அனுபவச் சுவடுகள் - 23 விமானப் பயணமும் வீட்டுக்கு வரும் தந்தியும்!

சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
Published on

ங்கள் ஊரான திருப்புறம்பயத்தில் வசிப்பவர்கள் அடிக்கடி பயணம் செல்லக் கூடிய - அருகில் இருக்கும் நகரம் கும்பகோணம்தான். எந்த வெளியூருக்குப் போக வேண்டும் என்றாலும், கும்பகோணம் போனால்தான் சாத்தியம்.

கும்பகோணம், ஆன்மிக நகரம். இங்கு பிறப்பதும், வளர்வதும், வாழ்வதும் ஒரு வரம். கும்பகோணம் வாசிகளிடம் இது குறித்துக் கேளுங்கள். கதை கதையாய் சொல்லுவார்கள்.

நவராத்திரிக்கு கும்பேஸ்வரன் கோயில்.

ராம நவமிக்கு ராமசாமி கோயில்.

வைகுண்ட ஏகாதசிக்கு சாரங்கபாணி கோயில்... என்று நாளுக்கொன்றாக

எத்தனை எத்தனை கோயில்கள்,

எத்தனை எத்தனை நதிகள்!

இன்றைக்கும் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்கிறேன் என்றால், எனக்கு ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. அதென்னமோ தெரியவில்லை... கும்பகோணம் மண்ணில் காலடி வைத்ததுமே, ஒரு சிலிர்ப்பு, பரவசம் என்னை அறியாமல் ஆட்கொள்ளும். படித்ததும், வளர்ந்ததும், வாழ்ந்ததும் இந்த ஊர் அல்லவா!

சொந்த ஊர் திருப்புறம்பயத்தில் இருந்து எனது முதல் சென்னைப் பயணம் அநேகமாக நான் ஐந்தாவது அல்லது ஆறாவது படித்துக் கொண்டிருந்தபோது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கும்பகோணம் கோயில்கள்...
கும்பகோணம் கோயில்கள்...

என் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு சென்னைக்கு வந்தேன். நங்கநல்லூரில் இருக்கும் என் அத்தான் (அத்தை மகன்) சங்கரன் இல்லத்துக்கு வந்தோம். 19வது தெருவில் இருந்தார். வீட்டு வாசலில் ‘சங்கரன்’ என்று பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் பயணித்தோம். தாம்பரத்தில் இறங்கி அங்கிருந்து மின்சார ரயிலில் பயணித்து மீனம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து நங்கநல்லூருக்கு நடந்து போனோம். (அப்போது பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷன் கிடையாது. மீனம்பாக்கத்துக்கு அடுத்து பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்தான்.)

சுமார் ஒரு வாரத்துக்கு மேல் சங்கரன் அத்தான் இல்லத்தில் இருந்தோம்.

திருப்புறம்பயம் அக்ரஹாரத்தில் கோலிக்குண்டும், ஒளிஞ்சான்குண்டும் விளையாடித் திரிந்த எனக்கு, நங்கநல்லூர்வாசம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நகரமாக இருந்தாலும், வேஷ்டி துண்டுடன் சுற்றிக்கொண்டிருந்த ஆண் மகன்களையும் அதிகாலை வேளையிலேயே வாசல் தெளித்துக் கோலம் போட்ட மகளிரையும் அதிகம் பார்த்தேன்.

சிறுவனான எனக்கு அப்போதிருந்த ஒரே பொழுதுபோக்கு என்னவென்றால், வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு மேலே பறக்கும் விமானங்களை வேடிக்கை பார்ப்பதுதான். விமானங்கள் செல்கிற அழகை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.

விமானங்களை எண்ணிக்கொண்டிருப்பேன். விமானங்களை வேடிக்கைப் பார்ப்பது என்றால் அந்த நாளிலேயே அப்படி ஒரு சுகம் எனக்கு.

என்னுடைய முதல் விமானப் பயணம் அமைந்தது. எங்கே தெரியுமா?

சென்னையில் இருந்து கோவாவுக்கு. விகடனில் பணிபுரிந்த நாட்களில்  மும்பை, திருவனந்தபுரம், கொச்சி என்று பல இடங்களுக்கு விமானங்களில் பயணித்திருக்கிறேன்.

பத்திரிகைப் பணிக்குப் பிறகு சொற்பொழிவுத் துறைக்கு வந்ததும் நிறைய விமானப் பயணங்கள். உள்நாடு, வெளிநாடு என்று ஏராளமான பயணங்கள். 

இதையும் படியுங்கள்:
மனம் என்னும் அற்புத விளக்கு!
சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

ங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து நகர வாழ்க்கையில் இன்று இருந்தாலும், அந்தக் கால கிராம வாழ்க்கையை இன்று நினைத்தாலும் சொர்க்கம்தான்.

அன்று... பள்ளிக்குச் சென்ற தன் குழந்தை ‘இதோ வந்து விடுவான்... அவனை முத்தமிட்டு வரவேற்க வேண்டும்’ என்று அம்மாக்காரி மாலை நாலு மணி வாக்கில் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பாள் கிராமங்களில். குழந்தை வரப் போகிற வழியையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள்.

இன்று... குழந்தைகள் அவர்களே ஸ்கூலுக்குச் செல்கிறார்கள். அவர்களே திரும்புகிறார்கள். வீட்டுக்குத் திரும்புகிறபோது பெரும்பாலான வீடுகளில் அம்மா இருப்பதில்லை. அலுவலகம் சென்றிருக்கலாம்.  தாத்தாவும், பாட்டியும் வீட்டில் இருந்தால், அந்தக் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். பாசம் பற்றி புரிவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

ந்தக் காலத்து கிராம வாழ்க்கையில் நம்மையெல்லாம் பதைபதைக்க வைத்த இன்னொன்று தந்தி. அதாவது டெலிகிராம்!

கிராமத்து வாழ்க்கையில் வீடு வாசலில், ‘சார்... தந்தி...’ என்று போஸ்ட் ஆபீஸில் இருந்து வருகிறவர் உரக்கக் குரல் கொடுத்தாலே அவ்ளோதான்!

ஒட்டுமொத்தக் குடும்பத்தில் இருக்கிறவர்கள் அனைவரும் பதறிப் போய் வாசலுக்கு வந்து நிலைகொள்ளாமல் நிற்பார்கள்.

குடும்பத்தில் பொறுப்பான ஒருவர் பதறாமல் கையெழுத்து போட்டு அந்த தந்தியை வாங்கிப் பிரித்துப் படிக்கிறவரை சுற்றி நின்றுகொண்டிருக்கிற எவருக்கும் இருப்புக் கொள்ளாது. கண்களைக் கசக்கியபடி ‘நங்கநல்லூர் அத்தையா இருக்குமோ... பெங்களூர் பெரியப்பாவா இருக்குமோ... மதுரை சித்தியா இருக்குமோ?’ என்று நிலைகொள்ளாமல் தவிப்பார்கள்.

கையெழுத்துப் போட்டு வாங்கின தந்தியை வலது ஆட்காட்டி விரலை உள்ளே விட்டுக் கிழிக்கிறபோது, ‘கடவுளே... யாருக்கும் எதுவும் ஆகி இருக்கக் கூடாது’ என்று எல்லா தெய்வங்களையும் வேண்டுவார்கள். கிராமத்தில் ஏராளம் பார்த்திருக்கிறேன்.

ஒரு உயிருக்கு இருக்கிற வலியையும் வேதனையையும் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் நம் முன்னோர். யாரோ ஒருவர் தூரத்துச் சொந்தம் வயது மூப்பின் காரணமாக இறந்தால்கூட சோகம் பிழியக் கதறி அழுவார்கள். இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டில் அந்தப் பேச்சுதான் ஓடும்.

இன்று  இறப்புச் செய்தி வாட்ஸப், முகநூல்களில் வருகிறது. முக்கியமானவர்களுக்கு போனில் சொல்கிறார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் பிரபலங்கள் என்றால் நாளிதழ்களில் கட்டம் கட்டி வெளியிடுகிறார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கிறோம். படிக்கிறோம்.

தெரிந்தவர்கள் என்றால், நேரில் போய் ஒரு ஐந்து நிமிடம், பத்து நிமிடம்… யார் கண்களில் பட வேண்டுமோ, அவர்கள் கண்களில் படுமாறு நின்று கொண்டிருப்போம். அடுத்தடுத்து துக்கம் விசாரிக்க யாராவது வந்தால், ‘உட்காருங்க சார்’ என்று நாற்காலியில் இருந்து எழுந்து, அவருக்கு இடம் விடுகிற சாக்கில் தலையைக் குனிந்தபடி வெளியே வந்து விடுகிறோம். அவ்வளவுதான்!

இறப்பையும் வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டோம் இப்போது.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com