
-பொன்னம்மாள்
கைகேயியின் தந்தை பட்சி பாஷை, மிருக பாஷை, ஊர்வன பாஷை எல்லாம் அறிந்தவர். ஒரு நாள் தன் மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்க, அதை மென்றவர் ஊர்ந்து செல்லும் எறும்புகள் பேசுவதை உற்றுக் கேட்டார்.
முன்னால் சென்ற எறும்பைப் பார்த்து பின்னால் வந்த எறும்பு, "அன்பே! ஏன் நின்று விட்டாய்?" என்று கேட்டது. முன்னால் சென்ற எறும்பு, "மேலே செல்ல முடியாதபடி கட்டில் தடுக்கிறது" என்றது.
"அப்படியானால் கட்டிலைத் தூக்கி எறிந்து விட்டுப்போக வேண்டியதுதானே" என்றது ஆண் எறும்பு. அரச தம்பதிகள் அமர்ந்திருக்கும் கட்டிலை எடுத்து எறிந்தால் பாபம் சம்பவிக்கும்" என்று பெண் எறும்பு கூறுவும், "எறும்பாவது கட்டிலைத் தூக்கி எறிவதாவது! என்ன வேடிக்கை" என்று சிரித்தார் அரசர்.
''எதற்கு சிரித்தீர்கள்?" என்று கேட்டாள் ராணி. "இந்த எறும்புகள் பேசியது சிரிப்பை வரவழைத்தது" என்றார் மன்னர்.
''அப்படியென்ன பேசிக்கொண்டன?" என விடாமல் கேட்டாள் அரசி. "எங்களது தேவ பாஷை. இதை நீங்கள் எவரிடமாவது வெளியிட்டால் உங்கள் தலை ஆயிரம் சுக்கலாக வெடித்துவிடும்" என்றது ஆண் எறும்பு.
அரசர் அதைச் சொன்னார். அரசி, "அதெல்லாம் பொய். என்னைப் பற்றி, என் பிறந்த விட்டைப் பற்றி எதையோ ஹாஸ்யமாக நினைத்துச் சிரித்திருக்கிறீர்கள். இப்போது உண்மையை வெளியிடாவிடில் தூக்கிப் போட்டுக் கொள்வேன்" என்று பயமுறுத்தினாள். அப்போதே மயானத்தில் கட்டை அடுக்கச்சொன்னார் அரசர். மந்திரிகளும், தளபதிகளும் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். "என் தலை வெடித்த பிறகாவது உண்மையை உணர்ந்துகொள்" என்றவர், கட்டையின் மேல் அமர்ந்து கொண்டு "தலை சிதறினாலும் உடலுக்காவது நெருப்பு வையுங்கள்" என்றார்.
சற்று தூரத்தில் இரண்டு ஆடுகள் கட்டப்பட்டிருந் தன. பெண் ஆடு, ஆண் ஆட்டிடம், ''அந்தக் கிணற்றுக்குள் புல் பசேலென்றிருக்கிறது. நாளைக்குப் பறித்துத் தருகிறாயா" என்று கேட்டது.
அதற்கு ஆண் ஆடு, "உன் பேச்சைக் கேட்டுக் கிணற்றில் இறங்கினால் விழுந்து செத்து விடுவேன். நானென்ன அரசனா? முட்டாள்தனமாக உயிரை விட... உன் உறவே இனி எனக்கு வேண்டாம். என் அருகில் வராதே" என்றது.
அரசனுக்கு ஞானோதயம் பிறந்தது. கட்டையிலிருந்து கீழே இறங்கினான். "கணவனின் நலனில் அக்கறையில்லரத, பிடிவாதக்காரியான நீ பிறந்த வீட்டுக்குப் போ" என்று அனுப்பிவிட்டு ராஜ்ஜியத்துக்குத் திரும்பினார்" அப்பேற்பட்டவளின் பெண்தானே கைகேயி! தசரதர் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ராமனைக் காட்டுக்கு அனுப்புகிறாள்" என்று வசிஷ்டர், அமைச்சர் சுமந்திரரிடம் வருத்தப்பட்டார்.
(கர்ண பரம்பரைக்கதை)
பின்குறிப்பு:-
தீபம், ஜூன் 05, 2018 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்