கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித வைணவ தலம் குருவாயூர் திருத்தலமாகும். கண்ணன் குழந்தை உருவில் நின்று விளையாடும், அருளாட்சி புரியும், கருணைப் பொழியும், திருத்தலம் தான் குருவாயூர். பத்து அவதாரங்கள் எடுத்து தீயவர்களை அழித்து உலகை காத்த பச்சை நிற குழந்தை தான், இந்த உலகத்தையே தன் வாய்க்குள்ளே அடக்கி இதோ பார் அம்மா என்று காட்டிய அந்த குழந்தைதான், கொஞ்சி கொஞ்சி பேசி பக்தி இயக்கத்துடன் கோபியர் தன்னை சுற்றிவர செய்த அந்த குழந்தைதான், அஞ்சாதே அர்ஜுனா அனைத்துக்கும் நானே மூலாதார நாயகன் உன் கடமையைச் செய் என்று ஐந்தாம் வேதம் எனப்படும் கீதையை அருளிய அந்த குழந்தைதான், உன்னி கிருஷ்ணனாக காட்சி அளிக்கும் திருத்தலம் குருவாயூர்.
குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த திருத்தலம் குருவாயூர் ஆகும் . உன்னிகிருஷ்ணன் விக்ரகம் சாதாரணமானதன்று. சாதாரண கல்லால் ஆன விக்கிரகமும் அன்று. பாதாள அஞ்சனம் எனும் அபூர்வ புனித பொருளால் ஆன விக்கிரகமாகும்.
குருவாயூர் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் கொடி மரத்தில் இருக்கும் பலிபீடம் குருவுக்கும் வாயுவுக்கும் அமைந்த அதிஷ்டானம் எனப்படுகிறது. பொழுது புலர்கிறது என்றால் குருவாயூரில் மாத்திரம் விடியற்காலை மூன்று மணி என்று அர்த்தம். அதுதான் குருவாயூரப்பன் நிர்மால்ய தரிசனம் காணும் வேளை. நிர்மால்ய தரிசனம் என்பது முந்தைய நாளன்று அலங்காரம் செய்யப்பட்ட மலர்மாலைகள் துளசி மாலைகள் ருத்ராட்சங்கள் ஆகியவற்றுடன் அதிகாலையில் குருவாயூரப்பன் தரிசனம் தரும் காட்சியாகும். இது முக்கியமான தரிசனமாகும்.
திருப்புக்கா தரிசனம் என்பது இரவு நேரத்தில் பகவான் தருகிற தரிசனமாகும். பகவானின் திவ்ய திருவுறுத்தின் முன்பு அஷ்ட கந்தங்களைஅதாவது எட்டு வகை வாசனை பொருட்களை தூபமாக பயன்படுத்துவார்கள். குருவாயூரப்பன் திருக்கோவிலில் மூலஸ்தானத்தில் வேற எந்த உருவச் சிலையும் இல்லை.
கோவில் பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், தேவி துர்கா மூர்த்தங்களுக்கு தனி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் பகவானை சன்னதியின் வெகு தூரத்தில் இருந்து கூட தரிசிக்க முடியும். மூலஸ்தான நுழைவாயில் மிகச்சிறியதாகும் மிகப்பெரிய தீப ஸ்தம்பம் துவஜஸ்தம்பம் பலிகல் ஆகியவை எல்லாம் இருந்தாலும் கூட பகவான் தரிசனத்தை மறைக்க முடியாத ஒரு அமைப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த குருவாயூர் கோவிலில் கிழக்கு நுழைவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருட சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள தரையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் முன்பு அமைந்திருந்த கருடன் சிலையை அகற்றிவிட்டு வெண்கல சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது. கண்ணூரை சேர்ந்த சிற்பி உன்னி கானாயி தலைமையிலான சிற்பிகள் அடங்கிய குழு உருவாக்கிய இந்த வெண்கல சிலையை நன்கொடையாக அளித்துள்ளார் ஒரு பக்தர்.
குருவாயூரில் நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு எள்ஆட்டிய எண்ணையில் தைலாபிஷேகம் நடக்கிறது. பின்பு எண்ணெய் நீங்க வாகை பொடி பூசப்படுகிறது. இந்த வாகைச் சாத்து அபூர்வ பிரசாதமாகும். வாகை சாத்துக்கு பிறகு வேதம் ஓதும் நம்பூதிரிகள் புருஷ சூக்தம் சொல்ல சங்கு அபிஷேகம் நடக்கிறது. பின்பு சுத்து நீர் அபிஷேகம் நடக்கிறது. பின் சுத்த அன்னம் என்னும் மலர் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இப்படி தொடரும் பூஜை முறையை அமைத்துக் கொடுத்தவர் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள்தான் என்று அறியும் போது சிவ விஷ்ணு பேதத்தை கடந்து விளங்குகிறது குருவாயூர் தலம்.