கிராம தெய்வ வழிபாடுகளிலும், சக்தி வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கிய இடம் உண்டு. பிராம்ஹி , மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய 7 பேரும் 'சப்த கன்னிகள் ' என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த சப்த கன்னிகள் தனித்தனியாக சிவபெருமானை வழிபட்ட 7 கோவில்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன.
இந்த 7 கோவில்களும் 'சப்த மங்கை தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்னைகளையும் நீக்கும் நலங்களாக இந்த சப்த மங்கை தலங்கள் அமைந்திருக்கின்றன.
சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது சக்கரமங்கை. இதனை 'சக்கராப்பள்ளி ' என்றும் அழைப்பர். இங்கு உள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'பிராம்கி 'வழிபட்ட தலமாகும். இங்கு மூலவராக சக்கர வாகீஸ்வரரும் அருள் பாலிக்கின்றனர். பார்வதி தேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இதுவாகும். கோவிலின் தலவிருட்சம் வில்வமரம். இக்கோவில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அய்யம்பேட்டைக்கு அருகில் சக்கராப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது.
சப்தமங்கை தலங்களில் இரண்டாவது தலமாக இருப்பது 'அரியமங்கை'. இங்குள்ள சிவத்தலம் சப்தமாதர்களில் மகேஸ்வரி வழிபட்ட தலமாகும். இங்குள்ள இறைவன் அரிமுத்தீஸ்வரர் என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்டி அருளியதலம் இது. கோவிலின் தலவிருட்சம் நெல்லி மரம் . தஞ்சை - கும்பகோணம் சாலையில் சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலடி என்ற ஊரில் இறங்கி சிறிதுதூரம் நடந்து சென்றால் கோவிலை அடையலாம்.
சப்தமமங்கை தலங்களில் மூன்றாவது தலமாக இருப்பது சூலமங்கை. தற்போது இவ்வூர் 'சூலமங்கலம் ' என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்தமாதர்களில் 'கவுமாரி' வழிபட்ட தலமாகும். இத்தல இறைவன் கிருத்திவாகேஸ்வரர் என்றும் அம்பாள் அலங்காரவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவிக்கு சிவபெருமானின் சூல தரிசனம் கிடைத்த தலம். அம்பாள் இங்கு மங்கை வடிவில் காட்சியளிக்கிறாள். கோவிலின் தலவிருட்சம் வில்வமரம். இக்கோவில் தஞ்சை கும்பகோணம் சாலையில் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அய்யம்பேட்டைக்கு அருகில் சூலமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது.
சப்த மங்கை தலங்களில் நாலாவது தலமாக இருப்பது 'நந்திமங்கை'. இவ்வூர் 'நல்லிச்சேரி' எனவும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் ' வைஷ்ணவி ' வழிபட்ட தலமாகும். இறைவன் ஜம்புநாதசுவாமி என்றும் அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவி இங்கு சிவபெருமானின் கழல் தரிசனத்தை பெற்றாள். கோவிலின் தல விருட்சம் நாவல் மரம். தஞ்சையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் நல்லி சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
சப்தமங்கை தலங்களில் ஐந்தாவது தலமாக இருப்பது 'பசு மங்கை'. இவ்வூர் பசுபதி கோவில் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'வராகி ' வழிபட்ட தலமாகும். இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அம்பாள் பவள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். கோவில் மாட கோவில் அமைப்பை கொண்டதாகும். பார்வதி தேவிக்கு தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இதுவாகும். கோவிலின் தலவிருட்சம் வில்வ மரம் . இத்திருக்கோவில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் பசுபதி கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
சப்த மங்கை தலங்களில் ஆறாவது தலமாக இருப்பது 'தாழமங்கை'. இவ்வூர் தாழமங்கை, தாயமங்கலம் என அழைக்கப்படுகிறது. சப்தமாதர்களில் இந்திராணி வழிபட்ட தலமாகும் . இத்தல இறைவன் சந்திர மௌலீஸ்வரர் என்றும் அம்பாள் ராஜராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவி பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. கோவிலின் தலவிருட்சம் தாழை மரம். இக்கோவில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாழமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது.
சப்த மங்கை தலங்களில் ஏழாவது தலமாக இருப்பது 'திருப்புள்ள மங்கை'. . இங்குள்ள சிவத்தலம் சப்த மாதர்களில் 'சாமுண்டி' வழிபட்ட தலமாகும். இறைவன் ஆலந்துறை நாதர் என்றும் அம்பாள் அல்லியங் கோதை என்றும் அழைக்கப்படுகின்றனர். பார்வதி தேவி சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இதுவாகும். கோவிலின் தலவிருட்சம் ஆலமரம். தஞ்சை கும்பகோணம் சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பசுபதி கோவில் என்னும் ஊரில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது .
பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்னைகளையும் நீக்கும் தலங்களாக இருப்பதால் இந்த சப்த மங்கை தலங்களுக்கு சென்று தரிசித்தால் அனைத்தும் நீங்கும்.