பனையேறி – பாம்பு – மாணிக்கம் – மன்னன் – மூக்குத்தி அம்மன்!

பகவதி அம்மன்...
பகவதி அம்மன்...

-தா. சரவணா

விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக,  அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் கன்னியாகுமரி பகவதி அம்மன்.

திருவிதாங்கூர் மகாராஜாவின்  ஆட்சிக்கு உட்பட்டு கன்னியாகுமரி இருந்த காலம். அந்தக் காலத்தில் பனையேறி ஒருவன் இருந்தான். அவனுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. ஆனால், அவன் மனைவி ஒவ்வொரு முறை கருவுறும்போதும் அவனுக்குப் பெண் குழந்தை மட்டுமே பிறந்துகொண்டு இருந்தது.

ஒவ்வொரு முறையும் அவன் மனைவிக்கு பிரசவம் ஆனதும் அவன் முதல் மகள்தான் அவனிடம் வந்து குழந்தை பிறந்த செய்தியைச் சொல்லுவாள். இப்படியே அவனுக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துவிட்டன. இதனால் மனம் வருந்திய அவன், ‘இனி நமக்கு பெண் குழந்தை பிறந்தது என்று நம் மகள் வந்து நம்மிடம் சொல்லும்போது நாம் பனையின் உச்சியில் இருந்தால் அப்படியே இரண்டு கைகளையும் மரத்தில் இருந்து விடுவித்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்’ என்று முடிவு செய்தான்.

இந்நிலையில் அவன் மனைவி 6வது முறையாக கருவுற்றாள். அப்போது வழக்கம்போல் அவனது முதல் பெண் ஓடி வந்து, “அப்பா, அம்மாக்கு பிரசவம் ஆயிடுச்சு. தங்கை பிறந்திருக்கா” என்று சொன்னாள். ஆனால், அந்த நேரம் இவன் பனை மரத்தில் இருந்து கீழே இறங்கி இருந்தான். அதனால் அவனால் உடனே தற்கொலை செய்ய முடியவில்லை. 7வது முறையும் இவன் பனையில் இருந்து இறங்கிய பிறகே முதல் மகள் வந்து பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சொன்னாள்.

இந்நிலையில் அவன் மனைவி 8வது முறை கருவுற்றாள். இம்முறையும் அவன் பனையை விட்டு இறங்கிய பிறகே அவன் மூத்த மகள் வந்து 8வதாக பெண் பிறந்த செய்தியை சொல்ல, மனம் வெறுத்துப்போன அவன் இனி நாம் உயிர் வாழவே கூடாது என முடிவு செய்து அருகில் இருந்த பாம்பு புற்றில் தன் கையை விட்டான். பாம்பு கடித்து விடும். நாம்  உயிரை விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.

ஆனால், அம்பாளின் விருப்பம் வேறாக இருந்தது. அவன் புற்றின் உள்ளே கையை விட்டதும் கையில் ஏதோ சூடு பட்டதுபோல உணர்ந்தான். சூடு தாங்க முடியாமல் கையை வேகமாக வெளியே இழுத்து பார்க்கும்போது, அவன் கையில் ஏதோ ஒன்று தகதகவென மின்னியது. புற்றில் இருந்த முதிர்ந்த நாகம் அவன் கையில் நாகரத்தினத்தை உமிழ்ந்து இருந்தது.

அது என்னவென்று அறியாத அவன் அதனை உடனே கொட்டாரத்திற்கு (அரண்மனைக்கு)  கொண்டு சென்றான். அதை மகாராஜாவிடம் கொடுத்தான். அதை பெற்றுக்கொண்ட மகாராஜா, அவரது குதிரையை அவிழ்த்து விட்டு அது எவ்வளவு தூரம் ஓடுகிறதோ அவ்வளவு இடத்தையும் அவன் பெயரில் எழுதி வைக்கச் சொன்னார். அவனும் மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அன்றிரவு மன்னரின் கனவில் ஒரு சின்னஞ்சிறு பெண் தோன்றி, “மன்னா! இன்று காலை அரண்மனை தர்பாரில் உன்னிடம் ஒருவன் நாகரத்தினம் கொண்டு வந்து தந்தானே. அதை நீ வாங்கி வைத்துக்கொண்டாயே. அந்த நாகரத்தினத்தில் எனக்கு ஒரு மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து தரக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு மறைந்துவிட்டாள்.

இதையும் படியுங்கள்:
கோபுரத்தில் ஏற்றும் கோமேதகத்தின் பலன்கள் பற்றித் தெரியுமா?
பகவதி அம்மன்...

திருவிதாங்கூர் மன்னர் மறுநாள் காலையில் நம்பூதிரிகளை வரவழைத்து தான் இரவு கண்ட கனவைக் கூறி அந்தச் சிறு பெண் யார் என பிரசன்னம் வைத்து கண்டுபிடிக்கும்படி கூறினார். நம்பூதிரிகள் பிரசன்னம் வைத்து பார்க்கும்போது, அது வேறு யாரும் அல்ல. கன்னியாகுமரி பகவதி அம்மன்தான் என்பது தெரியவந்தது.

நம்பூதிரிகள் கூறியதை கேட்ட  மன்னர், உடனடியாக தேவி கன்னியாகுமரி பகவதிக்கு நாகரத்தினத்தில் மூக்குத்தியும், புல்லாக்கும் செய்து கொடுத்தார். அதுதான் இன்றும் அன்னை அணிந்துகொண்டு இருக்கிறாள்.

விளக்கொளியில் மூக்குத்தி ஜொலிக்க கன்னியாக, அன்னையாக எல்லோருக்கும் அருள் புரிந்து வருகிறாள் கன்னியாகுமரி பகவதி அம்மன். அன்னையின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com