நான்கு பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் விவாதமாக இருந்தது.
முதல் பக்தர் சொன்னார், “நான் வேதங்கள், மந்திரங்களை முறையாகக் கற்றவன். ஆகவே, சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு” என்றார்.
இரண்டாவது பக்தர், “நான் வேத மந்திரங்களை முறையாகக் கற்றிருப்பதோடு, அதனை மக்களுக்கும் உபதேசம் செய்வதால் சொர்க்கத்துக்கு போகும் தகுதி எனக்குத்தான் இருக்கிறது” என்றார்.
அதையடுத்து மூன்றாவது பக்தர், “வேதங்களைக் கற்பதாலும், அதை பிறருக்கு உபதேசம் செய்வதாலும் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி வந்து விடாது. வேதம் கூறும் நெறிப்படி வாழ்க்கையை முறையாக வாழ முற்படுபவருக்குக்குத்தான் சொர்க்கத்துக்கு போகும் தகுதி உண்டு. அந்தத் தகுதி எனக்குத்தான் இருக்கிறது” என்றார்.
கடைசியாக நான்காவது பக்தர், “நான் கடவுளுக்கான பூஜை, விரதங்களை மிகுந்த ஈடுபாட்டோடு செய்வதால் சொர்க்கத்துக்கு போகும் தகுதி எனக்குத்தான் உண்டு” என்றார்.
இந்த நான்கு பேரின் விவாதத்தை, அருகில் மாட்டுச் சாணத்தில் வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டி கேட்டு சிரித்துக் கொண்டே பதில் கூறினாள், "நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம்” என்று கூறிக்கொண்டே நடந்து சென்றாள்.
அந்த மூதாட்டி சொன்னதைக் கேட்டு வியப்படைந்த அந்த நான்கு பக்தர்களும், அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைக்கான பொருளை அறிந்து கொள்வதற்காக அவளது பின்னே சென்று, “அம்மா, நீங்கள் போனால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கூறினீர்களே, அதற்கான விளக்கத்தைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டனர்.
அதைக் கேட்ட அந்த மூதாட்டி சிரித்துவிட்டு, “நான் சொர்க்கத்துக்குப் போக முடியும் என்று சொல்லவில்லையே? 'நான்’ போனால் சொர்க்கம் போகலாம் என்றுதானே சொன்னேன்” என்றாள் மூதாட்டி.
அதைக்கேட்டு மீண்டும் புரியாமல் விழித்த அந்த நால்வரும், “நீங்கள் சொல்வது ஒன்றும் புரியலியே?” என்றனர்.
அதற்கு அந்த மூதாட்டி, “ஐயா, ‘நான்’ என்று நான் கூறியது என்னை அல்ல. நான் என்னும் அகந்தை போனால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போகலாம் என்று கூறினேன்” என்றாள்.
இதனைக் கேட்ட அந்த நான்கு பக்தர்களும், 'நான்' என்ற அகந்தையால் தாங்கள் பேசியதை நினைத்து வெட்கத்தால் தலை குனிந்தனர்.