
ஷீர்டியில் வாழ்ந்து வந்த சாயிபாபா பக்தர்களுக்குப் பல விதமாக அனுக்ரஹம் செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் அற்புதம் தான்! பக்தர்களின் பிரமிப்பு தான்!
ஆனால் யாருக்கு ப்ராப்தி இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அவரது ஆசியும் அதனால் ஏற்படும் பலனும் கிடைக்கும். தகுதி இல்லாதவர்களின் அனுபவம் அவரிடம் வேறு விதமாக இருக்கும்.
செல்வந்தர் ஒருவர், ஒரு நாள் பாபாவிடம் வந்தார்.
அவர் பாபாவிடம் கேட்டார்: “பாபா! எனக்குக் கடவுளைக் காட்டுங்கள். பிரம்மத்தைக் காட்டுங்கள் வெகு தூரத்திலிருந்து நான் இதற்காகவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். எல்லோரும் நீங்கள் உடனே பிரம்மத்தைக் காட்டுவீர்கள் என்று சொல்கிறார்கள்.”
பாபா: ஒ! பயமே வேண்டாம். நான் உடனே உனக்கு பிரம்மத்தைக் காட்டுகிறேன். அதுவும் மிகத் தெளிவாகக் காட்டுகிறேன். உலகில் ஏராளமானோர் பணம், அதிகாரம், புகழ், ஆரோக்கியம் இவற்றிற்காக அலைகிறார்கள். ஆனால் பிரம்மத்தைப் பார்க்க விரும்புபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.
பின்னர் பாபா பிரம்மத்தைப் பற்றிச் சற்று விளக்கினார். பிரம்மமே பிரபஞ்சத்தின் அடிப்படை காரணம். அதை உணர்வதற்காக பிறவி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், அதற்காக ஒரு குரு அவசியம் தேவை என்பதை எல்லாம் அவர் நன்கு விளக்கினார்.
பின்னர் அவர் அருகிலிருந்த ஒரு பையனிடம், 'நந்தியாலிடம் போய் நான் ஐந்து ரூபாய் கடனாகக் கேட்டேன் என்று சொல்லி வாங்கி வா' என்றார். நந்தியால் ஒரு மார்வாடி.
வெளியே சென்ற பையன் திரும்பி வந்து மார்வாடி, அவரிடத்தில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்று கூறினான். பாபா அவனை அந்த கிராமத்தில் இருந்த பல பணக்காரர்களிடம் பணத்தை வாங்கி வர அனுப்பினார். ஒரு இருபது நிமிடம் கழிந்தது. ஆனால் பணம் வரவில்லை.
அதற்குள் அங்கு அவரிடம் வந்த செல்வந்தர் பொறுமையை இழந்தார். இங்கு இனியும் நேரத்தை வீணாக்குவது சரியில்லை என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் கடனாக தன் கையிலிருந்து ஐந்து ரூபாயை பாபாவிற்குக் கொடுத்தால் அது திருப்பி வருமா என்ற சந்தேகம் அவருக்குள் எழுந்தது. ஷீர்டிக்கு வந்து திரும்புவதற்கு அவர் ஒரு டோங்காவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த டோங்காகாரர் வேறு அவசரப்படுத்துவார் என்று அவருக்குத் தோன்றியது.
அவர் பாபாவிடம், “நீங்கள் எனக்கு பிரம்மத்தைக் காண்பிக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று கேட்டார்.
உடனே பாபா கூறினார்: “அட! நான் இப்போது செய்து கொண்டிருப்பதெல்லாம் அதற்காகத் தான்! இங்கு உட்கார்ந்திருக்கும் போதே நீ கடவுளைப் பார்ப்பதற்காகத் தான் இவற்றையெல்லாம் செய்கிறேன். உனக்கு ஒன்றும் புரியவில்லையா?" என்றார்
செல்வந்தர் "எனக்குப் புரியவில்லை" என்றார்.
பாபா: "நான் ஐந்து ரூபாய் கேட்டேன். அதாவது ஐந்து விஷயங்களை சரணாகத் தரும்படி கேட்டேன்.... 1) ஐந்து உயிர்ச் சக்திகள் 2) ஐந்து புலன்கள் 3) மனம் 4) புத்தி 5) அகங்காரம். பிரம்மத்தை அடையும் சாலை சற்று கஷ்டமானது. எல்லோராலும் அதில் பயணப்பட முடியாது. பணம், கௌரவம், அதிகாரம் ஆகிய தடைகள் இருக்கக்கூடாது. அப்போதுதான் பிரம்மம் பிரகாசமாகத் தெரியும்."
பாபா அந்த செல்வந்தர் தன் பையில் 250 ரூபாய் வைத்திருந்தாலும் தன் குருவுக்கு ஐந்து ரூபாய் கூடக் கொடுக்கத் தயங்கினார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.
ஆனால் குருவிடமிருந்து விலையே இல்லாத பிரம்மத்தை இலவச பரிசாக பெற அவர் விரும்புகிறார்! எவ்வளவு பேதைமை அது!
வெட்கப்பட்ட செல்வந்தர் அங்கிருந்து நகர்ந்தார் என்று சொல்லவும் வேண்டுமோ!
(ஶ்ரீ B.V. நரசிம்ம ஸ்வாமி அவர்கள் எழுதிய ஷிர்டி சாயிபாபா பற்றிய நூலில் இருந்து...)