அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் மகத்துவம்!

ஆடி மாதமும் அம்மன் கூழும்
ஆடி மாதமும் அம்மன் கூழும்
Published on

டி மாதத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது. சூரியன் தென் திசையில் பயணிக்கும் காலம் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்ற ஆறு மாதங்கள். ஆகவே, இந்த ஆறு மாதங்கள் தட்சிணாயனம் எனப்படும். தட்சிண் என்ற வடமொழிச் சொல்லுக்கு தெற்கு என்று பொருள். அயனம் என்றால் வழி. இந்த ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் காலம் உத்தராயனம். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் உத்தராயன புண்ணிய காலங்கள். இந்த ஆறு மாதங்கள் தேவர்களின் பகல் பொழுது.

ஆடி மாதம் முதல் நாள் ஆடிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சூரியன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பிரவேசிக்கிறான். கடக ராசியை சூரியன் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 31 நாட்கள், 28.20 நாழிகைகள். ஆகவே, ஆடி மாதம் 31 அல்லது 32 நாட்களைக் கொண்டிருக்கும். இந்த வருடம் ஆடி மாதம் 31 நாட்கள் கொண்டது.

ஜூலை 29, ஆடிக் கிருத்திகை. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் கிருத்திகை நட்சத்திரம் கார்த்திகேயனுக்கு உகந்தது. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தட்சிணாயன ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாத கிருத்திகை, உத்தராயன தை கிருத்திகை. இந்த நாட்களில் முருகன் வழிபாடு திருமணத் தடையை நீக்கும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஆகஸ்ட் 3, ஆடிப் பெருக்கு. இதனை ஆடிப்பதினெட்டு, ஆடி நோம்பி என்றும் கூறுவர். பொதுவாக, இந்து பண்டிகைகள், நட்சத்திரம், திதி, கிழமை வைத்து கொண்டாடப்படும். நாட்களைக் கணக்கில் கொண்டு அனுசரிக்கப்படுவதில்லை. ஆடிப் பதினெட்டு மட்டுமே, நாள் எண்ணிக்கையை வைத்து அனுசரிக்கப்படும் பண்டிகை. தென்மேற்கு பருவத்தில், நீர் சேமித்து வைக்கும் இடங்களில் பெய்த மழையால், ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். இந்த நாளில் நம்பிக்கையுடன் விதை விதைப்பர். இப்போது நெல், கரும்பு ஆகியவற்றை விதைத்தால், தை மாதத்தில் அறுவடை செய்வதற்கு முடியும். இதனைக் கருத்தில் கொண்டு உருவான பழமொழிதான்,  ‘ஆடிப் பட்டம் தேடி விதை.’

இதையும் படியுங்கள்:
ஆலகால விஷம் உண்டு அகிலம் காத்த ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்!
ஆடி மாதமும் அம்மன் கூழும்

ஆகஸ்ட் 4ம்  தேதி வருகின்ற ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் என்று முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான நாள். அனைத்து அமாவாசை தினத்தன்றும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது நல்லது. அப்படி செய்ய இயலாதவர்கள், வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகளான தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்ப நன்மைக்கு வழி வகுக்கும்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குச் சிறந்த மாதமாகச் சொல்வார்கள். ஆடி வெள்ளிகிழமைகளில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெறும். ஆகஸ்ட் 16, வரலட்சுமி விரதம். ‘பித்தா, பிறைசூடிப் பெருமானே’ என்று சிவ பெருமானை விளித்து தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில். ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ திருப்பாவை அருளிய ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடி மாத பூர நட்சத்திரத்தில். கி.பி. 11ம் நூற்றாண்டில், செல்வம் கொழிக்கும் வணிகக் குடும்பத்தில் பிறந்து, செல்வத்தின் நிலையாமையை உணர்ந்து துறவறம் பூண்ட பட்டினத்தார் பிறந்தது ஆடி மாதத்தில். அவர் பாடிய பாடல்கள் சைவத் திருமுறைகளில், பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com