தீராத நோய் தீர்க்கும் அகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர்!

Agathyanpally Agatheeswarar temple!
Anmiga katturaigal
Published on

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

தேவாரப் பாடல் பெற்ற தமிழ்நாட்டின் 274 சிவாலயங்களில், இது 190-வது ஆலயமாகும். அதேபோல் தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரை தலங்களில், 126-வது தலம் இது.

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

குலசேகர பாண்டியன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவருக்கு தீராத நோய் ஏற்பட்டது. அப்போது அவர் இத்தல உற்சவத்தை நடத்தியதன் பலனாக, அவரது நோய் நீங்கியது.

இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது.

எமதர்மராஜன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் அதன் அதன் திசையைத் தவிர்த்து, ஒரே திசையைப் பார்த்தபடி அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.

சிவன்-பார்வதி திருமணம் கயிலை மலையில் நடைபெற இருந்தது. அதைக்காண தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்ததால் அந்தப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகை சமநிலைபடுத்த அகத்தியரை, சிவபெருமான் தென்பகுதிக்கு அனுப்பினார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியருக்கு, சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளினார். அகத்தியர் வழிபட்டதால் இந்த ஊர் ‘அகத்தியான் பள்ளி’ என்று பெயர் பெற்றது என்பது தலவரலாறு.

இதையும் படியுங்கள்:
மஹாபாரத மர்மம் - "பொய் சொல்லலாம்” கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்கும் தர்மம்!
Agathyanpally Agatheeswarar temple!

இந்த ஆலயத்தில் தீராத நோய் தீரவும் திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், செல்வ வளம் பெருகவும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள், இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் சாலையில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அகத்தியான் பள்ளி திருக்கோவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com