அனுபவச் சுவடுகள்-8 மகா பெரியவா பரிந்துரைத்த கண் பரிசோதனை!

மகா பெரியவா...
மகா பெரியவா...
Published on

ன்னைத் தரிசிக்க வருகிற பக்தன், பூக்களையும் பழங்களையும் வாங்கி அர்ப்பணிக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்ப்பதில்லை. தனக்குப் புது ஆடைகள் வேண்டும் என்று எந்த தெய்வமும் கேட்பதில்லை. சர்க்கரைப் பொங்கலையும், ரவா கேசரியையும் எந்த அம்பாளும் கேட்பதில்லை.

தெய்வங்களும் மகான்களும் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் நல்ல மனம் மட்டுமே! இந்த மனதில் சூது, கல்மிஷம், பொறாமை, வஞ்சகம் -
இவை எல்லாம் இல்லாமல் இருந்தாலே போதும். கடவுள் என்றென்றும் நம்மிடமே வாசம் செய்வார்.

இதுதான் வாழ்க்கையின் சூட்சுமம்!

பின்னாட்களில் இதை உணர்வுபூர்வமாக நான் உணர்ந்த அனுபவங்கள் ஏராளம் உண்டு. அதில் ஒன்றைப் பார்க்கலாமா?

பத்திரிகையில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே மூக்குக் கண்ணாடி அணிகிற வழக்கம் உண்டு. கிட்டப் பார்வை. மைனஸ் பவர். அதாவது, தொலைவில் இருப்பவை தெரியாது.

வீட்டில் இருக்கின்ற வேளைகளில் முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் முன்னாலேயே இருப்பேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு, பத்திரிகைத் தொடர்களுக்கு, சொற்பொழிவுகளுக்கு என்று கம்ப்யூட்டரில் நான் சேமித்து வைத்திருக்கும் எனது செய்திச் சுரங்கத்தில் இருந்து சுவாரஸ்யமான விஷயங்களைத் தேடுவேன்.

கம்ப்யூட்டரில் ரொம்ப நேரம் தேடித் தேடி போரடித்தாலோ, கண்கள் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினாலோ என் லைப்ரரியில் உள்ள புத்தகங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.

ஆக, பணி நேரத்தில் கண்கள் எப்பவுமே பிஸி. இதன் காரணமாக கண்களில் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து வருவதாக உணர்ந்தேன்.

மனதில் நாம் சேமித்து வைத்திருக்கும் எண்ணங்களைத்தான் மூளை செயல்படுத்தும். எனவே, என் கண்களில் ஏதோ பிரச்னை இருக்கும் போலிருக்கிறது என்று நானே ஒரு எண்ணம்கொண்டிருந்தேன்.

‘இனியும் காலம் தாழ்த்தாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’ என்று தீர்மானிப்பேன். அந்த நேரம் பார்த்து ஏதோ ஒரு வேலை வந்துவிடும். விளைவு ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று தள்ளிப் போட்டு விடுவேன்.

நாலைந்து நாள் போன பின் மனைவி நினைவு படுத்துவாள். ‘ஆகட்டும், பார்க்கலாம்’ என்று அப்போதைக்குத் தள்ளிப் போட்டு விடுவேன்.

ஒரு கட்டத்தில் கண்களில் அவஸ்தை கூடியதாக உணர்ந்தேன்.

தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது கண்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது.

‘இனியும் தாமதம் கூடாது. எப்படியும் பரிசோதனைக்குப் போயே ஆக வேண்டும்’ என்று முடிவெடுத்தேன்.

இந்த இடத்தில்தான் பெரியவாளின் அதிசயம் துவங்கியது!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

சென்னை நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயாவில் பணிபுரியும் என் நண்பர் இருங்கோவேள் ஒரு நாள் என்னை போனில் அழைத்தார்.

"ஜீ... எப்படி இருக்கீங்க?" என்றார்.

"நல்லா இருக்கேன் சார்."

நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

"ஜீ... எப்ப ஐ டெஸ்ட் பண்ணீங்க?" என்றார்.

"சார்... ஒரு மூணு வருஷத்துக்கு மேல இருக்கும்னு நினைக்கறேன்" என்று சொல்லும்போதே, இவரைப் பயன்படுத்திக்கொண்டு கண் பரிசோதனையை முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன். தானாகவே வந்து என்னிடம் சிக்குகிறாரே...இவரை விட்டு விடலாமா?  அதற்கேற்றாற் போல் அவரே ஆரம்பித்தார். என் நலனில் அக்கறை கொண்டு.

"நீங்கள்லாம் ப்ரொகிராம். அது இதுன்னு சுத்திக்கிட்டே இருப்பீங்க. உடம்பைக் கவனிக்கத் தவறி விடுவீங்க. அதனாலதான் நான் கேக்கறேன். இனியும் தாமதம் பண்ணாம கண் டெஸ்ட் பண்ணிடுங்க. ஒரு வாரத்துக்கு முந்தி போன் பண்ணிச் சொல்லுங்க. அப்பாயின்ட்மெண்ட் வாங்கி வைக்கிறேன். சங்கர நேத்ராலயா வந்து டெஸ்ட் பண்ணிடுங்க" என்று சொன்னார்.

கண் பரிசோதனையை சிரமம் இல்லாமல் பூர்த்தி செய்வதற்கு இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்க்குமா?

அதுவும் சங்கர நேத்ராலயாவிலேயே இது அமைய இருப்பது எனக்குக் கூடுதல் திருப்தி (மகா பெரியவா ஆசிகளோடு துவங்கப்பட்ட கண் மருத்துவமனை இது).

வழக்கம்போல் பயணம், ஷூட்டிங் என்று அடுத்து வந்த நாட்களில் கண் பரிசோதனைக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்க முடியவில்லை. என்றாலும், 'இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக் கூடாது என்று ஒரு சில வாரங்கள் கழித்து (அநேகமாக இரண்டு மாதம் கழித்து) இருங்கோவேளுக்கு போன் செய்து ஒரு தேதியைச் சொல்லி 'சாத்தியப்படுமா?' என்று கேட்டேன்.

அரை மணி நேரம் கழித்து என்னை அழைத்தவர், நான் சொன்ன அதே தேதியில் (22.6.2016 புதன்) மாலை 4.30 மணிக்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கி விட்டு, குறித்த நேரத்தில் வந்து விடுமாறு சொன்னார்.

சுமார் இரண்டு மணி நேரம் கடந்த பின் ஒரு டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அந்த கண் டாக்டர் பளிச்சென்று சொன்ன முதல் வாசகம்: "நீங்க பயப்படத் தேவையில்லை. உங்க கண்ணுல எந்த ஒரு பிரச்னையும் இல்லை."

மகா பெரியவாளை மானசீகமாகவும், டாக்டரை முகம் பார்த்தும் கையெடுத்துக் கும்பிட்டேன்.

மிக மிகக் குறைச்சலான 'பவர்' இருப்பதாகக் குறிப்பிட்டார். அந்த 'பவருக்கு' கண்ணாடி விருப்பப்பட்டால் போடலாம்... இல்லை என்றால் பரவாயில்லை என்றும் டாக்டர் சொன்னார்.

இருந்தாலும், தொடர்ந்து கம்ப்யூட்டருக்கு முன்னே பல மணி நேரம் அமர்ந்திருக்கிற காரணத்தால், அந்த 'பவருக்கு' தோதான கண்ணாடிக்கும் அங்கேயே ஆர்டர் கொடுத்தேன்.

இதையும் படியுங்கள்:
சிவனின் அருளை எளிதில் பெறுவதற்கான வழிகள்!
மகா பெரியவா...

நான் புறப்படுகிற நேரம் வரை இருங்கோவேள் என்னுடன் இருந்தார். புறப்படும்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஏகத்துக்கும் பிரமிப்புக்கு உள்ளாக்கியது.

"ஜீ... உங்களை கண் டெஸ்ட்டுக்கு வரச் சொல்லி நான் உங்களுக்கு போன் செய்தேன் அல்லவா?"

''ஆமாம்.'"

"அது நானா பண்ணலை" என்றார். புரியாமல் விழித்தேன்.

அவரே தொடர்ந்தார்: "ஜீ... நான் சொல்ல வர்றது வேற விஷயம். எல்லா டெஸ்ட்டும் முடிஞ்சு 'உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லே'னு டாக்டர் சொன்ன பிறகு. இந்த விஷயத்தைச் சொல்லலாம்னு இருந்தேன். நல்லவேளையா டாக்டரும் உங்க கண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லேன்னு சொல்லிட்டார்.

கண் டெஸ்ட் சம்பந்தமா நான் உங்களுக்கு போன் செய்து கேட்டேன் அல்லவா? அதற்கு முதல் நாள் நள்ளிரவு மகா பெரியவா என் கனவில் வந்து, 'சுவாமிநாதனைக் கூப்பிட்டு கண் பரிசோதனை செய்து கொள்ளச் சொல்' அப்படின்னு சொன்னார். விடிகாலைல எழுந்ததும் இந்தக் கனவை நினைச்சு ஆச்சரியப்பட்டேன். 'சுவாமிநாதன்'கிற பேர்ல நீங்க என்னோட நண்பர் என்றாலும், மொத்தம் நான்கு சுவாமிநாதன்கள் என் நண்பர்கள் லிஸ்ட்ல இருக்காங்க. மகா பெரியவா சொன்னது எந்த சுவாமிநாதனா இருக்கும்னு காலை நேரத்துல நான் குழம்பின வேளையில எங்க வீட்டு டி.வி. ஓடிட்டிருந்தது. யதேச்சையா டி. வி. பக்கம் திரும்பினா அதுல உங்க நிகழ்ச்சி ஓடிட்டு இருந்தது. உங்க முகத்தைப் பார்த்ததும், என்னோட குழப்பத்துக்கு மகா பெரியவாளே ஒரு விடை கொடுத்துட்டார்னு சந்தோஷமாயிட்டேன்.

Sankara nethralaya...
Sankara nethralaya...

ஆபீஸ் வந்ததும் முதல் வேலையா உங்களுக்கு போன் செய்தேன். நீங்களும் மூணு வருஷமா கண் டெஸ்ட் பண்ணாம இருக்கீங்கன்னு சொன்னீங்க. மகா பெரியவா சொன்னது அப்படியே நடந்திடுச்சு."

இதைச் சொல்லும்போது இருங்கோவேளின் குரல் தழுதழுத்தது.

எனக்குப் பேச்சே வரவில்லை. இருங்கோவேளின் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி சொன்னேன்.

இப்படி ஒரு கருணை தெய்வம் இருக்க முடியுமா?

கண் பரிசோதனை செய்துகொள்ளுமாறு இவருக்குக் கனவில் வந்து அறிவுறுத்துகிறார் என்றால்,  தன் பக்தர்கள் - நலனில் எந்த அளவுக்கு அந்த மகான் அக்கறை கொண்டிருக்கிறார்!

என் கண்கள் பனித்துவிட்டன. ஒரு விநாடி கண்களை மூடி மகா - பெரியவாளுக்கு நன்றி சொன்னேன்.

இது எனக்கான அனுபவம் என்று சொல்லவில்லை. இதுபோல் பலருடைய மனதிலும் மகான் புகுந்துகொண்டு அற்புதங்கள் இன்றைக்கும் செய்து வருகிறார்!

‘இவர்தான் நமக்கு எல்லாமும்' என்று அவரிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு, உங்கள் பணிகளை நேர்மையாகவும் உண்மையாகவும் செய்து பாருங்கள்! உங்களுக்குத் துணையாக எப்போதும் இருப்பார்.

மருத்துவமனையை விட்டுக் கிளம்பினேன். மகா பெரியவா தூதுவராக வாசல் வரை வந்து வழி அனுப்பினார் இருங்கோவேள்.

'வாழ்க்கை' என்கிற இந்தப் பயணம் இருக்கிறதே... அதி அற்புதமானது.

ஒரு விமானத்தில் பயணிக்கும்போது அதை நாம் செலுத்துகிறோமா?

இல்லை. சும்மா தேமே என்று உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று விடுகிறோம். அல்லவா? இத்தனைக்கும் விமானம் எப்படி இயக்கப்படுகிறது. விமானத்தை ஓட்டும் பைலட் யார் என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை.

அதுபோல்தான் வாழ்க்கையும்!

இந்த உலகத்தையே ஒரு பெரிய விமானமாக நினைத்துக்கொள்ளுங்கள். நித்தமும் நாம் இதில் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பவர் இறைவன். எப்படி விமானம் ஓட்டுபவரை நாம் பார்ப்பதில்லையோ. அதுபோல் கடவுளையும் நாம் பார்ப்பதில்லை. பார்க்க முற்படுவதில்லை.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது. 'நல்லபடியாகப் பயணம் அமைய வேண்டும்' என்று ஒரு சில விநாடிகள் கண்களை மூடிப் பிரார்த்திக்கிறோம். அல்லவா? அதுபோல் நித்தமும் காலையில் எழுந்தவுடன், இறைவனை ஒரு கணம் நினைக்க வேண்டும். இன்றைய பொழுது நல்லவிதமாக அமைய வேண்டும் என்று.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com