எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்கு ஒரு நாள் ஆஜானுபாகுவான குரங்கு ஒன்று வந்துவிட்டது. சாதம் வடித்து வைத்திருந்த ஒரு சிறு வெங்கலப் பானையை அப்படியே தூக்கிக்கொண்டு ஓட்டில் ஏறிவிட்டது.
‘சாதம் போனால் பரவாயில்லை... வெங்கலப் பானை வேண்டுமே’ என்று என் அம்மா நாலைந்து வாழைப்பழங்களை ஓட்டின் மேல் வீசி எறிய...
இன்னொரு ஆகாரம் கிடைத்த ஆனந்தத்தில் வெங்கலப் பானையின் பிடியை விட்டு விட்டது குரங்கு. இன்னொன்று கிடைத்துவிட்ட சுகத்தில் ஏற்கெனவே இருப்பதைத் தள்ளி விடுகிற மனித புத்திதானே, குரங்குகளுக்கும்!
ஓடுகளின் மேல் கடகடவென்று உருண்டு வந்து வீட்டு முற்றத்தில் ‘தொப்’பென்று விழுந்தது அந்த வெங்கலப் பானை. நல்லவேளை... நசுங்கல் ஏதும் ஏற்படவில்லை.
அந்த நாட்களில் சாதம் வடிப்பதற்கு, வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கு வெங்கலப் பானைதான். வெங்கலப் பானையில் தயாராகும் உணவின் சுவை அருமையாக இருக்கும்.
இன்றைக்கு ஏதாவது பழைய நினைவுகளை அசை போட்டால், ஒரு கணம் நம்மை மறந்து அந்தக் கால சூழ்நிலைக்கே போய் விடுகிறோம். காரணம் அந்தக் காலத்தில் இருந்த சுகம்.
உடல் உழைப்பு அதிகம் இருந்தாலும், நோய்நொடி என்று பெரிதாக எவரும் அப்போது கஷ்டப்பட்டதில்லை.
முட்டிவலி, முழங்கால் வலி, கை குடைச்சல், முதுகு வலி என்று பலரும் இப்போது தைலத்தோடும் மாத்திரை மருந்துகளோடும் அவஸ்தைப்படுகிறார்கள்.
தினமும் யோகா, எக்ஸர்சைஸ் என்று பார்க்குக்கும் பீச்சுக்கும் அலைகிறோம். வியாதிகளைக் குறைக்க இதுதான் மருந்து என்று இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
யோசித்துப் பாருங்கள்... அந்தக் காலத்தில் எக்ஸர்சைஸ் உண்டா? வாக்கிங் உண்டா? வீட்டு வேலைகள் என்ற பெயரில் எல்லா உடற்பயிற்சிகளும் நம் வாழ்க்கையோடு கலந்தே இருந்தது. கிணற்றில் இருந்து ஜலம் இழுப்பது, துணிகளை அடித்துத் துவைப்பது, குளிப்பதற்கு ஆற்றங்கரைக்குச் செல்வது, உள்ளூர் கோயிலில் இருக்கிற பெரிய பிராகாரத்தை பல முறை வலம் வருவது, குனிந்து நிமிர்ந்து வீட்டைப் பெருக்குவது, ஒரு துணியை ஜலத்தில் முக்கி எடுத்து வீடு முழுக்கத் துடைப்பது... இப்படிப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
அரிவாள்மணையைத் தொலைத்தோம். தரையில் உட்கார்ந்து காய்கறி நறுக்குவது போனது. கத்தியோடு சேரில் உட்கார்ந்துகொண்டு டேபிளில் காய்கறிகளை வைத்து இன்று நறுக்குகிறோம்.
கல்லுரல் போயாச்சு. தரையில் உட்கார்ந்து வியர்த்து விறுவிறுக்கக் குழவியை சுத்தோ சுத்தென்று சுற்றியது ஒரு காலம். காம்பேக்ட் கிரைண்டர் வந்தாச்சு. ஸ்விட்சைப் போட்டுவிட்டு, சீரியல் பார்க்கப் போய் விடலாம்.
அம்மியில் சட்னி அரைத்தது அந்தக் காலம். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், கல் உப்பு இவற்றை அம்மிக்கல்லில் வைத்து திருப்புறம்பயத்தில் எங்கம்மா அம்மிக் குழவியால் நசுக்குவதை சிறுவனாக இருந்தபோது பார்த்தது நினைவுக்கு வருகிறது. அந்த அம்மிக் குழவியைத் தூக்குகிற தெம்புகூட இன்று பலருக்கு இல்லை. காரணம், விதம் விதமான மிக்ஸிகள் வந்தாச்சு.
ஆரஞ்சுப் பழங்களைக் கூட கையால் பிழிய வேண்டாம். மெஷினில் வைத்தால் போதும். ஜூஸ் ரெடி!
கொல்லையில் உயரமான ஒரு கல்லில் துணியை அடித்துத் துவைத்தது போய், வாஷிங் மெஷின் வந்தாயிற்று.
வெங்கலப் பானையில் அரிசியை வேகவைத்துக் கிளறிக்கொண்டே இருந்தது போயாச்சு. குக்கரில் அடைத்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோம்.
தரையில் பாய் விரித்துப் படுத்தது இன்னமும் நினைவில் இருந்து அகலவில்லை. இப்போது கட்டில் சுகம்.
சாம்பிராணி போட்டு தலையைக் கோதி விட்டுக் காய வைத்தது ஒரு காலம். இப்போது டிரையர், ஃபேன்.
இப்படி இன்னும் என்னென்ன விஞ்ஞான மாற்றங்கள் இனி வரும் காலங்களில் வந்து மனிதனை ஒட்டுமொத்தமாக முடங்கடிக்கப் போகிறதோ? பழையபடி இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு சிலரையும், ‘காலத்துக்கு தக்கபடி மாறிக்கோ’ என்று சில இளசுகள் அட்வைஸ் பண்ணி, அவர்களையும் புது யுகத்துக்கு இழுத்து வந்து விடுகிறார்கள். விஞ்ஞான வசதிகளே நுழையாமல் இருந்த கிராமங்களையும்கூட நாம் விட்டு வைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
உடம்பு மேல இருந்த அக்கறை இப்ப எல்லாருக்கும் குறைஞ்சு போச்சு. அதனால் படுகிற அவஸ்தைகள்தான் ஒன்றா, ரெண்டா?
ஒருவர் இப்போது ஊருக்கோ டூருக்கோ புறப்படுகிறார் என்றால், எதை வைத்துக் கொள்கிறாரோ இல்லையோ... மாத்திரை மருந்து, தைலம் இத்யாதிகளை மறக்காமல் முதலில் எடுத்து வைத்துக் கொள்கிறார். மனதோடு வாழாமல் மருந்தோடு வாழ்கிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மனசு.
இன்றைக்கு அலுவலகம் செல்கிற அவசரத்தில் ஒரு வாளித் தண்ணீரில் அரக்கப் பரக்கக் குளித்து விட்டு ஓடுகிறோம்.
ஆனால், அன்றைக்கு நம் முன்னோர்களை நினைத்துப் பாருங்கள்!
வயல்வெளி பம்ப் செட்டுகளில் குற்றால அருவிக் குளியல்... விரட்டுவதற்கும் ஆள் இருக்காது. குளித்தது போதும் என்கிற மன நிறைவும் வரவே வராது.
கரும்புகளை அச்சு வெல்லமாக்கும் ஆலைகளில் எத்தனை கரும்பு ஜூஸ் கேட்டாலும் தருவார்கள். ‘போதும் போதும்’ என்கிற அளவுக்குக் குவளைகளில் தருவார்கள். புத்தம் புதிதாக வந்த கரும்புச் சாறு சுடச் சுட இருக்கும்.
எங்கள் வீட்டுக்குத் திடீரென்று வந்த விருந்தினர்களை உபசரிக்க பல முறை பெரிய பெரிய தூக்குகளில் வாங்கி வந்திருக்கிறேன். இன்றைக்கு நகரத்தில் ஒரு கப் கரும்பு ஜூஸ் இருபது ரூபாய்க்குக் குறைந்து இல்லை.
தமிழ் வருஷப் பிறப்பன்னிக்குக் கொள்ளிடத்துக்குக் குளிக்கப் போவோம். வீடு திரும்பும்போது கொண்டு வருகிற மாங்காய் கணக்கே இருக்காது. அள்ளிக் கொடுப்பார்கள்.
எங்கள் வீட்டுக்கு மோர் கொடுத்த பாட்டியின் பெயர் ‘பவுன்’. வீட்டுக்குப் பாத்திரத்தில் கொடுத்த பிறகு, தேங்காய் சிரட்டையில் கட்டியாகக் கொஞ்சம் தயிர் தருவாரே அந்த பவுன் பாட்டி... யப்பப்பா... அந்த குவாலிட்டி தயிர் இப்ப போயே போச்சு.
வீட்டுக்குள்ளேயே ஓடியாடி ஒளிந்து விளையாடுவோம். அத்தனை பெரிய வீடு... இன்று தெருவில்கூட ஓடியாடி விளையாட முடிகிறதா குழந்தைகளால்?
ஆரோக்கியமான தின்பண்டங்கள் போய், ஆயுசையே விழுங்குகிற அபாயகரமான பாக்கெட்டுகள்தான் இப்போது...
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? ஒன்றே ஒன்றுதான்… வாழ்க்கை சுருங்கிவிட்டது.
(தொடரும்)