

கோயில்களில் ஆண்டுதோறும் பலவிதமான உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இவற்றில் சில உற்சவங்கள் பிரத்யேகமானவை; தனித்துவமானவை. அவ்வகையில், பெருமாள் கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கிய உற்சவம் ‘அன்னக்கூடை உற்சவம்’ அல்லது ‘அன்னப்பாவாடை உற்சவம்’ ஆகும். இந்த உற்சவம் ‘அன்ன கூடோத்ஸவம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாகப் புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாதம் மற்றும் பிரம்மோற்சவ காலங்களில் இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் இவ்வுற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. மேலும், அம்மன் கோயில்களில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
சமைத்த அன்னம், பலவகையான இனிப்புகள், பலகாரங்கள், முறுக்கு, வடை, மிளகுத்தட்டை, சர்க்கரைப் பொங்கல் மற்றும் பழங்கள், காய்கறிகளை இறைவனின் முன்பாகப் பாவாடை போலப் பரப்பி, படையலிட்டு வணங்கி வழிபடுவதால் இதற்கு ‘அன்னப் பாவாடை உற்சவம்’ (anna-pavaadai-utsavam) என்ற பெயர் உண்டானது.
பெருமாளின் முன்னால் பலவகையான உணவுகளைக் குவித்து வைத்து, அவர் மனம் குளிர பக்தர்கள் வழிபடும்போது, அவர் உலக உயிர்களைப் பசியிலிருந்து காத்தருளுவார் என்பது ஐதீகம். இந்த உற்சவத்தின் மூலம் எந்தவொரு இல்லத்திலும் உணவுப் பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கையாகும்.
லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு, தட்டை, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், தயிர் சாதம், வாழைப்பழம், மாதுளம்பழம், ஆப்பிள், பானகம், பாயாசம், வடை, முறுக்கு, ரவா லட்டு முதலான நூற்றுக்கும் மேற்பட்ட வகை வகையான உணவுகளை அன்றே தயாரித்து, உடனே பெருமாளின் முன்பாக சமர்ப்பித்து வழிபடுவது அன்னக்கூடை உற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
கோவர்த்தன மலையைத் தன் ஒரு விரலால் தாங்கிப் பிடித்து, ஆயர்பாடி மக்களைக் காத்த கண்ணனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த உற்சவம் நடைபெறுவதாகவும் ஐதீகம் உண்டு.
ஆலக்கிராமம்: திண்டிவனத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஆலக்கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில், புரட்டாசி மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் அன்னக்கூடை உற்சவம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருப்பதி: திருப்பதி திருமலையில் பிரதி வாரம் வியாழக்கிழமை அன்று காலை 6 மணி அளவில் ‘திருப்பாவாடை சேவை’ என்ற பெயரில் அன்னப்பாவாடை உற்சவம் நடைபெறுகிறது.
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில், ஆடி மாதத்தில் பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு மாலை 4 மணிக்கு அன்னக் கூடோத்ஸவம் நடைபெறுகிறது.
கிளாம்பாக்கம்: திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் எனும் ஊரில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று இரவு 7 மணி அளவில் மிகப்பிரம்மாண்டமான அன்னப்பாவாடை உற்சவம் நடைபெறுகிறது.
நாச்சியார்கோவில்: கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலில் பெருமாளுக்கு பலவிதமான உணவுகளை சமைத்துப் படைத்து, கருடாழ்வாருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும் ஒரு தனித்துவமான உற்சவமாக இது திகழ்கிறது.
அன்னப்பாவாடை உற்சவம் முடிந்த பின்னர், இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படும். அன்னப்பாவாடை உற்சவத்தில் கலந்துகொண்டு, இறைவனுக்குப் படைக்கப்படும் அன்னப் பிரசாதங்களைத் தரிசிப்பதன் மூலம் இல்லங்களில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கையாகும்.