
பசுமையான வயல்களுக்கு நடுவே, அமைதியான, அற்புதமான ஒரு கோவில். பல மகான்கள் சித்தி பெற்ற மற்றும் ஸ்ரீராமர் யாகம் செய்த இடமுமாகும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடவுளை மனதார வேண்டி, தங்களின் கோரிக்கைகளை பகிர்ந்து கொண்டால், பலன் நிச்சயம். எங்கும் "ராமா! ராமா!" என்ற உச்சரிப்புகள் கோவில் எங்கே.? கடவுள் யார் ?
இதோ விபரங்கள்:
தென்காசி District --ல் இருக்கும் கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் (அன்றைய கிஷ்கிந்தாபுரம்) எனும் ஊரிலுள்ள. கோவிலில் பிரதானமாக அமர்ந்திருக்கும் கடவுள், வரப்பிரஸாதியென்று அழைக்கப்படும் ஸ்ரீ அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயராவார். மேலும், ஸ்ரீராமபிரான், சீதா தேவி மற்றும் லட்சுமணர் சகிதம் வீற்றிருக்கிறார்.
இதன் பின்னணி...
ரிஷிபிலம்
இராமாயண காலத்தில், சீதா பிராட்டியாரைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் வானரப்படைகள் சகிதம் தட்சிணதேசம் வந்தனர். பசி, தாகம் அவர்களைத் தாக்கின. ரிஷிபிலமருகே வருகையில், அங்கிருந்த குகையிலிருந்து, பலவகை பட்சிகள் உடல் நனைந்து வெளியே வருவதைக் கண்டனர்.
உள்ளே தண்ணீர் கிடைக்குமென எண்ணி செல்கையில், சுயம்பிரபையெனும் தவ மகளைப் பார்த்து வணங்கினர். குகையினுள் சுயம்பிரபை வசிக்கும் காரணத்தை, ஆஞ்சநேயர் கேட்டார்.
சுயம்பிரபை கூறிய கதை:
முன்னொரு காலத்தில், மாயை செய்வதில் வல்லவனாகவும், பேராற்றல் படைத்தவனாகவும் மயன் என்ற ஒருவன் இருந்தான். தன்னுடைய மாயையால், அழகிய பொன் மாளிகைகளையும், பொன் சோலைகளையும் அமைத்தான். பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்து, பிரம்மதேவரிடம் வரம் பெற்றான். தன்னுடைய தவ வலிமையால், ஹேமையெனும் தெய்வப்பெண்ணுடன் குகையில் வசித்து வந்தான் மயன்.
நாரதர் மயனைப்பற்றி இந்திரனிடம் கலகமூட்ட, மயன் மீது இந்திரன் அம்புவிட்டான். பிரம்மஹத்தி தோஷத்தால் இந்திரன் சிரமப்பட, தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டினார்கள். உடனே சிவபெருமான் கங்கையை ஏவி விட, அகத்தியரின் அருளினால் அகண்ட காவேரியும் குகையினுள் ஓடி வர, அதில் இந்திரன் ஸ்நானம் செய்து பாபம் நீங்கினான். பின்னர் அத்தீர்த்தத்தை பாதுகாக்க, சுயம்பிரபையை அங்கே வைத்துவிட்டார்கள்.
சீதா பிராட்டியைத்தேடி ஆஞ்சநேயர் இங்கே வருகையில், அவரிடம் இதை ஒப்படைத்துவிட்டு, சுயம்பிரபையை மேலுலகம் வருமாறு அன்று பிரமதேவன் கூறியது பலித்துவிட்டது என்று மகிழ்வுடன் கூறினாள்.
"இராவணனை வதம் செய்து, சீதா பிராட்டியை மீட்டு திரும்பி வருகையில், இந்த இடத்தை பாதுகாக்கிறேன்" என்று ஆஞ்சநேயர் கூறி, விடை பெற்றார்.
ஸ்ரீராமர்- சீதா - லெட்சுமணர் சகிதம்
ஆஞ்சநேயர் இதை ஸ்ரீராமரிடம் சொல்ல, அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு கிஷ்கிந்தாபுரம் (இன்றைய கிருஷ்ணாபுரம்) வந்து, யந்திரங்கள் வைத்து ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீராமரை தரிசனம் செய்யாமல், தனியே இங்கே இருக்கமாட்டேன் என ஆஞ்சநேயர் கூற, மூவரும் அதே கோவிலில் தங்கி காட்சியளிப்பது கண்கொள்ளா காட்சியாகும். இங்கே விபூதியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
அபயஹஸ்தம்
தன்னை நாடி வந்தோர்க்கு அபயமளிக்கும் வகையில் வலது கையை வைத்து ஆஞ்சநேயர் தெற்கு முகமாக பார்த்து நிற்பது விசேஷமாகும்.
இவரை "அபய ஹஸ்த ஜெய வீர ஆஞ்சநேயர்" என அனைவரும் அழைக்கின்றனர். ஸ்ரீராமர்-சீதாதேவி-லெட்சுமணர் மூவரும் கிழக்கு நோக்கி நிற்கின்றனர்.
பூஜைகள்
தினந்தோறும் முறைப்படி பூஜைகளும், மார்கழி மாதம் அநுமத் ஜெயந்தி உற்சவமும், லட்சார்ச்சனையும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. வெண்ணெய் காப்பு, சந்தன காப்பு, வெள்ளி மற்றும் முத்தங்கிகளில் காட்சி தருவது காண வேண்டியதொன்றாகும்.
கோவிலுள்ள தியான மண்டபத்தில், பளிங்கு ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் ஆசியளிக்கிறார். தொடர்ந்து ஐந்து வாரங்கள், ஏதேனும் ஒரு நாளில், துளசி மற்றும் வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.
பச்சைபசேலென காட்சியளிக்கும் வயல்களுக்கு நடுவே இருக்கும் கிருஷ்ணாபுரம் கோவிலில்அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கம்பீரமாக நிற்கிறார். நாமும் அவரை மனதார, "ராமா" என்று உச்சரித்து வழிபடுவோம்.