
கன்யாகுப்ஜம் எனும் நகரத்தில் வாழ்ந்த அஜாமிளன் எனும் அந்தணர், பால்வினைத் தொழில் புரியும் பெண்னின் வலையில் சிக்கி, மனைவி மற்றும் குடும்பத்தை மறந்தான். விலை மாதுவுடன் தொடர்ந்து தாம்பத்தியம் நடத்திய அஜாமிளன், வறுமை காரணமாக திருட்டுகளில் ஈடுபட்டு பொருள் சம்பாதித்தான். விலை மாது மூலம் அஜாமிளனுக்கு பத்துக் குழந்தைகள் பிறந்தனர். கடைசி குழந்தைக்கு நாராயணன் எனப் பெயரிட்டான்.
எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜாமிளன் மரணப் படுக்கையில் இருந்த போது, எம தூதர்களைக் கண்டு பயந்த அஜாமிளன், தன் மகன் நாராயணனின் பெயரைச் சொல்லிச் சொல்லி அழைத்தான். விஷ்ணுவின் திருநாமத்தைக் கேட்டதும், விஷ்ணு தூதர்கள் அஜாமிளனை எமதூதர்களின் பிடியில் இருந்து மீட்கத் தோன்றினர். எமதூதர்கள் அஜாமிளனை எமதேவன் முன்பு கொண்டு நிறுத்தினர். அங்கு சென்ற விஷ்ணு தூதர்கள் அஜாமிளனை விடுவித்துத் தங்களிடம் ஒப்படைக்கும்படி வேண்டினர். எமதேவன் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அப்போது விஷ்ணு தூதர்கள் எம தேவனிடம், “இறைவன் விஷ்ணுவின் பெயரை உச்சரிப்பது அல்லது நாம ஜெபம் செய்தல் அல்லது பாராயணம் செய்வதால், ஒருவன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு வைகுண்டம் அடையும் வாய்ப்பைப் பெறுவான் என்பதைத் தாங்களும் அறிவீர்கள்” என எடுத்துக் கூறினர்.
அதனைக் கேட்ட எமதேவன், "அஜாமிளன் அழைத்தது, அவன் மகன் நாராயணனைத்தான். இறைவன் நாராயணனை அவன் அழைக்கவில்லையே” என்றார்.
விஷ்ணு தூதர்கள், “ஒருவன் இறக்கும் வேளையில், இறைவன் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தாலே, அவனுக்கு வைகுண்டம் கிடைக்க வேண்டும் என்பதே நடைமுறை. அவன் முன்பு செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கி, அவன் வைகுண்டம் செல்வதைத் தாங்கள் எவ்வழியிலும் தடை செய்ய முடியாது” என்று சொல்லி எமனிடமிருந்து அவனை மீட்டு வைகுண்டம் கொண்டு சென்றனர்.
தனது கடமைகளையெல்லாம் புறக்கணித்து, பாவ வாழ்க்கை நடத்திய அஜாமிளன் வைகுண்டம் அடைய முடிந்தது.
ஒருவர் இறக்கும் வேளையில் இறைவன் விஷ்ணுவின் பெயர்களைச் சொல்வதன் மூலம், எமதூதர்களின் பிடியிலிருந்து விலகி வைகுண்டம் சென்றடைய முடியும் என்பதை அஜாமிளன் எனும் கதை மாந்தர் மூலம் பாகவத புராணம் எடுத்துக் கூறுகிறது. மேலும், ஒருவர் செய்த பாவங்கள் மற்றும் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவதற்கான திறவுகோலாக உள்ள இறைவன் விஷ்ணு பெயரின் பெருமையையும் அஜாமிளன் கதை மூலம் பாகவத புராணம் எடுத்துக் கூறுகிறது.