-ம. வசந்தி
சிவன் மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழு முதல் கடவுளாகவும் பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளாதளால் பரமசிவன் என அழைக்கப் படுகிறார். அனைத்து விதமான பலன்களையும் அள்ளித்தரும் சிவபெருமான் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தையும் செய்து முடிக்க கூடியவர். சிவனை முறையாக வழிபடுவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும். சிவ பெருமானை ஒரு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபட்டால் அவரின் அருளை எளிதில் பெறமுடியும்.
மந்திர ஜபம்
பக்தி செய்வதும், முழுவதுமாக சரணாகதி அடைவதுமே சிவனின் அருளை பெறுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். சிவனின் மந்திரங்களை, குறிப்பாக பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நம சிவாய” மந்திரத்தை தினமும் உச்சரிப்பது சிவனின் அருளைப் பெற உதவும். சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கட்கிழமை அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வரவேண்டும். சிவ வழிபாடு செய்வதும், சிவனின் லிங்க ரூபத்திற்கு தொடர்ந்து பூஜை செய்வதும் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்யும். லிங்கத்திற்கு பால், தயிர், தேன், தண்ணீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது, மலர்கள் படைத்து, பூஜை செய்வது ஆகியன சிவனின் மனதை குளிர செய்யும். சிவலிங்கம் என்பது சிவனின் அருவுருவமாகும்.
ருத்ராபிஷேகம்
ருத்ராபிஷேகம் என்பது சிவனை ருத்ர வடிவில் வணங்கி அவருக்கு புனித நீராடுவது. ருத்ர பகவான் சிவனின் உக்கிரமான வடிவம். சிவனின் 108 பெயர்களில் ருத்ராவும் ஒன்று. சிவனை மகிழ்விக்க ருத்ராபிஷேகம் செய்யப் படுகிறது. சிவனை மகிழ்விப்பது தீய சக்தியை அகற்றி வீட்டில் செழிப்பை ஏற்படுத்த உதவும். சிவனின் அருளை விரைவாக பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் ருத்ராபிஷேகமும் ஒன்று. சிவன் என்றாலே இன்பத்தை வழங்குபவர் என்று பொருள். காதல், திருமணம் மகிழ்ச்சி, செல்வம், சக்தி, ஞானம் போன்றவற்றை வழங்குபவராக சிவபெருமான் இருக்கிறார். சிவனுக்கு விருப்பமான மிக நீண்ட சடங்கும் ருத்ரபிஷேகம்தான். ருத்ராபிஷேகம் செய்வது அந்த யாகத்தில் கலந்து கொள்வது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லதாகும்.
சிவலிங்க அபிஷேகம்
சிவனை அபிஷேகப் பிரியர் என்பார்கள். பலவிதமான பொருட்களால் அவருக்கு அபிஷேகம் செய்து, அவரை குளிர்ப்பது அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். பால், தேன், மஞ்சள், சுத்தமான தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்வதும், வில்வத்தால் அர்ச்சிப்பதும் சிவனின் அருளை பெற்றுத் தரக்கூடியதாகும். கங்கை நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக தீய எண்ணங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
ருத்ராட்சம் அணிவது
ருத்ராட்சம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறது. இதை அணிவதால் உடல் நோய்கள் தடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ருத்ராட்சம் மனித குலத்திற்கு ஈசன் அளித்த அருட்கொடையாகவே கருதப்படுகிறது. சிவபெருமான் தன்னை பொன்னால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகதானே இருக்கும். ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என போற்றப்படுகின்றது. ருத்ராட்சத்தை பார்ப்பதும் அணிவதும் மிக பெரும் புண்ணியமாக நம்பப்படுகின்றது சரியான முறைகளை பின்பற்றி ருத்ராட்சத்தை அணியும்போது அதன் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கும்.
இத்தகைய பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தால் சிவனின் அருளை சீக்கிரமே பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.