அனுபவச் சுவடுகள் - 16 திருப்புறம்பியம் இட்லி!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
Published on

தெரிந்த கோயிலுக்கு அடிக்கடி செல்கிறோம்.

தெரிந்த கடையிலேயே பொருள் வாங்குகிறோம்.

தெரிந்த டிபனையே விரும்பிச் சாப்பிடுகிறோம்.

தெரிந்த பாட்டையே அதிகம் கேட்கிறோம்.

தெரிந்த நண்பரிடமே நிறைய பேசுகிறோம்.

தெரிந்த பூங்காவிலேயே வாக்கிங் போகிறோம்.

தெரிந்த டிரைவரையே சவாரிக்கு அழைக்கிறோம்.

என்ன காரணம்?

எதுவுமே பழகிவிட்டால் ஒரு சுகம்.

கிராம வாழ்க்கையில் இருந்து நகர வாழ்க்கைக்கு மாறியவர்கள் ஆரம்பத்தில் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்...

கிணற்றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ குளித்தது போய் நான்கு சுவர்களுக்குள் குளித்துப் பழக வேண்டும். வயல்வெளியில் இயற்கைக் காற்றை சுவாசித்துக் கொண்டே நடந்தது போய், பூங்காக்களில் எதிரில் வருபவரை இடிக்காமல் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

விறகு அடுப்புக் கலாசாரம் போய் சிலிண்டருக்கு மாற வேண்டும்.

வேஷ்டியைக் கட்டிக்கொண்டு மேல்துண்டு போட்டபடி கிராமத்தில் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். விகல்பமாகப் பார்க்க மாட்டார்கள். நகரத்தில் இது பெரும்பாலும் சாத்தியமில்லை.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

கிராம வாழ்க்கையின் சுகம், தனி ரகம்.

யாருமே ஓரிடத்தில் நிலையாகத் தங்கி இருத்தல் இப்போது குறைந்துவிட்டது. தேவைக்காக எல்லோரும் அவ்வப்போது இடம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘சொந்த ஊர்... சொந்த ஊர்’ என்று சொல்கிறோமே... ஆனால், நிரந்தரமாக அந்த ஊரிலேயே தங்கிப் பிழைப்பவர்கள் குறைவு.

எவருமே அவரது சொந்த ஊரில் பிழைப்பது கஷ்டம். அப்படியே பிழைத்தாலும், அதற்குப் பெரிய வரவேற்பு இருக்காது.

ள்ளூரில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதும், சென்னையில் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதும் ஒன்று! இது பலருக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் உணர்வதில்லை.

என்னையே எடுத்துக்கொள்கிறேனே... 1985ல் சென்னைக்கு வந்தேன். இடம் பெயர்ந்து சுமார் 39 வருடங்கள் ஆகிவிட்டன.

நான் சென்னைக்காரன் இல்லை. கும்பகோணத்துக்காரன். சுவாமிமலைக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம்தான் என் சொந்த ஊர்.

1985ல் கல்லூரி படித்து முடித்தவுடன் பிழைப்பதற்காக சென்னைக்கு வந்தேன்.

‘உள்ளூரில் வேலை பார்த்தால், எதிர்காலத்தை ஓட்ட முடியாது. சென்னைதான் சரியானது’ என்ற எண்ணத்தில் அப்போது எல்லோரும் சென்னையை நோக்கி வருவார்கள். நானும் அப்படி வந்தவன்தான்.

பத்திரிகையாளனாக எனக்கு விசிட்டிங் கார்டு கொடுத்தது இந்த சென்னைதான். என்னை ஆதரித்துக் காத்த இந்த நகரை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். ‘வந்தாரை வாழ்விக்கும் சென்னை’ என்றால், அது சத்தியம்!

இத்தனை வருடங்களில் நான் சந்திக்கிற பலரிடமும் ‘உங்க சொந்த ஊர் எது?’ என்று பேச்சுவாக்கில் கேட்பேன்.

சென்னையைத் தவிர ஆளாளுக்கு தஞ்சாவூர், மதுரை, திருவண்ணாமலை என்று ஒவ்வொரு ஊர் பெயரைச் சொல்வார்கள்.

ரொம்பவும் சொற்பமானவர்கள் நூற்றில் பத்துப் பேர் இருக்கலாம்,  சென்னையே தங்களது சொந்த ஊர் என்பார்கள்.

இதையும் படியுங்கள்:
40 வயதுக்குப் பிறகு தொப்பையைக் குறைப்பது அவ்வளவு பெரிய கடினமல்ல!
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

‘நான் பொறந்து வளர்ந்தது, எங்க ஃபேமிலி எல்லாமே சென்னைதான்’ என்பர். அப்போது அவர் முகத்தைக் காண வேண்டுமே... ‘ஏண்டா, எப்படி ஒரு கிராமம் மாதிரி அத்தனை பொலிவோடு இருந்த சென்னையை வெளியூர்க்காரங்க நீங்கல்லாம் வந்து இப்படி மாத்திட்டீங்களேடா’ என்று சொல்வதுபோல் தோன்றும்.

ண்மைதான். புதியவர்கள் வருகையினால்தான் எந்த ஒரு அடையாளமும் மாறுகிறது. அது ஊராக இருந்தாலும், வீடாக இருந்தாலும்!

சில வீடுகளைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் காலையில் பத்தரை மணிக்கு நேரடியாக சாப்பாட்டுக்குச் சென்று விடுவார்கள். காலையில் ஆறு மணிக்கு ஒரு காபி. அதன் பின் டிபனோ, கஞ்சியோ கிடையாது. பத்தரை மணி சாப்பாடுதான்! இந்த சிஸ்டம் உடலுக்கும் நல்லதுதான்!

ஆனால், இதே வீடுகள் பின்னாட்களில் மாறியதையும் பார்த்திருக்கிறேன். காலையில் எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.

‘என்ன பண்றது... மருமகள் வந்தாள்... அவளுக்குக் கார்த்தால டிபன் சாப்பிட்டுப் பழக்கம். இப்ப சாப்பாடு மதியம் ஒரு மணிக்குப் போயாச்சு.’

ஒரு குடும்பத்தில் புதியவர்கள் வருகையால் நல்லனவும் நிகழும். அல்லனவும் நிகழும். எல்லாமே கடவுள் கையில்!

சென்னையையே எடுத்துக்கொள்ளுங்கள்... மாம்பலம், நங்கநல்லூர், அடையாறு எல்லாமே அப்போது கிராமங்கள்தான். கூவம் ஆற்றுத் தண்ணீரை அள்ளிக் குடிப்பார்கள். அந்த அளவுக்குச் சுத்தமான, தெள்ளிய நீர் ஓடிய காலமும் உண்டு.

எங்கு பார்த்தாலும் மாடுகள், விவசாயம், பசுமை. சென்னை நகரத்தில் நெருக்கடி அதிகமாக அதிகமாக... எல்லாமே மாறிப் போச்சு!

சென்னையில் இருக்கிற பெரும்பாலானவர்கள் ஊர் விட்டு ஊர் வந்தவர்கள். தங்களது கலாசாரத்தையும் மெள்ளத் திணித்து, பழைய சென்னைக்கு உண்டான அடையாளம் தொலைந்தே போய்விட்டது. 

புதிதாக ஒரு நண்பர் வீட்டுக்கோ, சொந்தக்காரர் வீட்டுக்கோ செல்கிறோம் என்றால், அந்த வீட்டில் நாம் நினைத்தபடி இருக்க முடியுமா?

நண்பரோ, சொந்தக்காரரோ ‘இதுல உக்காருங்க’ என்றால், அவர் எந்த இருக்கையைக் காண்பிக்கிறாரோ, அதில்தான் அமர்கிறோம்.

அவர் கொண்டு வந்து கொடுப்பதைக் குடிக்கிறோம்; சாப்பிடுகிறோம். இன்னொருவர் வீட்டில் நாம் நினைத்தபடி இருக்க முடியாது. அவர் அனுமதி இல்லாமல் அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க முடியாது. அவர் சொல்கிற சட்ட திட்டங்களுக்கு உட்பட வேண்டும்.

வீடாக இருந்தாலும் சரி... நாடாக இருந்தாலும் சரி... அங்கு இருக்கக்கூடிய சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.

வீட்டையும் நாட்டையும் மதிக்க வேண்டும்.

வாழ்க்கையின் எந்த ஒரு நிலையிலும், நாம் கடந்து வந்த காலத்தை மறக்கக் கூடாது.

இவற்றை அவ்வப்போது நன்றியோடு நினைத்துப் பார்த்தால், நிலை தடுமாறாமல் வாழலாம்.

ஆரம்ப காலத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்களைப் பிற்காலங்களில் பலரும் மறந்துவிடுகிறார்கள்.

னது சொந்த ஊரான திருப்புறம்பயம் கிராமத்தில் ஸ்கூல் படிக்கின்ற அரை டிராயர் காலத்தில் எங்கள் இல்லத்தின் ஒரே சம்பளக்காரர் யார் என்றால், என் அப்பா பிச்சை ஐயர்தான்!

சம்பளக்காரர் என்றதும், ஏதோ ஸ்கூல் வாத்தியார்... வங்கி ஊழியர் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

அப்பா, ஒரு புரோகிதர்.

திருப்புறம்பயம் கிராமம் தவிர அருகில் இருக்கிற உத்திரை, பொன்பேத்தி, ஓலைப்பாடி, சோழங்கநத்தம் போன்ற கிராமங்கள் எல்லாம் என் அப்பாவின் புரோகிதத்துக்கு உட்பட்டது.

பெற்றோருடன் சிறு வயது சுவாமிநாதன்...
பெற்றோருடன் சிறு வயது சுவாமிநாதன்...

ஒரு புரோகிதருக்கு அதுவும் கிராமத்தில் பெரிதாக என்ன வரும்? அரிசி (பச்சரிசி), காய்கறி இத்யாதிகள்தான்.

தட்சணை என்பது நாலணா, எட்டணா - இப்படிதான் இருக்கும். அந்த சில்லறைக் காசுகளையே வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அப்பா அடிக்கடி எண்ணிக்கொண்டிருப்பார். அந்தக் காசுகளை உன்னிப்பாகக் கவனித்து அவர் எண்ணுகிற அழகே தனி! 

புரோகிதத்தில் வருகிற அரிசியும், காய்கறிகளும்தான் எங்கள் வயிற்றை நிறைத்தன.

பெரும்பாலும் எங்கள் வீட்டு அன்றாட சாப்பாட்டு மெனுவில் கொத்தவரங்காய், புடலங்காய், வாழைக்காய், பூசணிக்காய். இவைதான் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருக்கும்.

காரணம், இவை எல்லாம் கிராமத்தில் விளைகின்றவை. தோட்டங்களில் இருந்து பறித்துக்கொண்டு வருவார்கள்.

புரோகிதருக்கு உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், காரட் இவையெல்லாம் தருகிற வழக்கம் இல்லை. எனவே, உருளை, கத்தரி எல்லாம் கல்லூரி படிக்கும்போது கும்பகோணத்துக்கு வந்த பிறகுதான்!

டிபன் என்றால், எங்கள் வீட்டில் பெரும்பாலும் அரிசி உப்புமா, புளிப்பொங்கல்தான்.

தோசை, இட்லி என்றால் புழுங்கல் அரிசி காசு கொடுத்து வாங்க வேண்டும். பெரும்பாலும் வாங்க இயலாது. என்றாலும், மாதா மாதம் அமாவாசை தர்ப்பணத்தின்போது மட்டும் புழுங்கல் அரிசி வாங்கி, கல்லுரலில் அரைத்து என் அம்மா இட்லி வார்ப்பார்.

உயரமான அந்த இட்லிப் பானைகூட என் நினைவில் இன்னும் இருக்கிறது. இப்போது ஓட்டலில் போடுகிற இட்லி போல் சிறிதாக இருக்காது. இட்லிப் பானையின் தட்டுகள் அகலமாக குழிவாக இருக்கும். நாலு இட்லிகள் சாப்பிட்டாலே, வயிறு நிரம்பி விடும்.

நித்தமும் மூன்று வேளையும் சாப்பாடு சாப்பாடு (காலையில் பழேது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை) என்று இருந்து வரும் எனக்கு அமாவாசை வந்துவிட்டாலே, உற்சாகம்தான். காரணம், இரவில் இட்லி உறுதி.

அமாவாசை தினத்தன்று இட்லியை ஒரு கட்டு கட்டுவேன். கடைசியில் சிறிது கவளம் மோர் சாதத்தையும் தட்டில் போடுவார் அம்மா. தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை அன்று இரவு பலகாரம் கூடாது. அதனால், சம்பிரதாயத்துக்குக் கொஞ்சமாக மோர் சாதம்!

இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நான்.

‘இட்லி’ என்று இன்றும் சொன்னாலே எனக்கு திருப்புறம்பயம் வாழ்க்கைதான் நினைவுக்கு வரும்.

இன்றைக்கும் வீட்டிலோ, வெளியிலோ இட்லி சாப்பிடும்போதெல்லாம் திருப்புறம்பயம் அமாவாசை தினத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பேன்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com