
உதகையில் மகாமாரி, மாகாளி இரு தேவியரும் ஒரே கருவறையில் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள காட்டேரி அம்மன் சந்நிதியில் மந்திரித்து தரும் முடி கயிற்றை கட்ட, தோஷங்கள், நோய்கள், பில்லி, சூன்யம் சரியாகும் என்பது நம்பிக்கை .
கோடீஸ்வரி மாரி என்ற கோட்டை மாரியம்மன் திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இருபுறங்களிலும் லட்சுமி, சரசுவதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூ வாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.
கரூர் மகா மாரியம்மன் வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருள் கிடைக்க அருள்கிறாள்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும், மஞ்சளையும் கொடி மரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.
காரைக்குடி முத்துப்பட்டினம், மீனாட்சி புரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளி பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாற்றால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆலயத்தில் திருவாதிரை அன்று 108தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருந்து திக் தேவதைகளை அந்தந்த திசைகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.
தெய்வீக திருவுருவங்களை கருங்கல் அல்லது ஐம்பொன் எனப்படும் பஞ்சலோகத்தால் வடிப்பது வழக்கம். ஆனால் நாகர்கோவிலுக்கு அருகில் முன்னுதித்த நங்கை அம்மனின் வடிவம் கருசர்க்கரை என்னும் தெய்வீக மருந்தால் உருவாக்கப்பட்டுள்ளது. காவி மண், குலு சர்க்கரை, கொம்பரக்கு, செஞ்சாயம், பசு நெய், எள்ளெண்ணைய் என பலவித மூலிகை சாறுகளால் செய்யப்பட்டது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மண்டபத்தில் இருபது நாட்கள் தங்கி ஆறு கால பூஜை பார்த்து பின் அங்குள்ள தீர்த்தம் எடுத்து கண்களில் தடவினால் கண் பார்வை கிடைக்கும். அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தலவிருட்சத்தில் தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொள்ள குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
உலகின் முதல் கண்ணாடி கோயில் மலேசியாவில் உள்ளது. முழுவதும் கண்ணாடியிலான ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு பெரியாச்சி மற்றும் பல சிலைகள், அம்பாள் அனைவருக்கும் தனித்தனி சந்நிதி உள்ளது.
வேண்டுதல் நிறைவேற தீச்சட்டி, தீமிதித்தல், பால் குடம் என பல நேர்ச்சைகள் உள்ளன. பிரார்த்தனை நிறைவேறியதும் காளியம்மனை தரிசித்து வேண்டுதல் நிறைவேற்றி திரும்புகின்றனர்.
அறச்சலூர் அறச்சாலை அம்மன் :
அறம் வளர்த்த ஊர் என்பதால் அறச்சலூர். அதில் வீற்றிருக்கும் அம்மன் அறச்சலூர் அம்மன். ஜாதகப் பொருத்தம் இல்லையென்றாலும் திருமணத்திற்கு அம்மனின் உத்தரவு கிடைத்தால் போதும் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மாங்கல்யத்தை வைத்து வழிபாடு செய்து பின் அம்மனுக்கே அதை காணிக்கையாக்குகின்றனர். ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 24 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
நத்தம் மாரியம்மன் :
திண்டுக்கலுக்கு அருகிலேயே இருக்கும் நத்தம் மாரியம்மன் சொக்கலிங்க நாயக்கரின் அரச பீடத்தை அலங்கரித்த தெய்வம் இந்த நத்தம் மாரியம்மன் என்கின்றனர். நோய்களை தீர்க்கும் தேவியாக நத்தம் மாரியம்மன் அருள்புரிந்து பக்தர்களை காக்கிறார்.
புட்லூர் பிள்ளைத்தாச்சி அம்மன்:
கர்ப்பிணிப் பெண் வடிவில் உலகையே சுமந்து கருணையோடு கால் நீட்டி அமர்ந்திருக்கும் கோலத்தை வேறெங்கும் காண இயலாது. குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவோர் விரைவில் முலைப்பால் கொடுத்து நன்றி செலுத்துகிறார்கள். ஆவடி-திருவள்ளூர் சாலையில் இருக்கிறது ராமாபுரம் என்ற புட்லூர்.