மதுரை என்றாலே தூங்கா நகரம், கோவில் நகரம் என பல பெருமைகள் உண்டு. அப்படியானால் இத்தனை பெருமைகளும் மதுரைக்கு மட்டும் தானா என்று கேட்கிறீர்களா? மதுரையில் இருந்து பிரிக்கப்பட்ட தேனி மாவட்டத்தின் மிகப் பழமை வாய்ந்த கோவில்களை இப்பதிவில் காணலாம்.
மனம் திருந்திய கோவலனோடு புதிதாய் ஒரு வாழ்க்கையை தொடங்குவதற்காக மதுரை மாவட்டத்தின் கிழக்கு வாயில் வழியாக மதுரைக்குள் நுழைகிறாள் கண்ணகி. தன்னுடைய இல்லற வாழ்க்கையை தொடங்குவதற்காக பொருளீட்டி வர கையில் சிலம்போடு சென்ற கோவலன் அரசபையில் நடந்த கலவரத்தால் மாண்டு போனதை அறிந்த கண்ணகி கோபத்தில் மதுரையை எரிக்கிறாள். அழுது புலம்பி வாழ்வை வெறுத்து கடைசியாக சென்று சேர்ந்த இடம் தேனி மாவட்டத்தின் எல்லையும் கேரள மாநிலத்தின் நுழைவாயிலுமான குமுளிக்கு அருகே உள்ளது. சேரன் செங்குட்டுவன் இமயமலையில் இருந்து கல்லெடுத்து வந்து பத்தினி தெய்வமாகிய கண்ணகிக்கு கட்டிய இந்த மங்களாதேவி கண்ணகி கோயில் மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. வருடா வருடம் சித்ரா பவுர்ணமி நாளில் இக்கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு தனியாக ஆலயம் எழுப்பப்பட்டுள்ள இடம் தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள சனீஸ்வரன் ஆலயம். சனி தோஷம் உள்ளவர்கள் என்று இங்கு பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். தொழில் வளர்ச்சி பெருகவும், தோஷங்கள் நீங்கவும் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
தேனிக்கும் உத்தமபாளையத்திற்கும் இடையே உள்ள சின்னமனூரில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் ஆலயம். இங்கு வைக்கப்பட்டுள்ள மூலவர் சிலை மிகவும் பிரசித்தி வாய்ந்த ஒன்று. இங்குள்ள மூலவர் சிலையை நாம் எப்படிப்பட்ட உயரத்தில் நின்று பார்த்தாலும் நம் உயரத்திற்கு ஏற்ப அந்த லிங்கம் மாறி காட்சி தருவதாக பக்தர்களால் பரவலாக நம்பப்படுகிறது. நீங்கள் உட்கார்ந்து பார்த்தாலும் அந்த லிங்கம் உங்கள் உயரத்திற்கு ஏற்ப காட்சியளிப்பது போலவும், நின்று பார்த்தாலும் மூலவர் உங்கள் உயரத்திற்கு ஏற்ப காட்சியளிப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் இந்த ஆலயத்தின் மிகச் சிறப்பு.
தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் இடையே உள்ள ஊர் தான் உத்தமபாளையம். இங்கு உள்ள காளாத்தீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் அங்குள்ள மக்களுக்கு ஞானாம்பிகை கோவில் என்று சொன்னால் தான் தெரியும். வெகு நாட்களாகவே இக்கோவிலில் அம்பிகை வாசம் இல்லாமல் இருந்ததாம். பின்னர் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், முல்லையாற்றில் அம்பிகை மிதந்து வருவதாகக் கூறவே அதற்குப் பின்பு தான் ஞானாம்பிகை சிலை நிறுவப்பட்டதாம். இங்குள்ள சிவபெருமானை வழிபட்டால் காளஹஸ்தி சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இக்கோவில் தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது. தாய் சேய் நலன் வேண்டுபவர்கள் இக்கோவிலில் அதிகமாக தரிசனம் செய்வது வழக்கம்.
உத்தமபாளையத்தில் இருந்து கம்பத்திற்கு செல்லும் வழியில் அனுமந்தன்பட்டியில் உள்ளது அனுமந்தராய பெருமாள் கோவில். அனுமனுக்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று. சனிக்கிழமை தோறும் இன்று நடைபெறும் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. மேலும் இங்கு நடைபெறும் அனுமன் ஜெயந்தி மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் வழியில் வீரபாண்டியில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் கோவில். தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களிலே எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கோவில் என்றால் இந்த வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் தான். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் அவர்களை காத்தருளும் வல்லமை இந்த கௌமாரிக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. சித்திரை மற்றும் வைகாசி மாதத்தில் எட்டு நாட்கள் நடைபெறும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் அக்னி சட்டி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள் கூட தன் உயிரை மீட்டு தந்தால் தன் ஆயுள் இருக்கும் வரை ஆயுள் சட்டி எடுப்பதாக வேண்டிக்கொண்டு தன் உடலில் உயிர் இருந்து நடமாட்டம் இருக்கும் வரை கௌமாரி அம்மனுக்கு வேண்டுதல் செய்வது இக்கோவிலில் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்று.
தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் கைலாச பட்டி என்ற ஊரில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கைலாசநாதர் கோவில். மலையின் மீது ஏறி கோவிலின் அழகை பார்க்கும்போது ஒட்டுமொத்த ஊரின் அழகையும் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்கு நடைபெறும் கிரிவலம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. இருபுறமும் பசுமையான காடுகள் சூழ நடந்து சென்று மலை மேல் அமைந்திருக்கும் கைலாசநாதரை தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி.
இப்படி எண்ணற்ற கோவில்கள் தேனி மாவட்டம் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. தாயின் சக்தி சேய்க்கும் நிரம்பி வழிவதைப் போல மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தேனி மாவட்டத்துக்கும் கோவில் நகரம் என்று சொல்லிக் கொள்வதில் சிறு பங்கு உள்ளதுதானே! ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் நிச்சயமாக தேனி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களை தரிசித்து மகிழலாம்!