அனுபவச் சுவடுகள் – 17 கிராமத்து ‘மண்’ வாசனை!

அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி கோயில்
அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி கோயில்
Published on

மிழகத்தின் ‘மாநில’ உணவு எது என்றால், கண்களை மூடிக்கொண்டு ‘இட்லி’ என்று சொல்வேன். அந்த அளவுக்கு இட்லியோடு நம் வாழ்க்கை பிணைக்கப்பட்டிருக்கிறது.

என் சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் கடைத் தெருதான் பிரதானம். கடைத் தெரு என்றால் தி.நகர் ரங்கநாதன் தெரு மாதிரி நினைக்கக்கூடாது. இந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அந்தப் பக்கம் ஏழெட்டுக் கடைகள். அவ்வளவுதான். மளிகை, ஓட்டல், தையலகம், உர மருந்து எல்லாமே உள்ளூரில் உண்டு.

கடைகளைத் தாண்டி ஒரு ஓட்டல். உரிமையாளர் ஜகதீச ஐயர். வாசலில் போர்டு இருந்ததாக நினைவில்லை. எனவே, ‘ஜகதீச ஐயர் ஓட்டல்’ என்று அழைப்போம்.

ஓட்டலுக்குப் பக்கவாட்டில் பின்பக்கமாக ஒரு செக்கு. எப்போதும் எண்ணெய் ஆட்டிக்கொண்டே இருப்பார்கள். மாடுகள் இழுத்துக்கொண்டு செல்லும்.

வீட்டின் எண்ணெய்த் தேவைக்கு அவ்வப்போது செக்கு இருக்கும் இடத்துக்கு என்னை அனுப்புவார்கள். தேவைப்படுகிற எண்ணெயை பாத்திரத்தில் ஊற்றித் தருவார்கள். பாத்திரத்தைக் கையில் வாங்கும்போது சூடாக இருக்கும். எப்படியெல்லாம் சந்தோஷமாக வாழ்ந்திருக்கிறோம் பாருங்கள்.

நாளிதழ் பேப்பரில்தான் மளிகை சாமான்களை பொட்டலம் கட்டித் தருவார்கள். மேலே சணலால் சுற்றிக் கட்டித் தருவார்கள். பிளாஸ்டிக், பாலிதீன் எல்லாம் வந்து பொட்டலம் கட்டுவதைப் புறம் தள்ளிவிட்டது.

அந்த செக்கில் எண்ணெய் வாங்கும்போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் சாம்பார் வாசனை காற்றில் கலந்து வந்து மணக்கும்.

அப்பா எப்போதாவது காசு கொடுப்பார்.

வலது உள்ளங்கையில் சில்லறைக் காசுகளை வைத்துக்கொண்டு பார்வையைக் குறுக்கியபடி ஐந்து காசுகளையும் பத்து காசுகளையும் பிரித்து எண்ணி அப்பா கொடுக்கும் அழகு தனி.

காசுகளைக் கையில் வாங்கிய மறுகணம் டிராயர் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டு சிட்டாகப் பறந்து ஜகதீச ஐயர் ஓட்டலில் போய் அமருவேன். உட்காருவதற்கு மர பெஞ்ச். இலைகள் போடுவதற்கு அதை விட உயரமான மர பெஞ்ச்.

தொப்பைக்கு மேல் ஏற்றி வேஷ்டி கட்டி இருக்கும் ஜகதீச மாமா டேபிள் அருகே வருவார்.  அதிர்ந்து பேசாத அவரது முகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ‘என்னடா அப்பா காசு குடுத்தாளா? என்ன வேணும்?’  ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டே இலை போடுவார். அவரே ஜலம் தெளிப்பார்.

‘இட்லி மாமா...’ சொல்லும்போதே பார்வை இட்லிகள் அடுக்கி இருக்கிற கண்ணாடி ஷெல்ப்புக்குள் போய் நிற்கும்.

இன்னும் ஒரு சில விநாடிகளில் சட்னி மற்றும் சாம்பாரில் தோய்ந்த இட்லிகளைச் சாப்பிடப் போகிறோம் என்கிற அந்தப் பரபரப்பு இருக்கிறதே... அந்த சுகமே தனி. இன்றைக்கு எத்தனை காஸ்ட்லி ஓட்டலுக்குப் போய் இட்லி, வடை சாப்பிட்டாலும் ஜகதீச ஐயர் ஓட்டலில் பரபரப்போடு அமர்ந்து சாப்பிட்ட அந்த சுகம் இல்லையே!

இட்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஜகதீச ஐயர் சாம்பார் வாளியோடு வந்து பதமாக இட்லி மேல் ஊற்றிக்கொண்டே இருப்பார். காசு வாங்கிக்கொண்டு ‘ஜாக்கிரதையா போடா... ஓடாம போ’ என்று எச்சரிக்கை செய்து அனுப்புவார் மாமா.

திருப்புறம்பயத்தில் அருள்மிகு சாட்சிநாதர் ஆலயத்தில் தேனபிஷேகப் பிள்ளையார் உலகப் பிரசித்தம். ஒரு பிள்ளையார் சதுர்த்தியின்போது ஊருக்குப் போயிருந்தேன். நானும் கணக்குப்பிள்ளைவீட்டு நடராஜனும் பேசிக்கொண்டிருந்தோம்.

ஜகதீச ஐயர் ஓட்டல் பற்றி அப்போது பேச்சு வந்தது. அதற்கு நடராஜன், ‘ஜகதீச ஐயரின் பையன்கள் நன்னா இருக்கா. டெல்லியிலும் கோயம்புத்தூரிலும் இருக்காளாம்’ என்று சொன்னபோது இனம் தெரியாத பரவசம்.

எங்கிருந்தாலும் அவரது குடும்பத்தினர் நன்றாக இருக்கட்டும் என்று மனசாரப் பிரார்த்தித்தேன். பின்னாட்களில் கோயம்புத்தூரில் இருக்கிற ஜகதீச ஐயரின் மகன் ரவி ஒரு நாள் என்னை போனில் தொடர்புகொண்டார்.

பழைய நினைவுகளை அரை மணி நேரத்துக்கு மேல் அசை போட்டோம்.

பணத்தின் அருமை தெரியாமல் இருந்த காலத்தில் பாசம் இருந்தது.

பணத்தின் அருமை தெரிய ஆரம்பித்த பின் பாசமும், உறவும் போயே போச்சு.

இன்றைக்கும் திருப்புறம்பயம் செல்லும்போதெல்லாம் ஜகதீச ஐயர் ஓட்டல் இருந்த இடத்தைப் பார்ப்பேன்.  கால ஓட்டத்தில் அந்த இடம் முற்றிலும் மாறிவிட்டது.  ஆனாலும், அந்த சாம்பார் வாசம் மனசுக்குள்! ஜகதீச ஐயர் கண்களுக்குள்!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

பாரத தேசத்தின் முதுகெலும்பே கிராமங்கள்தான்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்... உலகில் பல நாடுகள் இன்று வல்லரசாக,  நல்லரசாகக் கொடிகட்டிப் பறப்பதற்குக் காரணம், அதன் பரப்பளவுக்குள் அடங்கி இருக்கிற படாடோபம் இல்லாத கிராமங்கள் தரும் இயற்கைச் செல்வங்கள்தான்!

நகரங்களின் வளர்ச்சியையும், நாட்டின் உயர்வையும், மனிதர்களின் கலாசாரத்தையும் கிராமங்கள்தான் தூக்கி நிறுத்துகின்றன.

இன்றைக்கு ஐம்பது வயதை ஒட்டி முன்னும் பின்னும் இருக்கிறவர்கள், இந்தக் கிராமத்துச் சுகங்களை நன்றாகவே அனுபவித்தவர்கள். அதன் பின்புலத்தில் வளர்ந்தவர்கள்.

இந்த ஐம்பது வயதை ஒட்டிய தலைமுறைக்குப் பின் வந்த அடுத்த தலைமுறை, பெரும்பாலும் கிராம சூழலில் வளர இயலாமல் போனது காலத்தின் சோகம்.

கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இன்றைக்குத் தங்கள் பயணத்தின்போது வயல்வெளிகளை எங்கே பார்த்தாலும், முண்டாசு கட்டின விவசாயியைப் பார்த்தாலும், பொங்கிப் பிரவாகம் எடுக்கிற மோட்டார் பம்ப் செட்டுகளைப் பார்த்தாலும், மாட்டுவண்டிகளைப் பார்த்தாலும் அப்படியே பிரமித்து நின்று விடுவார்கள். காரணம் அவர்கள் வளர்ந்த சூழலின் மிச்சங்கள் இவை.

நெற்கதிர்களையும், கரும்புக் கழிகளையும், வாழைகளையும் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். கோவணத்தைக் கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்து ஆட்டம் போட்டவர்கள். சிலேட்டில் தமிழ் எழுதிப் பழகியவர்கள்.

ஆனால், இந்த சுகம் நகரங்களிலேயே பிறந்து வாழ்பவர்களுக்குக் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும். நகரங்களிலே பிறந்து நகரங்களிலேயே வளர்பவர்களுக்குக் கிராமங்களில் எல்லாமே அதிசயம்தான்!

னக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.  சிறுவனாக இருந்தபோது எனது பெரியப்பா நாகராஜன் (அப்பாவின் அண்ணன்) பம்பாயில் இருந்து எங்கள் ஊருக்கு திருப்புறம்பயம் வந்தார். கூடவே அவரது இரண்டு மகன்களையும் கூட்டி வந்தார். பெரியவன் குமார். அடுத்தவன் சேகர்.

கர்ம வீரர் காமராஜர் இறந்து போன வருடம் அது. பம்பாயில் இருந்து அவர் கொண்டு வந்த கையடக்க டிரான்ஸிஸ்டரில்தான் காமராஜர் இறுதி ஊர்வல வர்ணனை கேட்டோம்.

சின்ன வயசிலேயே எங்கள் ஊரில் இருந்து புறப்பட்டு பம்பாய்க்குப் போய் விட்டார் பெரியப்பா. அங்கே தன் தகுதியை வளர்த்துக் கொண்டு ஏர் இண்டியாவில் பணியில் சேர்ந்தார். அவர் பயணிக்காத உலக நாடுகளே கிடையாது.

பெரியப்பாவின் குடும்பம் பம்பாயிலேயே வளர்ந்தது. அவருடைய குழந்தைகள் பிறந்ததெல்லாம் அங்கேயேதான். பெரியப்பாவின் மகன் குமாருக்கு ஒரு நாள் இளநீர் ஒன்றை வெட்டிக்கொண்டு போய்க் கொடுத்தோம். அதை மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி எப்படி வைத்துக் குடிப்பது என்று தெரியாமல் சட்டை முழுக்க வழிந்து ஒரு மாதிரி குடித்து முடித்தார்.

கிராமத்து பம்ப் செட் மோட்டாரில் குளிக்கின்றவர்களைப் பார்த்து, ‘இப்படி ஓபன் ப்ளேஸ்ல குளிக்கிறாங்களே... அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா?’ என்று கேட்ட நகரத்துவாசிகளின் குழந்தைகளை நான் அறிவேன். அந்தக் குழந்தைகள் இன்று அந்நிய தேசங்களில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.

மனிதனது மனதை அவனது பால்ய காலத்தில் பாதித்தவைதான் கடைசி வரை அப்படியே கல்வெட்டுகளாகப் பதிந்துவிடுகின்றன. இயற்கையின் கொடையை நேரடியாக அனுபவிக்கும் கிராமவாசிகள், கள்ளங்கபடம் இல்லாதவர்கள். சூது வாதனை தெரியாதவர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி கோயில்

கிராமத்தில் ஒரு வீட்டில் சுபம், அசுபம் என்றால் அடுத்த கணமே ஓடி வந்து கலந்துகொள்வார்கள்.

பூசணிக்காய், பரங்கிக்காய், பாகற்காய், கோவைக்காய், முருங்கைக்காய், தூதுவளைக் கீரை -  இப்படிக் கிராமங்களில் இலவசமாய் சாலையோரம் காய்த்துத் தொங்குபவை ஏராளம். நகரத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் புருவம் சுருங்க வைக்கும் அளவுக்கு இருக்கும் இவற்றின் விலை!

அக்ரஹாரத்தில் ஒரு சிவன் கோயில் பிரதானமாக இருக்கும். அதைச் சுற்றியே ஊரானது காணப்படும்.

நான் பிறந்த திருப்புறம்பயம் கிராமத்தையே எடுத்துக்கொள்வோம்.

அக்ரஹாரத்தின் கோடியில் அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி கோயில். இந்தக் கோடியில் விநாயகர் கோயில். பெருமாள், மாரியம்மன், திரௌபதி அம்மன் என்று பல ஆலயங்கள்.

பிள்ளையார் கோயிலுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு பள்ளிக்கூடம். இன்றைக்கும் திருப்புறம்பயம் போகும் நாட்களில் அந்தப் பள்ளியின் அருகே சென்று அந்த மண்ணில் சில நிமிடங்கள் நிற்பேன். என்னையும் அறியாமல் ஆசிரியர்கள் நினைவுக்கு வருவார்கள்.

திரு சட்டநாதன் சார்தான் தலைமை ஆசிரியர். அவரது துணைவியார் திருமதி சாவித்திரி மேடமும் எங்கள் ஆசிரியரே. சட்டநாதன் சார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். சாவித்திரி மேடம் அப்படியே நேர் எதிர். ரொம்ப அமைதி. ஒரே ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு முக்கால் மணி நேரம் வகுப்பு எடுத்த திரு சட்டநாதன் சார் இன்னமும் மனதில் இருக்கிறார்.

பழங்காலத்திய குருகுலம் என்று சொல்லப்படும் ஆசிரமங்களில் குருநாதர்கள் துறவு நிலையில் இருப்பார்கள். ஆனால், இந்தப் பள்ளிக்கூடங்களில் குருநாதர்களாக விளங்கும் ஆசிரியர்கள் லௌகீகத்தில் இருந்தாலும், கல்வியை அர்ப்பணிப்பாகவே மேற்கொண்டார்கள். ‘ஒரு’ மாணவனுக்குப் புரியவில்லை என்றாலும், அவனுக்குப் புரிய வைத்த பிறகுதான் அடுத்த பாடத்துக்குப் போவார்கள்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com