
திருமூலர் தனது தேன் பாடலின் மூலம், இறைவனை அநுபவத்தால் மட்டுமே உணரமுடியும் என்பதை விளக்கமாக கூறியுள்ளார்.
அது என்ன தேன் பாடல்.?
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
"வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
"தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
"ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!
அருமையான இப்பாடலின் விளக்கத்தை உணர்த்தும் கதை ஒன்று பின்வருமாறு:
அரசமரத்தின் கீழ் ஒரு பெரியவர் அமர்ந்து கண்களை மூடி கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சொல் துடுக்கு கொண்ட மாணவன் ஒருவன் அங்கே வந்தான். அவரை உற்றுப் பார்த்தான்.
ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகிறீர்கள்? சுகமாகப் படுத்து உறங்கலாமே'' என்றான்.
தம்பி! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.'
ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் நன்கு படித்தவன். நூலறிவு படைத்தவன். கடவுள்! தியானம்! என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீங்கள் கண்ணால் கண்டதுண்டா?
இல்லை! உணர மட்டுமே முடியும்.'
"என்ன உணர்வீர்களா? கடவுளைக் கையால் தொட்டதுண்டா?''
"இல்லை.''
"கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்ததுண்டா?''
"இல்லை.''
"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? கடவுளைக்
கண்ணால் கண்டதில்லை; மூக்கால் முகர்ந்ததில்ல; கையால் தொட்டதில்லை; இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்களே?
கடவுள் என்பவர் கறுப்பா, சிவப்பா? பதில் கூறுங்கள்.
"நல்ல கேள்வி தம்பி! உன் சட்டைப் பையில் என்ன வைத்திருக்கிறாய்?''
"தேன் பாட்டில்.''
"தேன் இனிக்குமா? கசக்குமா?'
"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா?
தேன் இனிக்கும் என்பதை எத்திக்கும் ஒப்புக்கொள்ளும்.''
"தம்பி! இனிக்கும் என்றாயே; அந்த இனிப்பு கறுப்பா? சிவப்பா? இனிப்புக்கு என்ன உருவம்? நல்ல அறிஞனாகிய நீ சற்று விளக்கமாக கூறுகிறாயா?
மாணவனோ திகைத்தான். இனிப்பு என்ற ஒன்று கறுப்பா? சிவப்பா? என்றால், இதற்கு என்ன விடை கூறுவது என்று யோசித்தான். மண்டை காய்ந்தது. பதில் சொல்ல திணறினான்.
"ஐயா! தேனின் இனிப்பை சொல்லவும் முடியாது; காட்டவும் முடியாது. எனக்குத் தெரியாது. உண்டவனே உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "தம்பி! பௌதிகப் பொருளாக, ஜட வஸ்துவாகவுள்ள தேனின் இனிப்பை உன்னால் காட்ட முடியாது. எப்படி இருக்கிறதென்பதை, உண்டவனே உணர்வான் என்கிறாயே!" அது போல, ஞானப் பொருளாக விளங்கும் இறைவனை அநுபவத்தால்தான் உணர்தல் வேண்டும்.
மேலும், பசி என்பதுவும் ஒரு அநுபவப்பொருளே. காணஇயலாது. இறையருள் எங்கும் நிறைந்திருப்பினும், அதனை குருவருள் மூலமே பெறமுடியும் குருவை தேடி வெளியே அலையாமல் ஆத்மார்த்தமாக உன்னுள் தேடு. உள்ளே இருக்கும் இறைவனே குருவாக இருந்து உன்னை வழி நடத்துவார். கடவுளை உணரலாம்.
"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?'
"ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே! "
எனப் பாடினார். மாணவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது. பணிவுடன், சாஷ்டங்கமாக கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தான்.