‘ஒருநாள் அம்மன் கோவில் சுற்றுலா’ போகலாமா?

தமிழக அரசு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ‘ஒருநாள் அம்மன் கோவில் சுற்றுலா’ என்ற திட்டத்தை ஏற்படுத்தி குறைந்த கட்டணத்தில் மக்களை அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்கிறது.
amman temples
amman temples
Published on

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடும், திருவிழாவும் களைகட்டும். ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், தீமிதித்தல், வேப்பஞ்சேலை கட்டுவது, பொங்கல் வைத்து வழிபாடு செய்வது, வரலட்சுமி விரதம் போன்ற வழிபாடுகளை பெண்கள் பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து வருகின்றனர். ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகளவு வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ள மாநிலமாகும். அதிலும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல ஆயிரம் கோவில்கள் தமிழகத்தில் உள்ளது. அதுவும் சென்னையில் தெருவிற்கு தெரு, சந்துகளில், மூலைமுடுக்குகளில் அம்மன் கோவில்கள் நிறைந்துள்ளன. இதனை கருத்தில் கொண்ட தமிழக அரசு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ‘ஒருநாள் அம்மன் கோவில் சுற்றுலா’ என்ற திட்டத்தை ஏற்படுத்தி குறைந்த கட்டணத்தில் மக்களை அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடி மாதத்தை முன்னிட்டு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பக்தர்கள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிகச் சுற்றுலா!
amman temples

இந்த திட்டம் வரும் ஜூலை 18-ம்தேதி முதல் ஆகஸ்டு 15-ந் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்) சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ‘ஒருநாள் அம்மன் கோவில் சுற்றுலா’ இரவு 8.30 மணிக்கு முடிவடையும்.

அதன்படி, காலை 8.30 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து புறப்படும் சுற்றுலா பேருந்து காளிகாம்பாள் கோவில், பாரிமுனை அங்காள பரமேஸ்வரி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், புட்லூர், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து சென்ற பின்னர் இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து இறங்கி விடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.1,000 வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் ரூ.800க்கு சுற்றுலா தொகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்பட்டு கற்பகாம்பாள் கோவில், மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில், மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில், மயிலாப்பூர் ஆலயம்மன் கோவில், தேனாம்பேட்டை முப்பாத்தம்மன் கோவில், தியாகராயநகர் பிடாரி இளங்காளி அம்மன் கோவில், சைதாப்பேட்டை அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர் காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு பாதாள பொன்னியம்மன் கோவில் போன்ற அம்மன் கோவில்களை இந்த தொகுப்பில் தரிசனம் செய்யலாம்.

மேலும் இந்த சுற்றுலாவிற்கு வருபவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் ராமேசுவரம் (ஆடி அமாவாசை) சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்பம் உள்ளவர்கள் http://www.ttdconline.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைக்காசு அம்மன் - பெயர் காரணம் தெரியுமா?
amman temples

சென்னையை போல் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களை தரிசனம் செய்ய ரூ.1400ம், திருச்சிக்கு ரூ.1100ம், தஞ்சாவூருக்கு ரூ.1400-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com