வு சிறக்கும்! இன்னும் என்ன யோசனை?! வாருங்கள், ஸ்ரீ சுவர்ண ஆகர்ஷண பைரவரை தரிசிக்க ஆடுதுறை கிளம்பலாமா?