ஆன்மிகக் கதை - மண் வாசனை!

Anmiga story - The smell of soil!
Anmiga story - The smell of soil!

பெண்மணிகள் கருவுற்ற காலங்களில் மண் தின்பதாகச் சொல்வார்கள். இன்று நேற்றல்ல; பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். கோகுலத்துக் கண்ணனுக்கே மண்ணின் சுவை பிடித்திருந்திருக்கிறது. யசோதைத் தாயின் மிரட்டலுக்குப் பணிந்து அவன் வாய் திறந்தபோது அகில உலகங்களையும் அவளுக்குக் காட்டி மகிழ்வித்தானே!

காளிதாஸரின் ரகுவம்ச மகாகாவியத்தில் அப்படி ஒரு நிகழ்வு வருகிறது. திலீபனின் மனைவி ஸூதக்ஷிணை கருவுற்றாள். பன்னிரண்டு ஸ்லோகங்களில் அவள் கருவுற்ற கால அழகுகளைப் பாடுகிறார் மகாகவி. அவற்றுள் இந்த மண்வாசனையைப் பற்றியும் சில பாடல்கள் உண்டு.

கோடையில் நீர் வறண்ட தடாகங்கள், மழைக்காலம் வந்து, மேகங்கள் வானத்தில் கூடி மழையாகத் தரையிறங்கி நனைக்கும் போது, புதுமழைநீர் கிடைத்த மகிழ்ச்சியில் மணம் வீசும். அந்த நறுமணத்தை முகர்ந்து பார்ப்பதில் காட்டு யானைகளுக்குத் தனியான மகிழ்ச்சி கிடைக்குமாம். அதுபோல் தன் மனைவியின் முகத்திலிருந்து வெளிப்பட்ட மண்ணின் மணத்தைக் கொண்டு அவள் கருவுற்ற நிலையை அறிந்து கொண்டானாம் திலீபன். வாராது வந்த மாமணிபோல் தனக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என்பதை அறிந்துகொண்ட திலீபனின் மன நிலையை, கோடைக்குப் பிறகு பூமியை நனைக்கிற புதுமழைத்துளிக்கும், அதனால் எழுகிற மண்ணின் மணத்துக்கும் ஒப்பிடுகிற கவியின் நுட்பத்தைப் பாருங்கள்!

‘ததானனம் ம்ருதஸூரபி க்ஷிதீஸ்வரோ ரஹஸி உபாக்ராய’ என்பது அந்த அழகான கவிதை வரி. பூமிக்கே அதிபதியான திலீபன் தன் மனைவியின் முகத்திலிருந்து வெளிப்பட்ட மண்ணின் மணத்தை முகர்ந்தானாம்.  அவள் ஏன் மண் தின்றாள் என்பதற்கான விளக்கமும் அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. தன்னுடைய கருவில் வளர்கிற மகன் பிற்காலத்தில் விண்ணையாளும் தேவேந்திரனைப் போல் இந்தப் பரந்த பூமி முழுவதையும் ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டாளாம். அதற்காகக் கருவிலுள்ள போதே அந்த பூமியின் தொடர்பு அவனுக்கு ஏற்பட வேண்டுமென்று நினைத்தாளாம்.

இதையும் படியுங்கள்:
வளரிளம் பருவ பிள்ளைகளின் மூளை, இதயம் பலம் பெற…
Anmiga story - The smell of soil!

தனக்குப் பிறக்கப்போவது மகன்தான் என்கிற நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? நம்பிக்கை என்பதை விடவும் ஓர் அரச குலத்தவரின் பிரார்த்தனை என்றும் இதைக் கொள்ளலாம். பிறக்கப்போகிற அந்த மகன் ‘திக் அந்த விஸ்ராந்த ரத:’ திசைகளின் எல்லைவரை செல்லக்கூடிய தேர்களை உடையவனாக இருக்க வேண்டுமாம். எத்தனை சிறப்பான பேறுகால ஆசை இது! பேறுகால இனிமையில் திளைக்கிற பெண்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது கூடப் பரம்பொருளின் கடமைதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com