எங்கள் ஊரான திருப்புறம்பயத்தில் உள்ள சிவாலயம், சைவ நால்வரால் பாடல் பெற்றது. மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. இறைவன் திருநாமம் அருள்மிகு சாட்சிநாதர். அம்பாள் திருநாமம் கரும்படுசொல்லியம்மை.
அடியேன் சிறுவனாக இருந்த காலத்தில் கோயிலில் ஒரு திருவிழா என்றால் ஊர் முழுக்க வாழைமரம், தோரணங்களாகக் காணப்படும். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் சாணி தெளித்துப் பெரிய பெரிய கோலம் போட்டிருப்பார்கள்.
அந்தக் காலத்தில் கிராமத்து சிவன் கோயில் என்றால் வாத்தியக்காரர்கள், மணியம், குருக்கள், உதவியாளர், பரிசாரகர், பூக்கட்டுபவர், துப்புரவுப் பணியாளர்கள், கணக்குப்பிள்ளை என்று எல்லோருமே உண்டு.
எங்கள் ஊர் கோயிலின் ஆஸ்தான நாகஸ்வர வித்வான் நடேசன். நாகஸ்வர வாசிப்புக்கு உதவி அவரது மகன் ஞானசுந்தரம் (இவரைப் பற்றிய ஒரு அனுபவத்தை ஏற்கெனவே பார்த்தோம்). தவில் சம்பந்தம். கூடவே சேகர்.
(சங்கீதத்தில் எனக்கு ‘அ’னா, ‘ஆ’ன்னா தெரியாவிட்டால்கூட, அதில் ஒரு லயிப்பை ஏற்படுத்தி யவர்கள் மேலே சொன்ன வித்வான்கள்.) இவர் களுக்கெல்லாம் என்ன பெரிய சம்பளம் வந்து விடப் போகிறது? எல்லாம் சொற்பமே!
ஆனால், கோயிலில் ஒரு திருவிழா, புறப்பாடு என்றால் சற்றும் சளைக்காமல் விளாசித் தள்ளுவார்கள். இவர்களின் நாகஸ்வரக் கச்சேரியைக் கேட்கிற பலரும் சங்கீதத்தின் அரிச்சுவடியை அறியாதவர்கள். என்றாலும், ரசிக்கின்ற விதத்தைப் பார்த்தால், திக்குமுக்காட வைக்கும்.
இடமும் வலமும் தலையை ஆட்டுவது, இடக் கையைக் கீழே வைத்துக்கொண்டு அதன் மேல் வலக் கையால் தட்டித் தாளம் போடுவது... இவற்றை எல்லாம் பார்க்கிறபோது செம்மங்குடியின் பாட்டுக் கச்சேரியை முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிப்பவர்கள்போல் இருக்கும்.
சாட்சிநாதர் ஆலயப் பெரிய பிராகாரத்தின் சுற்றுச் சுவர் உயரம் பிரமாண்டமாக இருக்கும். அத்தனை உயர சுவரை அரை டிராயர் காலத்தில் அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். உயரம் எங்கெல்லாம் தென்படுகிறதோ, அவை எல்லாமே பிரமாண்டம்தான்! பிரமிக்க வைக்கக் கூடியவைதான்! ராஜகோபுரம், தேர், யானை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தேர்வு காலங்களில் இந்தப் பெரிய பிராகாரத்தில் உட்கார்ந்து படித்திருக்கிறேன். சாதாரண நாட்களில் தரிசிக்க வருகிறவர்கள் பெரும்பாலும் பெரிய பிராகாரத்தை வலம் வர மாட்டார்கள். எனவே, படிக்கின்ற என்னைப் போன்ற மாணவர்களுக்கு ஆலயப் பிராகாரங்களும் ஒரு படிப்புக் கூடமே (வீட்டுத் திண்ணையும்தான்!).
இப்போதெல்லாம் படித்துக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஸ்நாக்ஸ் இத்யாதிகள் தேவைப்படுகின்றன. குழந்தைகளே போய் எடுத்துக்கொள்ளும். அல்லது தாயார் கொண்டு வந்து கொடுப்பார்கள். நான் படிக்கிற காலத்தில் இந்த நொறுக்குத் தீனி கலாசாரமெல்லாம் கிடையாது. சாப்பாடுதான். காலையில் பெரும்பாலும் பழேது. மதியம் சாப்பாடு. இரவும் அநேகமாக சாப்பாடுதான். எப்போதாவதுதான் டிபன்.
எனவே, பெரிய பிராகாரத்தில் சுவர் மூலையில் உட்கார்ந்து படிக்கிறபோது நொறுக்குத் தீனி, டி.வி., கேம்ஸ் என்றெல்லாம் சிந்தனை ஓடாது அப்போது!
விளைச்சல் காலத்தில் ஆலயத்துக்கு உண்டான நெல்லைப் பரந்து விரித்துக் கொட்டிக் காய வைத்திருப்பார்கள். கோயில்களுக்கு உண்டான விளைச்சல் தான்யங்களைக் குறைவில்லாமல் குத்தகைதாரர்கள் கொண்டு வந்து சமர்ப்பித்த காலம் அது.
விசேஷக் காலத்தில் ஆலயத்தின் இந்தப் பெரிய பிராகாரத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கும். ராஜம் குருக்கள், ரமணி குருக்கள் - இருவரும்தான் சாட்சிநாதர் ஆலயத்தின் பிரதான அர்ச்சகர்கள். விசேஷ காலம் என்றால், சாமா குருக்கள் கும்பகோணத்தில் இருந்து வருவார். அலங்காரம் நன்றாகப் பண்ணுவார்.
நடேசன் குழுவினர் ‘மல்லாரி’ வாசிப்பார்கள். பிராகாரத்தின் ஒரு இடத்திலேயே சுமார் இருபது நிமிடம் நின்றெல்லாம் வாசித்திருக்கிறார்கள். பக்தர்களோடு அருள்மிகு சாட்சிநாதரும் அருள்மிகு கரும்படுசொல்லியம்மையும் நிச்சயம் அந்த நாதத்தைக் கேட்டு இன்புற்றிருப்பார்கள். அந்த அளவுக்கு இடையூறுகள் இல்லாத இனிய நாதம்.
அப்போதெல்லாம் யூ டியூப் வசதிகள் இருந்து நடேசனது நாகஸ்வரமும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு உலகம் புகழும் அளவுக்கு நடேசனின் வாசிப்பு பேசப்பட்டிருக்கும்.
நவீன டெக்னாலஜிகள் வளராத நம் முந்தைய காலத்தில் எத்தனையோ வித்தகர்கள், விற்பன்னர்களின் அருமை பெருமை பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. ஒரு குறுகிய வட்டத்துக்குள் அவர்களது திறமை பேசப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி அவர்களால் பயணிக்க முடியவில்லை. (இதில் சில விதிவிலக்கும் உண்டு.)
இத்தகைய வாசிப்புக்குச் சொந்தக்காரர்கள் கிராமத்திலேயே பிறந்து, கிராமத்திலேயே வாழ்ந்தவர்கள். தப்பித் தவறிக்கூட நகரத்தின் காற்று தங்கள் மீது பட்டு விடக்கூடாது என்று வாழ்ந்தவர்கள்.
எப்படிக் காசியில் இறந்தால் புண்ணியம் என்று கருதுகிறோமோ, அதுபோல் தாங்கள் வாழ்ந்த கிராமத்து வீடுகளிலேயே தங்களது உயிரும் பிரிய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்.
சம்பளம், வருமானம் - இப்படி எதுவும் அந்த நாட்களில் பெரிதாக இல்லை என்றாலும், கிராம வாழ்க்கை சுகம்தான்.
உதாரணத்துக்கு, என்னுடைய குடும்பத்தையே சொல்கிறேனே... அப்பா பிச்சை ஐயர், புரோகிதம். ஒரு புரோகிதருக்கு என்ன வருமானம் வந்துவிடும்? பெரிதாக ஒன்றுமே கிடையாது. ஒரு பத்து ரூபாய்த் தாளைப் பார்த்துவிட்டால், விழிகள் வியப்பில் விரிகிற காலம் அது.
சாட்சிநாதர் ஆலயத்தில் ஒரு கல்யாணத்தை என் அப்பா நடத்தி வைத்தால், கோயிலில் இருந்து இரண்டு ரூபாய் சம்பாவணையாகத் தருவார்கள். ஒரு ரசீதில் கையெழுத்தும் வாங்கிக்கொள்வார்கள். அந்த இரண்டு ரூபாய் தன் கையில் கிடைக்கிறபோது சந்தோஷத்துடன் வாங்கி, கண்களில் ஒற்றிக்கொள்வார் அப்பா.
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்...
கல்லாப்பெட்டியிலும் சட்டைப்பையிலும் காசு சேரச் சேரத்தான் அதன் மீது ஆசை வருகிறது.
காசின் மீது பற்றுதல் இல்லாமல், அதை ஒரு பொருட்டாக நினைக்காத அந்தக் காலத்துக் கிராமத்துப் பெரியோர்கள் எதில் தோற்றார்கள்? எதை இழந்தார்கள்?
எதிலும் தோற்கவில்லை. எதையும் இழக்கவில்லை.
எல்லாவற்றிலும் ஜெயித்தார்கள்.
எழுபது வயசில் ஜகடை மூலம் கிணற்றில் வாளியை விட்டு ஜலம் இழுத்தார்கள்.
எண்பது வயசில் கையில் வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் டவுன் வரை சென்று வந்தார்கள்.
தொண்ணூறு வயசில் வேர்க்கடலை உருண்டையைக் கடித்துச் சாப்பிட்டார்கள்.
தனக்கு முன் தலைமுறை சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான செல்வத்தையே ‘தானம், தர்மம்’ என்று வாரி இறைத்துவிட்டு, கட்டிய வேட்டியோடு பூம்புகார் பங்களாவை விட்டுக் கிளம்பினார் பட்டினத்தார். அப்போது அவருடைய குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள்.
இருக்காதா பின்னே... சேர்த்து வைத்த சொத்துகள் முழுவதையும் யார் யாருக்கோ வாரி இறைத்தால், குடும்ப உறுப்பினர்கள் சும்மா இருப்பார்களா? சொந்த பந்தங்கள் சிலர் பட்டினத்தாரைத் தூற்றினாலும், அந்த மகானை இன்றைக்குக் கொண்டாடி வருகிறோம். அவரது புகழைப் பாடி வருகிறோம்.
எத்தனை பணம் சேர்த்தாலும், உடலில் இருந்து இந்த ஜீவன் பிரிகிறபோது அனைத்தையும் மூட்டைக் கட்டிக்கொண்டு மேலே எடுத்துப் போக முடியாது.
ஆனால், இன்று அதே பணத்துக்காகக் குடும்பத்திலேயே வெட்டுக்குத்துகள் நடக்கின்றன. அண்ணன் - தம்பிகள் பிரிகிறார்கள். நல்லது கெட்டதுகளில்கூட அவர்களால் கடைசி வரை ஒன்று சேர முடிவதில்லை.
ஒருவேளை நல்லது கெட்டதுகளில் முகம் பார்க்கிற சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், அங்கே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை.
யோசித்துப் பாருங்கள்... அந்த நாளில் ஒரு அக்ரஹாரத்து வீட்டில் மொத்த குடும்பமே வாழ்ந்தது.
ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் மாமா, மாமி, அத்தை, அத்திம்பேர், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா என்று அந்த உறவு முறையைச் சொல்லி அழைக்கிறபோதே பாசம் பீரிடும்.
இன்றைக்கு எங்கேனும் அதைப் பார்க்க முடிகிறதா?
இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு இதுபோல் உறவுமுறைகள் கிடைக்குமா?
எல்லா பிரிவுகளுக்கும், பேதங்களுக்கும் பணம்தான் காரணம்!
பணம் என்பது ஓர் மாயை. அது இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அதுவே வாழ்க்கை இல்லை.
கிராமங்கள் - அமைதியைக் கொடுத்தன. ஆரவாரத்தைக் கொடுக்கவில்லை.
எளிமையைக் கொடுத்தன. ஏமாற்றத்தைக் கொடுக்கவில்லை.
பண்பைக் கொடுத்தன. பணத்தைக் கொடுக்கவில்லை.
ஆரோக்கியத்தைக் கொடுத்தன. அவலத்தைக் கொடுக்கவில்லை.
இன்னும் இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்...
(தொடரும்)