
- லட்சுமி ராஜரத்னம்
வால்மீகியை, 'மகரிஷி' என்பர். ராமாயணக் காவியத்தை எழுதியவர் இவரே. அதனால் அதற்கு, 'வால்மீகி ராமாயணம்' என்றே பெயர். இதை, 'ஆதி காவியம்' என்றும் சொல்வார்கள்.
வால்மீகி ஆரம்ப காலத்தில் காட்டில் வழிப்பறி கொள்ளைக்காரராக இருந்தார். இவர் மகரிஷியாகும் காலம் கனிய, நாரதர் அக்காட்டின் வழியே ஏராளமான ஆபரணங்களை அணிந்து வந்துகொண்டிருந்தார்.
கொள்ளைக்காரன் வால்மீகி அவரை நாரதர் என்று அறியாமல் அவரிடம் கொள்ளையடிக்க வளைத்துக் கொண்டார். நாரதர், "அப்பனே, என்னிடம் உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் தந்துவிடுகிறேன். ஆனால், ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். பிறர் பொருட்களைக் கவர்வது பாவமல்லவா? மேலும் மேலும் ஏன் பாவத்தைச் சேர்த்துக்கொள்கிறாய்?" என்று கேட்டார்.
''ஐயா, நீர் சொல்வது சரியே. என் மனைவி பிள்ளைகள், வயதான பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்குப் பொருள் தேவையல்லவா?"
''நீ சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கொள்ளையடிப்பதனால் உண்டாகும் மொத்த பாவத்தையும் நீ ஒருவனே சுமக்கிறாயே. நீ செய்யும் பாவத்தை உனது குடும்பத்தாரும் பங்கு போட்டுக்கொள்கிறார்களா என்று கேட்டு வா" என்றார்.
''அதற்குள் நீர் போய்விட்டால் என்ன செய்வேன்? என்னுடைய இன்றைய பிழைப்பு கெட்டு விடுமே" என்றார் அந்தக் கொள்ளைக்கார வால்மீகி.
''என்னைக் கட்டிப் போட்டுவிட்டுப் போ" என்றார் நாரதர்.
நாரதரைக் கட்டிப் போட்டுவிட்டு தனது வீட்டுக்கு வந்த வால்மீகி, தனது குடும்பத்தாரிடம், கொள்ளையடிப்பதனால் உண்டாகும் எனது பாவத்தை நீங்களும் பங்கு போட்டுக்கொள்கிறீர்களா?' என்று கேட்க, அனைவருமே மறுத்துவிட்டனர்.
விரக்தி மற்றும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த கொள்ளைக்கார வால்மீகி, அதை நாரதரிடம் கூறினார். மேலும், கொள்ளையடிப்பதனால் உண்டான பாபம் முழுவதையும் தாம் ஒருவனே சுமக்கிறோம் என்பதையும் புரிந்து கொண்டார்.
"ஐயா, தங்களைப் பார்த்தால் ஞானம் உள்ளவர்போல் தோன்றுகிறது. எனக்கு வழி காட்டுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.
உடனே நாரதர், "இப்படி மரத்தடியில் உட்காருங்கள். மரா... மரா... என்று தொடர்ந்து சொல்லுங்கள்" என்றார்.
"மரா... மரா..." என்று சொல்லிக்கொண்டே இருந்தால், ராம... ராம... என்ற சப்தம் வருகிறது அல்லவா? 'மரா' என்றால் போக்குகிறவன் என்று பொருள். 'மன்' என்றால் தலைவன் என்று பொருள். எதைப் போக்குகிற தலைவன் என்றால், பாபத்தைப் போக்குகிற தலைவன். அப்படிப் பாபத்தைப் போக்குகிற தலைவனாகிய ஸ்ரீராமனின் நாமத்தைக் கூறியதாலேயே வால்மீகிக்கு ராமாயணக் காவியத்தை எழுதும் பெரும்பேறு கிட்டியது.
பின்குறிப்பு:-
தீபம் ஜுன் 05, 2018 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்