ஒரே கோவிலில் எட்டு ஸ்தலவிருட்சங்கள்!

 சிவயோகநாதர் கோவில்
சிவயோகநாதர் கோவில்

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் பிரத்யோகமாக ஒரு ஸ்தல விருட்சம் அமைந்திருக்கும். சில கோவில்களில் இரண்டு அல்லது மூன்று ஸ்தல விருட்சங்களும் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவிசநல்லூரில் உள்ள சவுந்திரநாயகி உடனுறை சிவயோகநாதர் கோவிலில் எட்டு ஸ்தலவிருட்சங்கள் அமைந்துள்ளது அபூர்வம். இக்கோவிலில் வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என எட்டு ஸ்தலவிருட்சங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமின்றி இத்தலத்தில் பல்வேறு அதிசயங்கள் அமைந்துள்ளன.

பொதுவாக சிவாலயங்களில் இராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடிமரம் காட்சியளிக்கும். அடுத்ததாக பலிபீடமும் நந்தியையும் தரிசிக்கலாம். ஆனால் இக்கோவிலில் முதலில் காட்சி தருவது நந்தியே.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
 சிவயோகநாதர் கோவில்

சித்திரை ஒன்று இரண்டு மூன்று தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது விழும் அதிசயமும் இக்கோவிலில் நிகழ்கிறது. இத்தலத்து ஈசன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்தினால் கருவறைக்குள் உள்ள லிங்கத்திருமேனியின் மேல் பகுதியில் ஏழு சடைகள் காட்சி தருகின்றன.

கோவிலின் முதலாம் பிரகாரத்தில் மேற்கு பார்த்த ஒரு சன்னதியில் ஞானகால பைரவர், சுவர்ணாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோகபைரவர் என நான்கு பைரவர்கள் சதுர்கால பைரவர்களாக அமைந்துள்ளதும் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

சோழர் மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் உள்ளன. சோழர்களின் கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பெயர் “திருவிசலூர் தேவபட்டாகரர் சிவயோகநாதர்” என வழங்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இரண்டாம் பராந்தக சோழன் பொறித்த கல்வெட்டில் கோவிலில் விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் நிவந்தம் அளித்த தகவல்கள் உள்ளன. இராசேந்திரன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் மன்னர் கோவிலுக்கு அளித்த நிலக்கொடை பற்றிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலில் மற்றொரு அதிசயமும் உள்ளது. அது சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம். இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரசோழன் ஆட்சிக் காலத்தில் மதிற்சுவரில் இக்கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி கடிகாரம்
சூரிய ஒளி கடிகாரம்

கோவிலின் தென்புறம் அமைந்துள்ள மதிற்சுவருக்கு அருகில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது. இரண்டாம் பராந்தக சோழன் என அழைக்கப்படும் சுந்தர சோழன் (957–973 AD) காலத்தில் அமைப்பட்டதாகக் கருதப்படும் இக்கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் இக்கடிகாரம் வடிவமைக்கப் பட்டுள்ளது. சூரியஒளி உள்ளவரை மட்டுமே இக்கடிகாரத்தைப் பயன்படுத்தி நேரத்தை அறிய முடியும்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவிலும், திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com