ஆலகால விஷம் உண்டு அகிலம் காத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்!

ஆலங்குடி குரு பகவான் கோயில்
ஆலங்குடி குரு பகவான் கோயில்
Published on

வ்வொரு மனிதரின் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்கும் தலையாய பணி நவக்கிரகங்களுக்கு உண்டு. இந்த நவக்கிரகங்களுக்கும் ஒவ்வொரு தனித்தனி தலங்கள் புராண வரலாற்றின் அடிப்படையில் தமிழகமெங்கும் உள்ள ஊர்களில் அமைந்துள்ளன. கிரக பாதிப்பு உள்ளவர்கள் அதற்கென உள்ள நவக்கிரக தலம் சென்று பரிகாரம் செய்வது பக்தர்கள் நம்பிக்கை.

நவக்கிரகங்களில் தனிச்சிறப்புடன் திகழ்பவர் குரு பகவான். ‘குரு பார்க்க கோடி நன்மை’ எனும் சொற்றொடரே குருவின் பெருமைக்கு சான்று. குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. விசுவாமித்திரர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் உண்டு.

சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குரு பகவானை வழிபடுவது வழக்கம்.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் உண்டு, தேவர்களைக் காத்த தலமாதலால் இவ்வூருக்கு, ‘ஆலங்குடி’ என்ற பெயர் உருவானது. இதற்குச் சான்றாக காளமேகப் புலவரின் பாடல் ஒன்று உள்ளது.

‘ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை
ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம்
குடியானேல் வானும் குவலயமும் எல்லாம்
மடியாவோ முற்றொருங்கு மாய்ந்து’

என்பதே அது.

இங்கு உறையும் ஈசனே ஆபத்சகாயேஸ்வரர். இத்தலம் தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98வது தலமாக விளங்குகிறது. ஆலகால விஷத்தை உண்டு உயிர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்ற பெயர் இத்தல இறைவனுக்கு ஏற்பட்டது. இந்த வரலாற்றின் சாட்சியாக இன்று வரை இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை என்று கூறுகிறார்கள். மேலும், தேவர்களுக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தல விநாயகர், ‘கலங்காமற் காத்த விநாயகர்’ என அழைக்கப்படுகிறார்.

இவ்வாலயம் முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சரும் சிவ பக்தருமான அமுதோகரால் நிர்மாணிக்கப்பட்டது. அமைச்சர் செய்த  சிவ புண்ணியத்தில் பாதியேனும் மன்னருக்கும் தரக் கோரிய அரசருக்கு மறுத்த அமைச்சர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இதன் விளைவால் அரசனுக்கு தோஷம் ஏற்பட இத்தல மூர்த்தியை வணங்கி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒடிசாவின் ஒப்பற்ற பாரம்பரிய ஓவியங்களை அறிவோமா?
ஆலங்குடி குரு பகவான் கோயில்

தல விருட்சமாக பூளை என்னும் செடியை கொண்டதால், ‘இரும்பூளை’ என்று பெயர் பெற்று விளங்கும் இத்தலம், ஊரின் நடுவே அழகான ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் அமைந்துள்ளது. இதில் உள்ள அழகான சிற்பங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளன. இத்தலத்தின் உள்ளே சென்றதும் கலங்காமல் காத்த விநாயகர், அம்பாள் தெற்கு நோக்கிய சன்னிதி, சூரிய, சந்திர உத்ஸவர்கள், மேலும் பிராகாரத்தில் எண்ணற்ற தெய்வங்களுடன் வழிபடுபவர்களுக்கு ஆன்மிக அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் கலங்காமற் காத்த கணபதி, ஆபத்சகாயேஸ்வரர்,ஏலவார்குழலி, குரு தட்சிணாமூர்த்தி விமானம் மற்றும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்று புதுப்பொலிவுடன் திகழும் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று சிவனுடன் குருவையும் வணங்கி ஆபத்தின்றி அனைத்து வளங்களும் பெற்று வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com