காளி மாதாவை எல்லோரும் அறிந்திருக்கிறோம். மேற்கு வங்காளத்தில் தக்ஷிணேஸ்வர் காளியைப் போன்று பிரசித்தமான காளி எது தெரியுமா? அத்ய பீட் காளி மாதா என்பதாகும். 'ஆதிய காளி' என்று அழைக்கப்படும் இந்த காளி தேவி, அத்ய பீட் காளி என்னும் பெயரில் தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் அருள்பாலிக்கிறாள்.
இந்த காளி பீடம் எப்படி இங்கே அமைந்தது என்பதற்கு ஒரு பின்னணி கதை உண்டு.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதான சிஷ்யர்களில் அன்னதானசரண் பட்டாச்சார்யா என்பவரும் ஒருவர். அவர் சிறந்த காளி பக்தராவார்.
ஒரு நாள் அவரின் கனவில், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினார். 'நீ தலையை முண்டகம் செய்து கொண்டு, கங்கையில் நீராடி விட்டு, கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டனுக்கு செல். அதற்கு அருகில் தென்னை மரத்தோடு மற்றொரு மரமும் இணைந்து வளர்ந்து இருக்கும். அதன் அருகில் ஒரு காளி சிலை காணப்படும். அதை எடுத்துக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து விடு.' என்று கூறினாராம்.
பரமஹம்சர் கூறியதை சிரமேற்கொண்டு, அவர் கூறியபடி பயணப்பட்டாராம். அச்சிலையை எடுத்து வந்த பட்டாச்சாரியார், சீடர்களின் உதவியால், 1915 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்தாராம். பிறகு 1965ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
கோயிலின் பிரதான பலிபீடம் மூன்று உபபீடங்களைக் கொண்டுள்ளது. கீழே ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சிலை உள்ளது. நடுவில் காளி மாதா மற்றும் மேல் பலி பீடத்தில் ராதை மற்றும் கிருஷ்ணரின் சிலை உள்ளது.
முழுவதும் சலவை கற்களால் ஆன இக்கோவில் விடியற்காலை 4 அரை மணி முதல் 5:00 மணி வரையிலும், காலை 10:30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 7:00 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.
இங்கு மதிய நேரத்தில் கூப்பன் வாங்கிக் கொண்டு ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம்.
கூப்பன் விலை= ரூ.60/-
அரை டிக்கெட்=ரூ.30/-
கூப்பன் நேரம்= இரவு 09:00 முதல் 12:30 மணி வரை
போக் ஆரம்பம்= காலை 11:45 முதல் மதியம் 01:00 வரை கூட்டத்தைப் பொறுத்தது.
நிறைய பேருக்கு ஆதிய காளி மாதா தக்ஷிணேஸ்வரத்தில் இருப்பது தெரிவதில்லை. ஆனால் இந்த மாதாவை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும் என்று அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேற்கு வங்காளம் செல்பவர்கள் அவசியம் அத்ய பீட் காளி மாதாவை தரிசனம் செய்து, அவளின் அருளைப் பெற வேண்டும்.