தினந்தோறும் நாம், ‘ஹோம் மேட்’ எனப்படும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதுடன், பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஸ்நாக்ஸ்களையும் உண்கிறோம். பாக்கெட் மற்றும் கேன்களில் அடைத்து வரும் சமையல் பொருட்களையும் வாங்கி சமைக்க உபயோகிக்கிறோம். அவை யாவுமே பதப்படுத்துதலுக்கு உட்பட்ட பின்னரே விற்பனைக்கு வருகின்றன. உணவுகளை பதப்படுத்துவதில் நான்கு வகைகள் உண்டு.
1. பதப்படுத்தப்படாத அல்லது குறைந்த அளவு பதப்படுத்துதலுக்கு உட்பட்டவை ஆரோக்கியமானவை.
2. குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்படும், பதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்கள்.
3. தொழிற்சாலைகளில் வைத்துப் பதப்படுத்தப்படும் பொருட்கள். இந்த முறையில் உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகம் பிரித்தெடுக்கப்பட்டுவிடும்.
4. அல்ட்ரா ப்ராஸஸ்ட் உணவுகள் மற்றும் பானங்கள். இவை நம் உடலின் நாளமில்லா சுரப்பிகளுக்கு தீங்கிழைக்கக் கூடியவை.
அல்ட்ரா ப்ராஸஸ்ட் உணவுகள் என்பவை தொழிற்சாலைகளில் மிக அதிகமான அளவுகளில் தயாரிக்கப்படுபவை. அவற்றில் சுவை கூட்டவும், கவர்ச்சிக்காகவும் நீண்ட நாள் வைத்து உபயோகிக்கும் வசதிக்காகவும் என பல காரணங்களுக்காக பல வகையான கெமிக்கல்களும் நிறமிகளும் உப்பு, கொழுப்பு மற்றும் சர்க்கரை போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளில் உணவிலுள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச் சத்துக்களும் நீக்கப்பட்டு, அவற்றில் சேர்க்கப்படும் கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களால் அவை உடலுக்கு நீண்ட நாள் தீங்கு தரும் உணவாக மாறிவிடுகிறது.
சமீபத்தில் கடைகளில் விற்கப்படும் பட்டர் மற்றும் சீஸ் வகைகளை இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ICMR) அல்ட்ரா ப்ராஸஸ்ட் உணவுகளாக அறிவித்துள்ளது. இவை இதய நோய்களை உண்டாக்கும் வாய்ப்புள்ளதால் இவற்றிக்கு மாற்றாக உண்பதற்கேற்ற 8 வகை ஆரோக்கியம் தரும் உணவுகளை இங்கு பார்ப்போம்.
1. வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் மற்றும் சர்க்கரை சேர்க்காத யோகர்ட்.
2. பன்னீர் மற்றும் குளிர் அழுத்தப்பட்ட (Cold pressed) ஆலிவ், அவகோடா மற்றும் தேங்காய் எண்ணெய்.
3. ஆர்கானிக் பால் பொருள் உற்பத்தியாளர்களிடமிருந்து பெறும் காட்டேஜ் சீஸ்.
4. சர்க்கரை மற்றும் ரிஃபைன்ட் ஆயில் சேராத ஆர்கானிக் ஆல்மன்ட் மற்றும் பீநட் பட்டர். இவை ஆரோக்கியமானவை; உடலின் வாத ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கவும் உதவும்.
5. ஃபிரஷ் கிரீம் உபயோகித்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் பட்டர்.
6. சீஸ்ஸுக்குப் பதில், நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் E நிறைந்த அவகோடா பழத்தை பல வகையான உணவுகளில் சேர்த்து உண்ணலாம்.
7. க்ருயெல்ட்டி பிரீ ( Cruelty free) A2 பசும்பாலிலிருந்து பெறப்படும் தெசி க்கீ (Desi Ghee).
8. சிறிதளவு பதப்படுத்துதலுக்கு உட்பட்ட ஃபிரஷ்பரட்டா, ரிக்கோட்டா போன்ற சீஸ் வகைகள் அல்லது பன்னீர்.